நெல்லை வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முன்பாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் 09.04.25 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொழிலாளர்களை அலட்சியப்படுத்தும் போக்கை கண்டிப்பதாகக் கூறி, மாநிலம் தழுவிய இயக்கத்தின் ஒரு பகுதியாக, நெல்லை மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நெல்லையின் பாளையங்கோட்டையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு மாவட்டச் செயலாளர் கணேசன், ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் சங்கரபாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் துர்க்கை முத்து, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர், தொழிலாளர் நலன் சார்ந்த மனுக்களுக்கு அதிகாரிகள் முறையாக பதிலளிக்க வேண்டும். சிறு குறு தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பி.எப். தொகையை முறையாக செலுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் டிஏ-வுடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின்னர் இதுகுறித்த கோரிக்கை மனுவை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் அளித்தனர்.