அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக மோடி அரசாங்கம் தொடர்ந்து நடத்துகிற போர், இப்போது, அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலரான இந்திய உச்ச நீதிமன்றத்துடன் மோதலுக்கு இட்டுச் சென்றுள்ளது. குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உச்ச நீதிமன்றம் “ஒரு சூப்பர் நாடாளுமன்றம்” போல செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, மூர்க்கத்தனமாக இழிவுபடுத்துவதன் வெளிப்பாடாக உள்ளது. மேலும், “உச்ச நீதிமன்றத்திற்கு முன்பு நிலுவையில் உள்ள எந்த விஷயத்திலும் முழுமையான நீதி வழங்குவதற்குத் தேவையான எந்தத் தீர்ப்பையும் ஆணையையும் பிறப்பிக்கும்” அதிகாரத்தை அதற்கு வழங்குகிற, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 142 அய் ஒரு ‘அணு ஆயுத ஏவுகணை’ என்று தன்கர் விவரித்துள்ளார். மேலும் இந்த அணு ஆயுத ஏவுகணை, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைத் தாக்கும் பொறுப்பற்ற அதிகாரத்தின் கைகளில் உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்! அரசாங்கத்துக்கு ஆதரவான டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழும் கூட தனது தலையங்கத்தின் மூலம் தன்கரின் கருத்துகளை தீவிரமாக விமர்சித்து, அதை முற்றிலும் புறக்கணிக்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொண்டது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தால் உறுதிபடுத்தப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களையே சிதைக்கும் தன்கரின் அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பான விமர்சனங்களை உச்ச நீதிமன்றம் வழக்காக எடுத்துக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். டைம்ஸ் ஆஃப் இந்தியா தலையங்கம் கூறியது போல, “இது அசாதாரணமானது. இங்கே ஒரு அரசமைப்புச் சட்டப் பதவியில் இருப்பவர், நாட்டினுடைய உச்ச நீதிமன்றத்தின் அடிப்படை செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என வரையறுக்கும் அரசமைப்புச் சட்ட விதிகளை விமர்சிக்கிறார். இங்கே நம்மால் எண்ண விரும்புவதை விட அதிக முறைகேடான நிகழ்வுகள் நடக்கின்றன.” தன்கரின் கருத்துகள் எதேச்சையாக சொல்லப்பட்டவையல்ல. மாநிலங்களவை பயிற்சியாளர் குழுவினரிடம் உரையாற்றும் போது, நீதித்துறையின் பாத்திரம் மீதான விரிவான தாக்குதலின் ஒரு பகுதியாக இந்த விமர்சனங்களை அவர் முன்வைத்துள்ளார். குடியரசு துணைத் தலைவரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் தாக்குதல், இப்போது நீதித் துறைக்கு எதிரான சங்கிப் படையணியின் எதிர்ப்பியக்கமாக வளர்ந்துள்ளது.
இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் கூட்டாட்சி சமநிலையை பராமரிப்பதிலும், (அரசாங்கத்தை) நிர்வகிப்பவர்களின் மூர்க்கத்தனமான தாக்குதலில் இருந்து அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதிலும் உச்சநீதிமன்றத்தின் பங்கு மய்யமானதாகும். (அரசாங்கத்தை) நிர்வகிப்பவர்கள் அரசமைப்புச் சட்டத்தை ஒவ்வொரு முறை மீறும் போதும் அதற்கு மவுனமாக ஒப்புதல் அளிக்கும் இணக்கமான, அடக்கமான உச்ச நீதிமன்றத்தையே மோடி அரசாங்கம் விரும்புகிறது. 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்தது போன்ற மோடி அரசாங்கத்தின் வெட்கக்கேடான ஒருசில அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அவ்வப்போது தாமதமாக, பகுதியளவு ரத்து செய்தது தவிர, மோடி அரசாங்கத்தின் முதல் இரண்டு ஆட்சிக் காலங்களில் உச்ச நீதிமன்றம் பெரும்பாலும் எவ்விதமான மோதலையும் தவிர்த்தே வந்தது. ஆனால் சில அண்மைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மோடி அரசாங்கத்தை ஓரளவு அச்சுறுத்தியுள்ளன. ‘புல்டோசர் (அ)நீதி’க்கு எதிரான தீர்ப்புகள், உருது மொழியின் அரசமைப்புச் சட்டத் தகுதியை உறுதிப்படுத்தியது, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான பாத்திரத்தை கண்டித்தது போன்றவை, (அரசாங்கத்தை) நிர்வகிப்பவர்களின் தாக்குதலுக்கு ஓரளவுக்கு தாமதமான எதிர்ப்பை நீதித்துறை காட்டும் என்பதற்கான வரவேற்கத்தக்க சாத்தியத்தை குறிப்பிடுகின்றன.
இந்தத் தீர்ப்புகளில் மிகவும் குறிப்படத்தக்கது, தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு டஜன் சட்ட மசோதாக்களை பல ஆண்டுகளாக தாமதப்படுத்திய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒருதலைபட்சமான நடவடிக்கைக்கு எதிராக வந்துள்ளது. (ஆளுநரின் இந்த நடவடிக்கை) தமிழ்நாடு சட்டமன்றத்தின் சட்டமியற்றும் உரிமைகளையும், சட்டமியற்றும், நிர்வாகப் பொறுப்புகளை நிறைவேற்றும் ஒரு செயல்படும் அரசாங்கத்தைப் பெறுவதற்கான தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும் முற்றிலும் வலுவிழக்கச் செய்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் அதன் சிறப்பு நீதித்துறை மீளாய்வு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்ததாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. மேலும் ஒப்புதலை எதிர்பார்த்து நிலுவையில் இருக்கும் சட்ட மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் மூன்று மாத காலக்கெடுவையும் நிர்ணயித்தது. பல வகைகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அரசமைப்புச் சட்டக் கட்டமைப்பை மோடி அரசாங்கம் துணிச்சலாக சீர்குலைப்பதற்கு எதிரான மிக மிக வலுவான கண்டனத்தை குறிக்கிறது. இப்போது மோடி அரசாங்கம், உச்ச நீதிமன்றத்தின் இந்த நீதித்துறை மீளாய்வு அதிகாரங்களையும் கூட பறிக்க விரும்புகிறது. இதன் மூலம் (அரசாங்கத்தை) நிர்வகிப்பவர்கள் எந்தவொரு நிறுவன சோதனை அல்லது கண்காணிப்பும் இல்லாமல், தாங்கள் விரும்புகிற எந்த சட்டத்தையும் நிறைவேற்ற முடியும்; தாங்கள் விரும்புவது போல தன்னிச்சையாக செயல்படவும் முடியும்.
குடியுரிமை திருத்தச் சட்டம், ஜம்மு காஷ்மீரின் மாநிலத் தகுதியை நீக்கம் செய்தது, நீக்கம் செய்யப்பட்ட விவசாயச் சட்டங்கள் போலவே, பரவலான எதிர்ப்புகளை முற்றிலும் புறக்கணித்து நிறைவேற்றப்பட்ட அண்மைய வக்ஃப் திருத்தச் சட்டமும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை குணாம்சம் மற்றும் அதில் உறுதிபடுத்தப்பட்டுள்ள சிறுபான்மையினரின் சம உரிமைகள் மீதான மற்றொரு கடுமையான தாக்குதலாகும். இந்தத் தீய சட்டத்தின் எதிர்காலத்தை இப்போது கணிக்க முடியாத போதிலும், உச்ச நீதிமன்றம் முன்வைத்துள்ள கேள்விகள் அரசாங்கத்திற்கு ஆழ்ந்த அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளன. தற்போதுள்ள எந்தவொரு வக்ஃப் சொத்துகளையும் ரத்து செய்யாமல் இருக்கவும் வக்ஃப் வாரியங்களில் எந்தவொரு இந்துவையும் நியமிக்காமல் இருக்கவும் தற்காலிக உறுதிமொழிகளை அரசாங்கம் வழங்கி, கால தாமதம் செய்துள்ளது. ஆனால், அரசாங்கம் தற்காலிகமாக பின்வாங்கிய போதிலும் கூட, ஜகதீப் தன்கர், நிஷிகாந்த் துபே மற்றும் அவர்களின் கூட்டாளிகள் போன்றவர்கள் இந்த இடைவெளியை முழுமையாக பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்திற்கு எதிரான ஒரு நச்சுப் பரப்புரையை முன்னெடுத்து வருகின்றனர். ஜார்க்கண்டின் அவப்பெயர்பெற்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் வெறுப்பு வெறியருமான நிஷிகாந்த் துபே, ‘நாட்டின் அனைத்து உள்நாட்டுப் போர்களுக்கும்’ தற்போதைய இந்திய தலைமை நீதிபதியே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளார். இதனை நாடாளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட கருத்து என்று பாஜக தலைவர் சாதகமாக விளக்கமளித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள், மோடி ஆட்சி மற்றும் சங்கி-பாஜக படையணியின் பாசிச மூர்க்கத்தனத்தை தடுத்து நிறுத்த இந்திய மக்களின் பெரும் பிரிவு கொண்டிருக்கும் வலுவான எண்ணத்தை பிரதிபலிக்கின்றன. பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு இனி பாதுகாப்பு இல்லை என்பதை படிப்படியாக உணர்ந்த நிலையில், மக்கள் அரசமைப்புச் சட்டத்தை சுற்றி ஒன்று திரண்டனர். மேலும் பாஜக மற்றும் அதன் என்டிஏ கூட்டணியினரின் (நாடாளுமன்ற உறுப்பினர்) எண்ணிக்கையை கட்டுப்படுத்த மக்கள் தங்களின் வாக்குகளை விவேகமாக பயன்படுத்தினர். உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக பாஜக நடத்திய எவ்வித தடைகளுமற்ற பரப்புரை, அரசமைப்புச் சட்டம் மற்றும் குடியரசின் அடிப்படை குணாம்சம், அடித்தளம் மீதான மோசமான அச்சுறுத்தல் பற்றி மக்களை மேலும் எச்சரிக்க வேண்டும். வரலாற்று ரீதியாக சுதந்திரமான நீதித்துறைக்கு பெயர்பெற்ற அமெரிக்காவிலும் கூட, நீதித்துறையை அடக்குவதற்கான திட்டமிட்ட தாக்குதலின் அறிகுறிகளை இப்போது காண்கிறோம். உலகம் முழுவதும் உள்ள பாசிச ஆட்சிகள் எப்போதும் ஒரு கீழ்ப்படிந்த நீதித்துறையின் ஆதரவுடன் தான் உயிர் பிழைத்திருந்தன. இந்தியாவில் ஆட்சியை நிர்வகிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் பாசிச ஆட்சியால் கைப்பற்றப்பட்டு, அப்பட்டமான அச்சம் மிகுந்த சூழல் மேலும் மேலும் அதிகரித்த மக்களை தன்-கட்டுப்பாட்டுக்கும் சரணடைதலுக்கும் உட்படுத்தும் இந்த நேரத்தில், சூறையாடும் பாசிச புல்டோசரை தடுத்து நிறுத்த இந்திய மக்களாகிய நாம், நமது முழுமையான ஆதரவை உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கிட வேண்டும்.