நாடு முழுவதும் கடும் வெயிலின் தாக்கத்தால் இந்த ஆண்டு வெப்ப அலை வீசும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த பின்னணியில் தொழிலாளரின் உயிர், உடல் நலத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில், பிரதம மந்திரி, ஒன்றிய தொழிலாளர் அமைச்சர்,தேசிய பேரிடர் மேலாண்மை வாரிய தலைவர் ஆகியோருக்கு விவரமான கடிதங்கள் அனுப்பி உள்ளது.
உலக பருவநிலை அமைப்பானது இந்தியாவில் இந்த ஆண்டு வெப்பம் தொழில் மயமாக்கத்திற்கு முந்திய காலத்தை விட 1.5° செல்சியஸ் அதிகரிக்கும் என கணித்துள்ளது. ஹீட் வாட்ச் என்ற அமைப்பு 2024 ஆம் ஆண்டில் “வெப்ப பக்கவாத தாக்கம்” பற்றிய ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்ற ஆண்டின் மே – ஜூன் காலகட்டத்தில் மட்டும் 733 பேர் உயிரிழந்துள்ளனர். மே மாதத்தில் மட்டும் பீஹார், உ பி மாநிலங்களில் தேர்தல் பணிக்காக சென்ற அலுவலர்கள் 24 பேர் உட்பட 74 பேர் வெப்ப பக்கவாத நோய் பாதிப்பால் 48 மணி நேர காலத்துக்குள் உயிரிழந்துள்ளனர்.
வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்யும் தொழிலாளருக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகளை அங்கீகரித்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகிறது. ஒன்றிய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள், மாநில அரசின் அங்கன்வாடி, ஆஷா மற்றும் இதர திட்டங்களில் பணி புரியும் தொழிலாளர் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படும் ஆபத்துகள் அதிகம் இருக்கின்றன. இத்தகைய தொழிலாளருக்கு பணியிடத்தில் நிழல் கூரை கிடையாது. தாகத்தை தணித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் இருக்காது.அவசர முதலுதவி செய்வதற்கான ஏற்பாடுகள் இருக்காது. எனவே, இது போன்ற தாக்குதலுக்கு இலக்காகும் தொழிலாளரை குறிப்பாக இத்தொழிலில் ஈடுபடும் சமூகத்தின் பின் தங்கிய பிரிவு மக்களை, தாக்குதலுக்கு எளிதில் இலக்காகும் பெரும் எண்ணிக்கையிலான பெண் தொழிலாளரை பாதுகாக்க அரசாங்கம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
ஒன்றிய அரசின் பொதுச் சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பருவநிலை மாற்றத் திட்டம் வெளியிட்டுள்ள ஆலோசனை அறிக்கையில் சாதாரண மனித உடலில் வெப்பநிலை 36.4° செல்சியஸ் முதல் 37.2° செல்சியஸ் வரை ( 97.5° பாரன்ஹீட் முதல் 98.9° பாரன்ஹீட் வரை) இருக்கும் என்றும் நீண்ட நேரம் வெயிலிலோ அல்லது வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் கட்டிடத்திற்குள்ளேயோ வேலை செய்யும் போது வெப்ப அழுத்தம் ஏற்படலாம். அதன் விளைவாக பல்வேறு உடல் நலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதாவது தசைப் பிடிப்பு, அயற்சி, மயக்கம்,வெப்ப பக்கவாதம் போன்ற நோய்களை ஏற்படுத்தலாம். ஏற்கனவே இதய நோய்கள், மூச்சுத் திணறல், சிறுநீரக நோய்களின் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்களுக்கு வெப்ப அழுத்தம் காரணமாக நோய்கள் மேலும் தீவிரமடையலாம். பாதிப்புகளை மருத்துவ அவசர நிலையாக கருதி உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை கருத்துரு வலியுறுத்துகிறது.
மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் நேரத்தில் நேரடியாக சூரிய ஒளியின் கீழ் நடமாடுவதையும் கடுமையான வேலை செய்வதையும் தவிர்க்கலாம்.
வேலை அளிப்பவரும் தொழிலாளியும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
வேலை செய்யும் இடங்களில் பருகுவதற்கு குளிர்ந்த நீர் வைக்கப்படுவதோடு ஒவ்வொரு 20 நிமிடமும் தொழிலாளர் அதை குடிப்பதற்கு நினைவுபடுத்த வேண்டும்.
சூரிய ஒளிக்கு கீழ் நேரடியாக நின்று வேலை செய்வதை தொழிலாளர் தவிர்க்க வேண்டும்.
தொழிலாளர் வேலை செய்யும் இடங்களில் நிழற்குடை / தற்காலிக கூரை அமைத்துத் தர வேண்டும்.
மிகுந்த உழைப்பு தேவைப்படும் பணிகள், திறந்த வெளியில்தான் செய்தாக வேண்டிய பணிகள் போன்றவற்றை வெயில் நேரத்தில் தவிர்த்து விட்டு குளிர்ந்த மாலை நேரங்களில் செய்கின்றவாறு திட்டமிட வேண்டும்.
திறந்த வெளியில் செய்யும் பணிகளுக்கு, ஒவ்வொரு மணி நேர உடல் உழைப்புக்குப் பிறகும் 5 நிமிடம் ஓய்வு கொடுக்க வேண்டும்.
ரேடியோ, தொலைக்காட்சி, பத்திரிக்கை மூலமாக அன்றைய தட்பவெப்ப நிலை நிலவரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இந்திய பருவநிலை துறையின் இணையதள முகவரியிலும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.https://mansam.imd.gov.in/
எல்லோரும் சூழ்நிலைக்கு இயைந்து வருவதை உறுதி செய்ய வேண்டும். ஆரம்ப வேலை நாட்களில் 3 மணி நேரம் என்ற அளவில் வேலையைத் துவங்கி படிப்படியாக கூட்ட வேண்டும்.
கூடுதல் தொழிலாளரை பணிக்கமர்த்தி பணிச்சுமையை குறைக்க வேண்டும்.
வெப்பத்தினால் வரும் நோய்கள் குறித்தும் வெப்ப அழுத்தத்தின் விளைவு அறிகுறிகள் குறித்தும் தொழிலாளருக்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஒருவர் தனக்கு ஏற்படும் சொந்த அறிகுறிகளை காணும் வாய்ப்பு குறைவு என்பதால் இருவர் கொண்ட தொழிலாளர் குழு ஏற்படுத்தி (buddy system)ஒருவர் மற்றொருவர் உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனித்துச் சொல்வதற்கான ஏற்பாடு வேண்டும்.
பயிற்சி பெற்ற முதலுதவி செய்பவர்கள் இருப்பதையும் வெப்பத்தின் விளைவாக ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அவசரகால பொறியமைவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களும் வேறு நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொண்டிருப்பவர்களும் வெயில் நேரத்தில் வேலை செய்வது குறித்து மருத்துவரின் ஆலோசனையைப் பெறவேண்டும்.
வெயிலில் வேலை செய்ய வேண்டிய சூழலில் ஒருவர் இலகுவான, முழு கை வரையிலான துணியை அணிய வேண்டும். தலையில் நேரடியாக வெயில்படா வண்ணம் மறைத்துக் கொள்ள வேண்டும்.
பணிபுரியும் இடத்தில் வெப்ப அளவை காட்டும் வெப்பமானிகளும், வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்புகளும் இடம் பெறச் செய்ய வேண்டும்.
கடுமையான வெப்பத்தின் விளைவுகளை குறித்து வேலை அளிப்பவர், தொழிலாளர் என இருதரப்புக்கும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். தற்காத்து கொள்ளும் பயிற்சி தர வேண்டும்.
வெப்ப அளவு குறித்தும் வெப்பநிலை உயர்வு குறித்த முன்னெச்சரிக்கையும் வேலை செய்யும் இடங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
பேரிடர் மேலாண்மை சட்டத்தின் நோக்கம் குறித்து உச்ச நீதிமன்றம், ஸ்வராஜ் அபையன் எதிர் இந்திய அரசு வழக்கில் (2016 7 SCC 498)கீழ்க்கண்டவாறு தெளிவுபடுத்தி உள்ளது.
“பேரிடர் மேலாண்மை சட்டத்தின் நோக்கமானது சட்டத்தை வரைவது, அமலாக்குவது, கண்காணிப்பது மாத்திரம் இன்றி பேரிடரின் விளைவுகளை முன் தடுப்பதும் அதன் விளைவான இன்னல்களை தவிர்ப்பதும் ஆகும்”
அது மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றம் 2012 9 SCC 251 தீர்ப்பில் கோவிட் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் அளிப்பதை பேரிடர் மேலாண்மை அமைப்பு அரசுக்கு பரிந்துரைக்க வேண்டியது சட்டப்படியான அதன் கடமை என்றும் சொல்லி உள்ளது.
கடும் வெயிலில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்களின் நலன் சம்பந்தமாக ஏஐசிசிடியு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கர்நாடக மாநில அரசாங்கத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அத்தனையும் கறாராக நடைமுறைப்படுத்த வேண்டும் எனச் சொல்லி உள்ளது.
இந்த வெளிச்சத்தில் அரசாங்கம் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
1) வெப்ப அலையை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பேரிடராக அங்கீகரிக்க வேண்டும்.
பேரிடர் மேலாண்மை அதிகார அமைப்பு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உரிய சுற்றறிக்கை /வழிகாட்டுதல்களை அளிக்க வேண்டும்.
2) தட்பவெப்ப நிலை மாற்றம் பற்றிய அரசாங்கத்தின் பல்வேறு அறிவுறுத்தல்களை கறாராக அமல்படுத்த வேண்டும்.
3) தொழிலாளரின் உடல்நலத்தை பாதுகாத்திடுக!
வெப்பத் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயமில்லாதவாறு வேலை நேரத்தை குறைக்க வேண்டும். அதே நேரத்தில், தொழிலாளருக்கு அதனால் வருமான இழப்பு இருக்கக் கூடாது.
4) தொழிலாளருக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நிழற்கூரை, ஓய்வறை, குளிர்ந்த தண்ணீர் ஆகியவை பணியிடங்களில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர் வாழ்வாதாரத்துக்காக வருமானம் ஈட்டுவதோடு சமரசம் செய்து கொள்ளக் கூடாது. அதன் மூலம் அவர்களின் பாதுகாப்பான கவுரவமான வாழ்க்கை உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.
5) குடியிருப்பு பகுதிகளில் தொழிலாளரை பாதுகாப்பது அவசியம்.
தேசிய பேரிடர் மேலாண்மை அதிகார அமைப்பு, தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை உடனடியாக வழங்க வேண்டும்.
6) பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவு 12 படி வெப்ப அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதும் அதுபோல் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிப்பதும் சட்டப்படியான கடமையாகும். பேரிடர் மேலாண்மை அமைப்பு அதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
7) வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த நிவாரணம்.
கடனை திருப்பிச் செலுத்துவதிலிருந்து நிவாரணமும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டவருக்கு புதிதாக கடன் வழங்கப்படவும் வேண்டும்.
8) வெப்பம் தொடர்பான அவசர சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு ஏதுவாக மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
வெப்ப தாக்கத்தின் விளைவுகளால் ஏற்படும் நோய்களுக்கு மருத்துவம் செய்ய உரிய பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இருப்பது அவசியம். ஆரம்ப சுகாதார நிலையங்கள் துவங்கி மாவட்ட மருத்துவமனை வரை தயார் நிலையில் இருக்க வேண்டும். மருத்துவமனைகளில் குளிரூட்டும் அறைகள் இருக்க வேண்டும். மின்தடை ஏற்பட்டு விடாதவாறு பார்த்துக் கொள்ள உரிய பொறியமைவு தேவை. அவசியமான மருந்து,மாத்திரைகள் கையிருப்பில் இருக்க வேண்டும்.வெப்பத் தாக்கத்தினால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்த்திட வேண்டும்.
9) தண்ணீரும் நிலத்தடி நீரும் போதுமான அளவு இருப்பதையும் அவை குடிசைப் பகுதி மக்களுக்கும் பயன்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
நிலத்தடி நீர்மட்டம் காக்கப்பட வேண்டும். மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் அவசியம். இருப்பில் உள்ள தண்ணீர் அனைவருக்கும் சரிசமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
10) தனியார் துறையிலும் அமல்படுத்துக!
கடும் வெப்பம் நிலவுகிற நேரங்களில் தொழிலாளரின் பாதுகாப்புக்கு வேலை அளிப்பவர் பொறுப்பாக்கப்பட வேண்டும். தனியார் துறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்துவதை கண்காணிப்பதற்கான பொறியமைவு இருக்க வேண்டும். குறைபாடுகள் இருந்தால் தொழிலாளர் நிர்வாக நடவடிக்கை பற்றிய அச்சமின்றி புகார் அளிக்க வழிவகை இருக்க வேண்டும். கடும் வெப்ப காலங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி வேலை வாங்கப்படுமானால் அந்த வேலை அளிப்பவருக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். வேலை அளிப்பவரின் அசிரத்தை காரணமாக தொழிலாளி நோய்வாய் பட்டால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
வெப்ப அலையிலிருந்து தொழிலாளரை பாதுகாக்க ஏ ஐ சி சி டி யு ஆட்சியாளர்களுக்கு கடிதம் எழுதியும், நீதிமன்ற நிவாரணத்தை நாடியும் தொழிலாளருக்கும் வேலையளிப்பவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறது. பருவநிலை மாற்றத்தை தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு அரசு, நிறுவனங்களுடையதே.
விழிப்புணர்வு பிரச்சாரங்களால் போராட்டங்களால் உலகை மாற்றுவோம்!
தமிழாக்கம்- தேசிகன்