கட்டுப்படுத்தப்பட்ட அல்லது தெரிந்தெடுக்கப்பட்ட வாக்குரிமையின் இருண்ட அறிகுறிகள்

தோழர்.திபங்கர்

ஜூன் 24, 2025 அன்று திடீரென தொடங்கப்பட்டு பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆர்) இரண்டாவது வாரத்தில் இருக்கிறோம். கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சிறப்பு தீவிர திருத்தம் நடப்பதை அனைவரும் அறிவோம். இது பாதிதான் உண்மை. இப்போதைய இந்த சிறப்பு திருத்தம் முந்தைய அனைத்து திருத்தங்களிலிருந்தும் அடிப்படையில் வேறுபட்டது. நடந்து கொண்டிருக்கும் தீவிர சிறப்பு திருத்தம், விருப்பமுள்ள, விண்ணப்பிக்கும் வாக்காளர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலை முழுமையாக மாற்றியமைக்கவழிவகை செய்கிறது.

திரும்ப வந்துள்ள துயரம்

சிறப்பு திருத்தத்தின் திடீர் அறிவிப்பும் அதன் அப்பட்டமான வெளிப்படையற்றத்தன்மையும் 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் துயர நினைவுகளை மீண்டும் கிளறிவிட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ‘நோட்பந்தி’ என இந்தியில் பிரபலமாக அழைக்கப்பட்டது போல, பீகார் மக்கள் சிறப்பு தீவிர திருத்தத்தை ‘வோட்பந்தி’ என்று அழைப்பது ஒன்றும் அதிசயமில்லை. ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேடு அமுல்படுத்தப்பட்ட போது அசாம் மக்கள் அனுபவித்த துயர அம்சங்கள் இந்த சிறப்பு திருத்தத்திலும் உள்ளன.

பீகாரில் 5 கோடி வாக்காளர்கள், தங்கள் குடியுரிமை மற்றும் வாக்களிக்கும் உரிமையை நிரூபிக்க வேண்டுமென கடுமையான “தகுதிச் சோதனைக்கு” ஆளாக்கப்பட்டுள்ளனர்.

எப்படி ஆனபோதும், அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி)ஒரு திடீர் நடவடிக்கை அல்ல. அது இந்திய உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இருந்தது. 3 கோடி 30 லட்சம் விண்ணப்பதாரர்களை சரிபார்க்க ஆறு ஆண்டுகள் ஆனது, இரண்டு சுற்றுகள் தேவைப்பட்டது; இப்போதும் கூட அசாம் அரசு இருபது லட்சத்துக்கும் பக்கமான நிராகரிப்புகள் / நீக்கல்களுடன் வெளிவந்துள்ள என்.ஆர்.சியை ஏற்கத் தயாராக இல்லை. பீகாரிலோ அனைவரிடமிருந்தும் நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களும் அதனுடன் சமர்பிக்கப்படும் ஆவணங்களும் ஒரு மாத காலத்திற்குள் சேகரிக்கப்பட உள்ளன. கேள்விக்குரிய மற்றொன்று இந்த சரிபார்ப்பை மேற்கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மாதமாகும். ஜூலையில் பருவமழை தீவிரமாக இருக்கும் என்பதோடு வடக்கு பீகாரின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கி பருவகால இடம்பெயர்வு உச்சத்தில் இருக்கும். இந்த திடீர் நடவடிக்கையின் தலைசுற்றவைக்கும் எண்ணிக்கையும் சூழ்நிலைகளும் இது ஒரு கட்டமைப்பு கொடுங்கனவாக இருக்கப்போகிறது என்பது தெளிவு.

மேலும், வாக்காளர் தகுதிக்காக இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள 11 ஆவணங்களின் பட்டியல், அதிக எண்ணிக்கையிலான பீகார் வாக்காளர்களுக்கு இந்த தடைதாண்டும் ஓட்டப் பந்தயம் வெல்ல முடியாததாக இருப்பதுமாகும்.பொதுவாக, மக்களிடமுள்ள ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, வேலை அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்காது. அதற்கு பதிலாக, சாமானிய பீகார் மக்களிடம் அரிதாகவே இருக்கும் பிறப்புச் சான்றிதழ், மெட்ரிகுலேஷன் சான்றிதழ், நிலம் அல்லது வீட்டு உரிமை ஆவணங்கள், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் வேண்டும் என்கிறது. பின் எப்படி அவர்களால் தங்கள் தகுதியை அல்லது குடியுரிமையை நிரூபிக்க முடியும்?

பீகார் மக்களின் அதிக அளவிலான புலப்பெயர்வு, பிரச்சனையை இன்னும் மோசமாக்குகிறது. ஏறக்குறைய ஒவ்வொரு குடும்பத்திலும் மாநிலத்திற்கு வெளியே படிக்கும் அல்லது வேலை செய்யும் ஒரு உறுப்பினர் இருக்கிறார். கோவிட் -19 பெருந்தொற்றின் போது, 2020 ஆம் ஆண்டு ஊரடங்கில் ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தே ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த பிகாரிகளின் துயரமிக்க காட்சியை கண்டோம். இப்போது இந்த புலம்பெயர்ந்த பிகாரிகளில் பலர் பீகாரில் ‘நிரந்தரமாக வசிக்கவில்லை’ என்ற அடிப்படையில் திருத்தப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.கோடிக்கணக்கான மக்களை பீகாருக்கு வெளியே வாழ்வாதாரத்தைத் தேட நிர்ப்பந்திக்கும் கொடூரமான யதார்த்தம் இப்போது அவர்களை வாக்காளர் பட்டியல் காரணங்களுக்காக அந்நியர்களாக ஆக்குகிறது. டெல்லியில் புலம்பெயர்ந்த பிகாரி தொழிலாளரால் கட்டப்பட்ட குடிசைப்பகுதிகள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்படும் நிலையில், பீகாரில் தயாரிக்கப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் அவர்களை அவர்களின் சொந்த மாநிலத்திலேயே வெளியேற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வெகுமக்கள் வாக்குரிமை பறிக்கப்படும் பூதமே இப்போது மக்களை பிடித்தாட்டும் மறுக்க முடியாத யதார்த்தமாக உள்ளது. தேர்தல் ஆணையம் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் வயது வந்தோர் மக்கள் தொகையை விடவும் அதிகமான எண்ணிக்கை கொண்ட வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. இந்த புள்ளிவிவர மோசடியை விளக்க முடியாத தேர்தல் ஆணையம், இப்போது அதை சமப்படுத்தும் நோக்கில் ஒரு தவறும் செய்யாத கோடிக்கணக்கான வாக்காளர்களை நீக்கி சரிசெய்ய பீகாரை தேர்ந்தெடுத்திருக்கிறதா?

அடிப்படையான சீர்குலைவு

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, பீகார் சிறப்பு தீவிர திருத்த வடிவமைப்பு மாதிரி, வரும் மாதங்களில் நாடு முழுவதும் அமுலாக்கப்படும். அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதிலிருந்தும், 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் இயற்றப்பட்டதிலிருந்தும், இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படை சீர்குலைவைத்தான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பீகாரில், ‘வாக்குமறுப்பு’ உந்துதலால் தூண்டிவிடப்பட்டுள்ள குழப்பங்களுக்கு மத்தியில், தள்ளாடிக்கொண்டிருக்கும் இந்திய ஜனநாயகத்திற்கு குறைந்தபட்சம் மூன்று எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன.

குடியுரிமையை நிரூபிக்கும் பொறுப்பு அரசிடமிருந்து குடிமக்களிடம் மாற்றப்படுகிறது. அதிகாரம் பெற்ற வாக்காளர் சந்தேகத்திற்குரிய வாக்காளராக மாறியுள்ளார்; இந்த சந்தேகத்தை சரிசெய்து, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் பொறுப்பு, சந்தேகத்திற்குரிய, பற்றாக்குறை ஆவணங்களை உடைய வாக்காளரைச் சார்ந்தது. இது குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி என்ற இயற்கை நீதியின் அடிப்படைக் கோட்பாட்டை தலைகீழாகப் புரட்டிப் போடுவதாகும். இது ஒரு உருவாக்கப்பட்டுவரும் மிகப் பெரிய பேரழிவாகும்.

வாக்குரிமை மறுக்கப்பட்ட வகையினம்

ஒரு தகுதியான வாக்காளராக ஆவதற்கு ஒரு குடிமகனாக இருப்பதே முன்நிபந்தனை என்கிறது இந்திய தேர்தல் ஆணையம். அந்த தகுதியை சரிபார்ப்பதுதான் சிறப்பு தீவிர சரிபார்ப்பு நடவடிக்கை என்றும் தேர்தல் ஆணையம் சொல்கிறது. 2003 பட்டியலில் உள்ள வாக்காளர்கள் இந்தியாவின் குடிமக்களாக கருதப்படுகிறார்கள். ஆக அவர்கள் எல்லாம் தகுதியுள்ள வாக்காளர்கள்; மற்ற அனைவரும் அதை நிரூபித்தாக வேண்டியவர்கள். வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கூட ‘குடிமக்களாக’ கருதப்படுவார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொண்டாலும், இப்போது வாக்குரிமை மறுக்கப்பட்ட குடிமக்களின் நிரந்தர பிரிவை நாம் காண இருக்கிறோம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் , இந்தியாவில் கோடிக்கணக்கான இரண்டாம் தர மற்றும் முற்றிலும் நிராதரவான குடிமக்கள் இருப்பார்கள், அவர்கள் இனிமேல், அரசின் கருணையில் அல்லது அதிகாரம் பெற்ற முதல் தர குடிமக்களில் பெரும்பான்மையினரது தயவில் இருப்பார்கள். இதன் விளைவுகள் ஆபத்தானவை, வெளிப்படையானவை.

வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பது இந்திய அரசமைப்புச்சட்டம், தேர்தல் கட்டமைப்பின் அடித்தளமாக உள்ளது. பல நாடுகளில், இனம், பிரிவு, வர்க்கம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் “விலக்கப்பட்ட”, “அதிகாரமற்ற” மக்களின் பரந்த பிரிவுகள், சமமான தேர்தல் உரிமைகளைப் பெறுவதற்காக பல பத்தாண்டுகளாக போராட வேண்டியிருந்தது.

இந்தியாவில் நாம் சுதந்திரம் அடைந்ததன் மூலமும், அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதன் மூலமும் ஒரே முயற்சியில் அதை வென்றோம். இப்போது, பீகாரில், கல்விச் சான்றிதழ்கள், நில ஆவணங்களை சமர்ப்பிக்க கட்டாயப்படுத்தப்படுவதால், கட்டுப்படுத்தப்பட்ட அல்லது தெரிந்தெடுக்கப்பட்ட வாக்குரிமையின் புதிய வடிவத்தை இப்போது காண்கிறோம்.

09-07-2025 தேதியிட்ட தி இந்து; தலையங்க பக்கத்தின் தமிழாக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *