மோடி கால வெளியுறவுக் கொள்கை சர்வதேச அரங்கில் இந்தியாவின் நிலையை முழுமையாக சீர்குலைத்துள்ளது 

‘சிந்தூர் தாக்குதல்’ நடவடிக்கைக்குப் பிறகு, சர்வதேச கருத்தை இந்தியாவுக்கு சாதகமாக திரட்ட 50-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மூத்த அதிகாரிகளையும் கொண்ட நாடாளுமன்ற பிரதிநிதிகளின் ஏழு குழுவினர், 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பியுள்ளனர். பிரதிநிதிகளின் இந்த ஏழு குழுக்களில் மூன்று குழுக்களின் தலைவர்கள், அல்லும் பகலும் “தேசவிரோத சக்திகள்” என்று முத்திரை குத்தப்பட்ட, தேசிய ஜனநாயக முன்னணி அல்லாத கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாவர். பிஜேபியில் ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை; மேலும், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு எதிராக வெறுப்பு நிறைந்த நஞ்சான பேச்சுக்களை அது கொட்டித் தீர்க்கிறது; ஆனால், இந்த பிரதிநிதி குழுவினரில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த சில முஸ்லிம் உறுப்பினர்களும் இடம்பெற்றிருந்தனர். நிச்சயமாக, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மரபுகள் குறித்து மோடி ஆட்சியின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடவில்லை. சர்வதேச அளவில் சங்கடங்களை எதிர் கொள்வதிலிருந்து பிரதமரையும் அவரது மூத்த அமைச்சர்களையும் பாதுகாக்கும் முயற்சியாகவே இந்த பலகட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவினரை அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு இந்த ஆட்சி ஆளானது. இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் ஏற்பட்ட மோசமான தனிமைப்படுதல் இந்த ஆட்சிக்கு நெருக்கடியாக மாறியதே இதற்கு காரணமாகும்.

இந்த நாடாளுமன்ற பிரதிநிதிகளை உலகத் தலைவர்கள் எவ்வித உற்சாகத்துடனும் வரவேற்கவில்லை. இந்த பிரதிநிதிகள் அவர்கள் பயணம் சென்ற அந்தந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் அல்லது முக்கியமான தற்போதைய பிரதிநிதிகளுடன் பெரும்பாலும் எந்த உரையாடலையும் நடத்தவில்லை. அந்தந்த நாட்டின் முன்னாள் தலைவர்கள், இந்திய வம்சாவளி உறுப்பினர்கள், சில சிந்தனையாளர் பிரதிநிதிகளுடன் மட்டுமே அவர்களின் சந்திப்புகள் பெரும்பாலும் அடங்கியிருந்தது. ஊடக சந்திப்புகளும் கூட முக்கியமான செய்தித்தாள்கள் அல்லது ஊடகங்களில் மிகக் குறைவான அளவுக்கே செய்தியாயின. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பஹல்காமுக்கு பிந்தைய நிகழ்வுகள் குறித்து சர்வதேச கருத்தில் இந்த பயணங்கள் எந்தவித தாக்கமும் ஏற்படுத்தவில்லை. குறிப்பாக, இந்த பிரதிநிதிகள் தெற்காசியாவில் உள்ள எந்த நாட்டிற்கும் செல்லவில்லை. ஜி7-இன் தற்போதைய தலைவரும், 2025 ஜி7 உச்சி மாநாட்டின் ஏற்பாட்டாளருமான கனடா போன்ற முக்கியமான நாடும் இவர்கள் பயணம் சென்ற நாடுகளின் பட்டியலில் இல்லாதது குறிப்பிடத்தக்கது. 2023-ல் ஹர்ஜித் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவின் சந்தேகத்திற்கிடமான பங்கு குறித்து கேள்விகள் எழுப்பப்படலாம் என்பதாலேயே மோடி அரசு அந்த நாட்டை தவிர்த்திருக்கலாம்.

நிதி நடவடிக்கை பணிக்குழு -[Financial Action Task Force (FATF)]- (எஃப்ஏடிஎஃப்) வின் கண்காணிப்பு பட்டியலில் பாகிஸ்தானை மீண்டும் சேர்க்கும் மோடி அரசின் பரப்புரை இயக்கத்துக்கு மாறாக, தீவிரவாதத்துக்கான நிதியுதவி வழங்குவது குறித்து கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படாமல், பாகிஸ்தான் அண்மையில் கணிசமான வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுள்ளது. (எஃப்ஏடிஎஃப் என்பது பண மோசடியைத் தடுக்க ஜி7 நாடுகளால் நிறுவப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும். பாகிஸ்தான் அந்த கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தால், தீவிரவாதத்துக்கு நிதி உதவி வழங்குகிற வாய்ப்புகள் குறித்து பாகிஸ்தான் மீதான கண்காணிப்பு அதிகப்படுத்தப் பட்டிருக்கும்). சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 1 பில்லியன் டாலர், ஆசிய வளர்ச்சி வங்கியிலிருந்து 800 மில்லியன் டாலர் தொகுப்பு நிதி, உலக வங்கியுடன் 40 பில்லியன் டாலருக்கு கூட்டு ஒப்பந்தம் போன்ற கடன்களைப் பாகிஸ்தான் பெற்றுள்ளது. இதே காலகட்டத்தில், பாகிஸ்தான் ஐநா பாதுகாப்பு சபையின் தாலிபான் தடைக் குழுவின் தலைவராகவும், தீவிரவாதத்துக்கு எதிரான கமிட்டியின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தானுக்கிடையேயான போர் நிறுத்தத்தை தானே மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் தற்போது தொடர்ந்து கூறி வருகிறார்; மேலும், உலகம் இந்த இரு அணு ஆயுத அண்டை நாடுகளையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் நிலையில், பாகிஸ்தானை தனிமைப்படுத்துதல் என்ற மோடி அரசினுடைய வெளியுறவுக் கொள்கையின் சொல்லப்பட்ட குறிக்கோள் அப்பட்டமாக தோல்வியடைந்துள்ளது.

2014ல் தில்லியில் மோடி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, இந்தியா சர்வதேச அரங்கில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது என்று நமக்குச் சொல்லப்படுகிறது. மிக அதிகம் பயணம் செய்த இந்தியாவின் பிரதம மந்திரியாக மோடி இருக்கிறார். உலகில் இந்தியாவின் பங்கை அல்லது அந்தஸ்தை விவரிக்க இந்த அரசு “விஸ்வகுரு” (உலகத்துக்கு ஆசிரியர்) அல்லது “விஸ்வமித்ரா” (உலகத்துக்கு நண்பன்) போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறது. ஆனால் இந்தக் கூற்று முற்றிலும் வெறுமையானது. யதார்த்தத்தில், இந்த அரசு பன்னாட்டு கார்ப்பரேட் மூலதனத்திற்கு இந்தியாவின் மக்கள்தொகையை “மலிவான உழைப்பாக”வும், இந்தியாவின் நிலப்பகுதிகளையும் வளங்களையும் “மலிவான தன்மையன” என்றும் கூறுவதன் மூலம் சாதகமாக பயன்படுத்தி, சர்வதேச அரங்கில் செல்வாக்கைப் பெற முயற்சிக்கிறது. இந்த போர்தந்திரம் உலக விநியோக சங்கிலிகளில் இந்தியாவை ஒரு சிறிய கண்ணியாக மட்டுமே மாற்றும். இதனால்தான் — பாகிஸ்தானுடன் “போர் நிறுத்தம்” செய்வதில் டிரம்பிற்கு தேவையில்லாத பங்கை வழங்குவதிலிருந்து, இந்திய குடியேறிகள் விலங்கிடப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப அனுமதிப்பது வரை – மோடி மீண்டும் மீண்டும் டொனால்ட் டிரம்புக்கு முன்னால் மண்டியிடுகிறார்.

சர்வதேச நிகழ்வுகளில் மெய்யான ஈடுபாடுகளை விடவும் இந்தியாவின் உள்நாட்டு அரசியல் பயன்பாட்டுக்கும் மோடி வழிபாட்டை ஊக்குவிப்பதற்காகவுமே மோடி அரசுக்கு வெளியுறவுக் கொள்கை பயன்படுகிறது. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களின் போது நடத்தப்படும் பெரிய நிகழ்ச்சிகளில், பெரும்பாலும் ஆர்எஸ்எஸ் அல்லது வெளிநாடுகளில் உள்ள பிஜேபி வலையமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டு பணம் கொடுத்து வரவழைக்கப்பட்ட கூட்டமும் புலம்பெயர் இந்தியர்களும் மட்டுமே கலந்துகொள்கிறார்கள். தொடர்புடைய நாடுகளின் கருத்துருவாக்குபவர்கள், மாணவர்கள் அல்லது பொது மக்கள் மிகக் குறைவாகவே இதில் கலந்து கொள்கிறார்கள். மோடியின் வெளிநாட்டு பயணங்களின் போதான முக்கிய கவனம், அவரது கார்ப்பரேட் நண்பர்களுக்கு, குறிப்பாக அதானி குழுமத்திற்கு ஒப்பந்தங்களைப் பெறுவதாகும். இந்த ஒப்பந்தங்களில் பெரும்பாலானவை அந்தந்த நாட்டு மக்களால் வெறுக்கப்பட்டவை. மேலும், அதானி குழுமம் அதன் சந்தேகத்திற்குரிய கார்ப்பரேட் நிர்வாகத்துக்காக அம்பலமாக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், இந்த ஒப்பந்தங்களில் பல இப்போது ரத்து செய்யப்படுகின்றன. இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் நம்பகத்தன்மைக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது. 

மோடி ஆட்சி கால வெளியுறவுக் கொள்கையின் மிகவும் ஆபத்தான குறைபாடு, அமெரிக்கா-இஸ்ரேல் அச்சுடன் இந்தியாவுக்கு அதிகரித்து வரும் சார்பும் அடையாளப்படுத்திக் கொள்ளுதலுமாகும். இது இந்தியாவை ஆசியாவில் மேலும் தனிமைப்படுத்தியுள்ளது. வெளியுறவுக் கொள்கையின் சுதந்திரத்தை வலுப்படுத்த, பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியா தனது பங்கை ஒரு சமநிலைப்படுத்தும் எதிர்நிலை சக்தியாக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் பிரிக்ஸ் உறுப்பினர் நாடுகளுடனான உறவை துண்டித்துக்கொள்ளும்படி அமெரிக்கா இந்தியாவை வெளிப்படையாக அச்சுறுத்துகிற அளவுக்கு இப்போது நிலைமை மோசமடைந்துள்ளது. மேலும், சீனா, ரஷ்யாவுடனான வணிகத்தை குறைக்கவும், இராணுவப் பாதுகாப்பு கொள்முதல் போன்றவற்றில் அமெரிக்காவை முழுமையாக சார்ந்திருக்கவும் அமெரிக்கா இந்தியாவை இப்போது கட்டாயப்படுத்துகிறது. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு இந்தியா ஒரு லாபகரமான சந்தை மட்டுமல்ல; அவர்களின் ஆசிய போர்தந்திர இலக்குகளுக்கு சேவை செய்யும் ஒரு கீழ்படிகிற அரசாக வேகமாக அது மாற்றப்படுகிறது. புதிய ஏகாதிபத்திய உலக ஒழுங்குடன் இணைந்துகொள்ள தயாராக இருக்கும் இந்தியா, உலகின் பெரும்பான்மையான நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாடுகள், திட்டமிட்ட வகையில், அதிகரித்த அளவுக்கு சமத்துவமற்ற உலக பொருளாதார ஒழுங்கின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளன.  

கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டுக்கு கடைசி நிமிடத்தில் பார்வையாளராக இந்தியாவை அழைத்திருப்பதை, சர்வதேச அரங்கில் இந்தியாவின் உண்மை நிலையை அறிந்து கொள்வதற்கான ஒரு நிகழ்வாக கருத வேண்டும். இந்த அரசாங்கத்தின் இந்து மேலாதிக்கவாத தாக்குதல்களும் கருத்து வேறுபாடுகளுக்கு எதிரான தாக்குதல்களும் பல உலகளாவிய ஒப்பீட்டு குறியீடுகளில் இந்தியாவின் வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. மோடி ஆட்சியின் மீது சீக்கிய, முஸ்லிம் புலம்பெயர் மக்களின் முழுமையான அந்நியமாக்கமும், கனடா கடைசி நிமிடத்தில் இந்தியாவுக்கு அழைப்பிதழ் வழங்குவதை நியாயப்படுத்த ஒரு அறிக்கையை வெளியிட்டதற்கான மற்றொரு காரணியாக இருக்கலாம். இந்தியாவை ஐந்தாவது பெரிய பொருளாதாரம் எனவும் பல விநியோக சங்கிலிகளில் மையப் பங்கு வகிக்கும் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு எனவும் கனடா குறிப்பிட்டிருப்பதிலிருந்து, இந்தியாவின் புறநிலைப் பொருளாதார முக்கியத்துவத்தை மட்டுமே கனடா அங்கீகரிக்கிறது என்பதும், தற்போதைய சர்வதேச அரங்கில் இந்தியாவின் இராஜதந்திர பங்கை அல்ல என்பதும் தெளிவாகிறது.  

இந்திய அரசியலமைப்பைப் போலவே, இந்திய வெளியுறவுக் கொள்கையும் நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தால் வடிவமைக்கப்பட்டது. நூற்றாண்டுகால காலனிய கொள்ளையாலும் அடக்குமுறையாலும் பாதிக்கப்பட்டு பிறகு விடுதலை பெற்ற ஒரு நாடு, இயல்பாகவே உலகம் முழுவதும் உள்ள தேசிய விடுதலைப் போராட்டங்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களுடன் தன்னை அடையாளம் கண்டு கொள்ளும். சியோனிஸ்ட் ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீனுக்கு ஆதரவு அளித்தது அல்லது தென்னாப்பிரிக்காவில் இனவெறிக் கொடுமைக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்தது போன்றவை இந்திய வெளியுறவுக் கொள்கையின்  நெறிமுறைக்கான இயல்பான திசைகாட்டிகளாக இருந்தன. உலகின் மிகப்பெரும் வல்லரசுளுடன் கூட்டு சேராமை, பிற காலனியத்துக்கு பிந்தைய நாடுகளுடன் நட்புறவு ஆகியவை இந்தியாவின் தேசிய இறையாண்மையை வலுப்படுத்துவதற்கும் உண்மையான சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதற்கும் போர்தந்திர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. இன்று மோடி காலத்தில், இந்திய வெளியுறவுக் கொள்கையிலிருந்து அந்த நெறிமுறை, போர்தந்திர கருவானது களைந்தெறியப்படுகிறது. மேலும் இது இந்தியாவின் இறையாண்மையைக் கடுமையாக சமரசம் செய்யும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. ஒரு சுதந்திர வெளியுறவுக் கொள்கைக்கான போராட்டம், இந்திய குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக குணாம்சத்தையும் இந்திய தேசியவாதத்தின் அனைவரையும் உள்ளடக்கிய ஏகாதிபத்திய எதிர்ப்பு கருவையும் பாதுகாப்பதற்காக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற போராட்டத்துடன் நெருங்கிய தொடர்புடையது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *