
டெல்லியின் பிஜேபி அரசு, ஏழைத் தொழிலாளர்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்குகிறது. இந்த மூர்க்கத்தனமான புல்டோசர் இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜங்க்புராவில் உள்ள மதராஸி முகாமை ஜூன் 1, 2025 அன்று இடித்தது. 300 க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாகினர். இது டெல்லி நகர்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை முற்றிலும் மீறிய செயலாகும். அதே இடத்தில் மீண்டும் குடியிருப்பதற்கான வசதிகளை வழங்காமல் ஏற்கனவே உள்ள குடிசைகளை இடிப்பதை இந்த விதிமுறைகள் தடை செய்கின்றன.
குடிசைகளுக்கு பதிலாக வீடுகள் கட்டித் தரப்படும் என தேர்தலுக்கு முன்பு பிரதம மந்திரி வழங்கிய வாக்குறுதிகள் வழக்கம் போல காணாமல் போயின. சில நாட்களுக்கு முன்பு தான், முதல்வர் ரேகா குப்தா டெல்லியிலுள்ள ஜேஜே காலனிகளும் குடிசைப் பகுதிகளும் இடிக்கப்படாது; அரசு அவற்றின் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்தும் என கூறினார். அவர் இவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் போதே குடியிருப்புகளில் இருந்து மக்களை வெளியேறச் சொல்லி பல பகுதிகளில் அறிவிப்புகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன; நகர்ப்புற ஏழை மக்களின் குடியிருப்புகளை புல்டோசர்கள் இடித்துக் கொண்டிருந்தன.
ஜூன் 2, 2025 அன்று ரயில்வே நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் வாஷிர்பூரில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. தரை தளங்களுக்கு மேலேயுள்ளவை இடிக்கப்படும் என அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் முழு வீடுகளும் இடித்துத் தள்ளப்பட்டன. 2024ல், பாஜக மாநில அரசுகளின் “புல்டோசர் நீதி” குறித்து விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், அனைத்து அரசு நிறுவனங்களும் சட்டபூர்வமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் வாஷிர்பூரில் அறிவிப்புக்கு முரணாக முழு கட்டிடங்களும் இடிக்கப்பட்டிருப்பது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயலாகும்.
பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தைத் தடுக்க டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், பராபுல்லா வடிகால் அடைப்பை சரிசெய்யும் திட்டத்தின் கீழ் இந்த இடிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று டெல்லி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். நிர்வாகத்தின் தோல்விக்கான விளைவுகளை நகர்ப்புற ஏழைகள் ஏன் சுமக்க வேண்டும்? டெல்லி மாநகராட்சியில் 2022 வரை 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிஜேபி ஆட்சியில் இருந்தது. தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்கிறது. டெல்லியில் பருவமழை வெள்ளத்தை நிர்வகிப்பதில் நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது. நிர்வாகத்தின் இந்தக் குறைபாடுகளைச் சரிசெய்வதற்குப் பதிலாக, அரசாங்கம் உழைக்கும் ஏழைகள் மீது சுமையை மாற்றியுள்ளது.
மதராஸி முகாமில் குடியிருப்பவர்கள் பெரும்பாலும் தலித்துகளும் தமிழ் பேசும் புலம்பெயர்ந்தோருமே ஆவர். வீட்டு வேலை செய்பவர்கள், தெரு வியாபாரிகள், தொழிலாளர் என டெல்லியின் பொருளாதாரத்திற்கு பங்களித்துள்ள இவர்கள், 60 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வாழ்ந்து வருகின்றனர். ஆனால் பிஜேபி அரசு அவர்களுக்கு பாதுகாப்பான வீடுகளை வழங்குவதற்கு பதிலாக, அவர்களின் வீடுகளை புல்டோசர்களால் தரைமட்டமாக்கி, ஒரே இரவில் அவர்களை வீடற்றவர்களாக மாற்றியுள்ளது.
உயரடுக்குமாடி ஆக்கிரமிப்புகள் பற்றி கவலைப்படாத அதே நேரத்தில் உழைக்கும் ஏழைகள் வாழும் சேரிகள் ‘சட்டவிரோதமானவை’ என்று ஏன் கருதப்படுகின்றன? வீடிழந்தவர்களுக்கு முறையான மறுவாழ்வுத் திட்டம் ஏன் இல்லை? ஏனெனில் இது ஏழைகளைத் தண்டிப்பதற்கும், பிஜேபியின் செல்வச் செழிப்பான ஆதரவாளர்களுக்குப் பலனளிப்பதையும் அரசியல் உள்நோக்கமாகக் கொண்ட நடவடிக்கையாகும். இது நகர மேம்பாடு அல்ல;
ஏழை மக்களை நகரத்திலிருந்து விரட்டியடித்து விட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களின் நிலக் குவிப்பிற்கு வழிவகுக்கும் ஒரு திட்டமிட்ட செயலாகும். மறு குடியேற்றம் அளிக்காமல், சட்டபூர்வமான நடைமுறைகளை பின்பற்றாமல் மேற்கொள்ளப்படும் இந்த இடிப்புகள், “சட்டவிரோத குடியிருப்புகளை” அகற்றுவதற்கான நடவடிக்கைகள் அல்ல; மாறாக, ஏழை மக்களை அகற்றிவிட்டு, ரியல் எஸ்டேட் முதலாளிகளும் அரசியல் செல்வாக்குமிக்கவர்களும் அந்த நிலத்தை பங்கு போட்டுக் கொள்வதற்காகத்தான்! பிஜேபி அரசு எழை மக்களின் உரிமைகள், கண்ணியம் குறித்து கிஞ்சித்தும் மதிப்பளிக்காது என்பதையே இது அம்பலப்படுத்துகிறது.