
ஈரானுக்கு எதிராக இஸ்ரேலிய அரசு அண்மையில் நடத்திய இராணுவ தாக்குதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் வன்மையாகக் கண்டிக்கிறது. ஜூன் 13ம் தேதி, ஈரான் மக்கள் பயன்பாட்டுக்கான அணுசக்தி கட்டமைப்புகள் பிற உள்கட்டமைப்பு வசதிகள் மீதும் இஸ்ரேல் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. மோதலை அதிகரிக்கும் இந்த பொறுப்பற்ற நடவடிக்கை, இந்த பிராந்தியத்தில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை திணிக்க, மேற்கு ஆசியாவை சீர்குலைக்க, பரவலான மோதலைத் தூண்டிவிட அமெரிக்க-இஸ்ரேல் அச்சு மேற்கொள்ளும் திட்டமிட்ட உத்தியின் ஒரு பகுதியாகும்.
காஸா மீது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிற இன அழிப்புப் போரின் காரணமாக, அதிதீவிர வலதுசாரி நெதன்யாகு ஆட்சி, உலகளாவிய தனிமைப்படுதலையும் உள்நாட்டில் அதிருப்தியையும் எதிர்கொள்கிறது. எனவே அது
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதன் மூலமும் லெபனான், ஏமன், சிரியா மற்றும் பிற நாடுகளை அச்சுறுத்துவதன் மூலமும் மோதலை விரிவுபடுத்தவும், தனது நெருக்கடியை புறவயமாக்கவும் முயற்சிக்கிறது.
இஸ்ரேலின் “முன்தடுப்பு” தாக்குதல் எனப்படுவது, 2003ல் ஈராக் மீதான படையெடுப்பிற்கு “பேரழிவு ஆயுதங்கள்” என்ற பொய்யான சாக்குப் போக்கு கூறிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகறிந்த சொல்லாடலை பின்பற்றுகிறது.
2018-ல் முழு விரிவான கூட்டு செயல் திட்டத்திலிருந்து (ஜேசிபிஓஏ) டிரம்ப் நிர்வாகம் ஒரு தலைப் பட்சமாக விலகியதுதான் ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருந்தது. இது பரவலாக ஆதரிக்கப்பட்ட இராஜதந்திர கட்டமைப்பை சீர்குலைத்தது; பதட்டத்தை மீண்டும் பற்றவைத்தது. அப்போதிருந்து, அதிகரித்த பொருளாதாரத் தடைகள், நாசவேலைகள், குறிவைக்கப்பட்ட படுகொலைகளை ஈரான் எதிர் கொண்டது. இப்போது வெளிப்படையான இராணுவ அச்சுறுத்தல்களாக உச்சமடைந்துள்ளது.
இறையாண்மை கொண்ட நாடுகளை சிதைத்து நாசமாக்க, மேற்கு ஆசியாவை எரித்து சாம்பலாக்குவதே அமெரிக்க-இஸ்ரேல் அச்சின் இலக்கு என்பது தெள்ளத் தெளிவாகிறது. மேலும் இப்பிராந்தியத்தின் புவிஅரசியல் மற்றும் ஆற்றல் வளங்களின் நிலப்பரப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுமாகும்.
இஸ்ரேலின் செயல்கள் மேற்கு ஆசியாவை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் அச்சுறுத்துகின்றன. அமெரிக்காவின் முழு ஆதரவோடு, சர்வதேச சட்டங்களையும் வழக்கங்களையும் அப்பட்டமாக மீறுகிற ஒரு முரட்டு அரசாக இஸ்ரேல் மாறிவிட்டது.
இந்தியா தனது மவுனத்தைக் கலைத்து, இஸ்ரேலை தடுத்து நிறுத்த அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் நிச்சயமாக எடுக்க வேண்டும். மவுனமும் செயலற்ற நிலையும் (குற்றத்துக்கு) உடந்தையாகவே கருதப்படும். மனிதத்துவத்திற்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் அச்சின் குற்றங்களில் இந்தியா மாட்டிக் கொள்ளக் கூடாது.
— மத்தியக் கமிட்டி,
சிபிஐ (எம்எல்) லிபரேஷன்
புது தில்லி, ஜூன் 13, 2025