காஸாவுக்கு சென்று கொண்டிருந்த ஃப்ரீடம் ஃப்ளோடில்லா கூட்டமைப்பின் ஒரு பகுதியான, மனிதாபிமான உதவிக் கப்பல் மட்லீனை, சர்வதேச கடல் எல்லைக்குள் இஸ்ரேலிய படைகள் வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தின. உலகெங்கிலும் இருந்து வந்த 12 ஆயுதமற்ற தன்னார்வலர்கள் இந்தக் கப்பலில் இருந்தனர். இவர்களில் பருவநிலை செயல்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான பிரெஞ்சு நாட்டின் ரிமா ஹசனும் இருந்தனர். காஸா மக்களுக்கு அவசரத் தேவையான உணவு, மருத்துவப் பொருட்கள், நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் இந்தக் கப்பலில் இருந்தன.
காஸா மீது இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் இன அழிப்புப் போரால் வேண்டுமென்றே பட்டினி போடப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவைப்படுகிற உயிர்காக்கும் உதவிகளை வழங்க வேண்டும் என்பதே அவர்களது முதன்மையான நோக்கமாகும். மாறாக, அவர்கள் வன்முறையை எதிர்கொண்டனர். அடிப்படை மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்ல முயற்சித்ததற்காக இந்தத் தன்னார்வலர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர்.
இது ஒரு தனித்த நிகழ்வல்ல. 2010ல், மாவி மர்மாரா என்ற கப்பலைத் தாக்கி உதவிக்கு சென்ற 10 பணியாளர்களை இஸ்ரேல் கொன்றது. அமைதியான மனிதாபிமான முயற்சிகளை இராணுவ படைகள் மூலம் இஸ்ரேல் மீண்டும் மீண்டும் எதிர்கொள்கிறது. இந்த ஆண்டு மே மாதத் தொடக்கத்தில், ஃப்ளோடில்லாவின் ஒரு பகுதியான மற்றொரு மனிதாபிமான கப்பல் ஹண்டாலா, மால்ட்டா அருகே சர்வதேச கடல் எல்லைக்குள் வெடிக்கும் ட்ரோன் மூலம் தாக்கப்பட்டது.
முற்றுகையிடுதல், பட்டினி போடுதல், இடைவிடாத குண்டு வீச்சுத் தாக்குதல்கள் மூலம் நடத்தப்படும் ஒரு இன அழிப்பு இயக்கம் தான் காஸாவில் நடந்து கொண்டிருக்கிறது. இதனை அமெரிக்காவின் முழு ஆதரவுடன் இனவெறி இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கிறது. உணவு, மருந்து, சுத்தமான நீரைத் தடுப்பது மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாகும்.
காஸா மக்களுடனும், முற்றுகையை முறியடிக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்த துணிச்சல் மிக்க சர்வதேச தன்னார்வலர்களுடனும் சிபிஐ(எம்எல்) முழுமையான ஒருமைப்பாட்டுடன் ஒன்றுபடுகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். காஸா மீதான இன அழிப்புப் போரும் மனிதாபிமானமற்ற முற்றுகையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
முற்றுகை தகர்க்கப்பட வேண்டும்.
ஆக்கிரமிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
பாலஸ்தீனம் விடுதலை பெற வேண்டும்.