(தமிழகமே ஒன்றிய அதிகாரக் குவிப்பைத் தடுத்திடு! மாநிலத் தன்னாட்சிக்குப் போரிடு!” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம், மே 17, 2025 அன்று ஏற்பாடு செய்திருந்த அரசியல் கருத்தரங்க நிகழ்வில் சிபிஐ(எம்எல்) அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் ஆற்றிய துவக்க உரை)
75 ஆண்டுகளுக்குப் பிறகும் நமது குடியரசு தள்ளாடும் நிலையில்தான் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படை நோக்கங்களான இறையாண்மைமிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசின் மீது; அது ஒவ்வொரு இந்தியருக்கும் உத்திரவாதம் அளித்த சமூக, பொருளாதார, அரசியல் நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவத்தின் மீது இதுவரை கண்டிராத தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசாங்கம், இந்திய குடியரசின் அரசமைப்பு சட்டகத்தின் மீது இடைவிடாத போரை நடத்தி வருவதால், நாம் மாநிலங்களின் உரிமைகள், தன்னாட்சி பற்றி பேச வேண்டிய முக்கியத்துவம் இன்னும் அதிகரித்திருக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டம், “இந்திய மக்களாகிய, நாம்”- என்றுதான் எழுதப்பட்டுள்ளது. ஆகவே, மாநிலங்களின் உரிமைகள் என்று பேசும் போது அது இயல்பாகவே மக்களின் உரிமைகள் என்று நீட்சி அடைகிறது. எனவே தான், நீங்கள் வைத்துள்ள ‘மக்கள் அதிகாரம்’ என்ற பெயர் எனக்கு பிடித்திருக்கிறது.
அரசமைப்புச் சட்ட முகப்புரையில் கூட்டாட்சி என்ற வார்த்தை இடம்பெறவில்லை. மேலும், பாபா சாகிப் அம்பேத்கர் உண்மையிலேயே எழுத விரும்பிய சட்டம் என்பது “மாநிலங்களும், சிறுபான்மையினரும்” என்ற தலைப்பிலான வரைவு அறிக்கையாக மார்ச் 1947 ல் பட்டியலின கூட்டமைப்பு சார்பிலே அவர் அரசமைப்புச் சட்ட அவைக்கு அளித்தது என்பதும் நமக்குத் தெரியும். அதில் கூட்டாட்சி பற்றி மேலும் கூடுதலாக சொல்லப்பட்டிருந்தது. அதில், இந்திய அய்க்கிய மாநிலங்கள் என்பதைத்தான் அவர் அவதானித்திருந்தார். சிறுபான்மையினர் பற்றி அவருக்கு ஒரு நோக்கு நிலை இருந்தது. அவருடைய நோக்கு நிலையில், முஸ்லிம்களையும் மற்ற மதச் சிறுபான்மையினரையும் தலித்துகளயும் கூட அவர் சிறுபான்மையினராகவே கருதி இருந்தார். சிறுபான்மையினராக இருந்த தலித்துகளுக்கு மிகப்பெரும் அரசமைப்புச் சட்ட ஆதரவும் பாதுகாப்பும் உண்மையிலேயே தேவைப்பட்டது. சிறுபான்மையினரையும் மாநிலங்களையும் “ஜனநாயகக் குடியரசு” சட்டத்துக்குள் ஒன்றிணைப்பதற்கான தெளிவான பார்வை அவரிடம் இருந்தது. ஒரு வழியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசமைப்புச் சட்டமானது கூட்டாட்சியை அதிகப்படியான உள்ளார்ந்த விதத்தில் ஏற்றுக்கொண்டது.
பாபாசாகிப் அம்பேத்கர் அரசமைப்புச் சட்ட அவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட போது, அவர், தலித்துகள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களுடைய நலனுக்காகப் போராடுவதும் அவர்கள் நலனை முன்னிறுத்துவதும் தான் தன்னுடைய வேலை என்று எண்ணியிருந்தார். அவர் வரைவுக் கமிட்டியின் தலைவராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவார் என்றோ, ஒட்டுமொத்த அரசமைப்பு சட்ட வரைவிற்கான பொறுப்பை தான் ஏற்க வேண்டியிருக்கும் என்றோ அவர் நினைக்கவில்லை. அப்போதிருந்த சூழலில், அப்போதிருந்த சக்திகளின் சமன்பாட்டில் எப்படிப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்ற முடியுமோ அது நிறைவேற்றப்பட்டது. அது பாபா சாஹிப் அம்பேத்கர் விரும்பிய ஒரு கச்சிதமான அரசமைப்புச் சட்டமாக இருக்கவில்லை. ஆனால், அது தோராயமானது ஒரு அடி முன்னேறியது. ஆனால், அரசமைப்புச் சட்டம் என்பது ஒரு உறைந்து போன ஆவணம் அல்ல. அது மாறிக்கொண்டே இருக்கும் நம் காலத்தின் அறிக்கை. அதன் முகப்புரையில் சொல்லப்பட்டுள்ள “இந்திய மக்களாகிய, நாம், இந்தியாவை இறையாண்மை கொண்ட, சோசலிச, ஜனநாயக குடியரசாக நிறுவிக்கொள்ள மனம் உவந்து முடிவு செய்கிறோம்”என்பதானது இந்திய மக்கள் அதை செயல்படுத்துவதற்கு விடுத்த அறைகூவல் ஆகும். அந்த உணர்வுடன் இன்றைய நாளில் நம்மால் ஆன அனைத்தையும் செய்து அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும்.
இன்று, மோடியின் காலத்தில் இரண்டு விதமான மாநிலங்கள் உள்ளன. பாஜக அல்லது தேஜகூ ஆட்சி செய்யும் மாநிலங்கள் இரட்டை எஞ்சின் மாநிலங்களாக புகழப்படுகின்றன. இன்னொரு புறம் பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள். இம்மாநிலங்கள், வாய்ப்புள்ள எல்லா வகையிலும் குறி வைக்கப்படுகின்றன. தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றன. கூட்டாட்சி மீதான மிகப்பெரிய தாக்குதலை ஜம்மு காஷ்மீர் கண்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனிச்சிறப்பான அரசமைப்புச் சட்ட சிறப்புத் தகுதி 370 நீக்கப்பட்டதோடு, மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. டெல்லி மாநில அரசாங்கமும் அதே போன்ற தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமைகள் அங்குள்ள துணைநிலை ஆளுநரால் மறுக்கப்பட்டு வந்தன.டெல்லி அரசாங்கத்தின் உரிமைகளை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த போது, மோடி அரசாங்கம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை செல்லாததாக்க அரசமைப்புச் சட்டத்தின் உணர்வையும், மோடி அரசு வாய்ச்சவடால் அடித்து வந்த கூட்டுறவுடன் கூடிய கூட்டாட்சி என்பதையும் மொத்தமாக கேலிக்கூத்தாக்கும் விதத்தில் பாரபட்சமான சட்டத்தை இயற்றியது.
தமிழ்நாட்டில் கல்வி, மொழி மீதான தாக்குதல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அரங்கத்திலும் தாக்குதலை பார்க்க முடிகிறது. இதில், ஆளுநருடைய பங்கு சிறந்த உதாரணமாகும். மாநில அரசாங்கத்தால் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். அவரது செயலை அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றம் சொல்லி விட்ட பிறகு ஆளுநர் பதவியில் நீடிக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனாலும் இன்னும் பதவியில் தொடர்கிறார் . துணை ஜனாதிபதி உச்ச நீதிமன்றம் மீது தாக்குதலை தொடுக்கிறார். நீதிமன்றத்தின் நீதி பரிபாலன அதிகாரத்தை ‘அணு ஆயுத ஏவுகணை’ என்று சித்தரிக்கிறார். ஒரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நாட்டில் சிவில் யுத்தம் வருமானால் அதற்கு தலைமை நீதிபதியே பொறுப்பு என்றும் பேசுகிறார். அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் உச்சநீதிமன்றம் என்பதை சவாலுக்கு இழுக்கும் விதத்தில், இந்தியாவின் இரண்டாவது தலித் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் புத்த மதத்தை தழுவிய முதல் நீதிபதியுமான கவாய் அவர்களுக்கு, 14 கேள்விகள் மீது பதில் அளிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் கேட்டிருக்கிறது.
பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்கள் பாரபட்சத்தையும் இடையூறுகளையும் எதிர்கொள்கின்றன. ஆனால், இரட்டை எஞ்சினால் வழிநடத்தப்படும் மாநிலமான மணிப்பூர் இரண்டு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறது. அங்கு ஆட்சிமுறை என்பது அறவே இல்லை. இப்போது பொறுப்பேற்பை தட்டிக் கழிப்பதற்காக அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்புக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் தான் பொறுப்பு.ஆனால், பஹல்காம் நடந்தேறிய போது அரசாங்கம் எவ்வித பொறுப்பையும் ஏற்க மறுத்துவிட்டது.
1925 இல் துவங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு நூறாண்டு ஆகிவிட்டது. பிரிட்டிஷ் காலனி ஆட்சியிலிருந்து விடுதலை பெறும் போராட்டத்தில் அது எந்த பங்கெடுப்பையும் செய்யவில்லை. அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட போது ஆர்எஸ்எஸ் இன் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ஆர்கனைசரில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முற்றாக மறுதலித்தும் புறக்கணித்தும் தலையங்கம் எழுதியது. இந்த அரசியலமைப்புச் சட்டத்தில் “இந்திய அம்சம்” என எதுவும் இல்லை என்று சொன்னதோடு மனுஸ்மிருதியை இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டமாக ஆக்க வேண்டும் என விரும்பியது. இது நடந்தது 1949 இல். எனவே அரசமைப்புச் சட்டத்திற்கெதிரான அவர்களது எதிர்ப்பில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
காந்தி படுகொலைக்கு பிறகு ஆர் எஸ் எஸ் அமைப்பு தடை செய்யப்பட்ட போது அவர்கள், நாங்கள் அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்கள். நாங்கள் ஒரு கலாச்சார அமைப்பு போல் செயல்பட்டுக் கொள்கிறோம் என்றார்கள். இந்திய அரசாங்கமும் தடையை திரும்ப பெற்றது.
கோல்வால்கர் எழுதிய “சிந்தனை கொத்தை” நீங்கள் படித்தீர்கள் என்றால், முற்றிலுமாக கூட்டாட்சி பற்றி எதுவும் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். அவர்களுடைய பார்வையில் இந்தியா ஒரு பெரிய பேரரசாக இருக்க வேண்டும். அவர்களை பொறுத்தவரை மோடி ஒரு பேரரசரை போன்றவர். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசின் பிரதம மந்திரி என்பதாக பார்க்கப்படுவதில்லை. அவர்கள் அரசாங்கத்தை “எங்களுடைய ஆட்சி, எங்களுடைய பேரரசு” என்றும் மாநிலங்களை மகிமைக்குரிய நகராட்சிகளைத் தவிர வேறொன்றுமல்ல என்றும் கருதுகிறார்கள். எனவே பல வழிகளில் ஒட்டுமொத்த அதிகாரமும் குவிமையப் படுத்தப்பட்டுள்ளது. செல்வம் திரட்சியாக குவிதல் மற்றும் அதிகாரம் ஒட்டுமொத்தமாக மையப்படுத்தப்படுதல் என்ற இரண்டும் தான் மூர்க்கத்தனமாக இன்று நடந்து கொண்டுள்ளது. இதுதான் ஆர்எஸ்எஸ் தத்துவத்தில், இந்தியா பற்றிய அதன் பார்வையில், அதன் அரசியலில் கட்டமைக்கப்பட்ட ஒன்றாக உள்ளது.
அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட போதே அம்பேத்கர் போதுமான எச்சரிக்கைகளை நமக்கு கொடுத்திருக்கிறார். அரசமைப்புச் சட்டம் நல்லதா, கெட்டதா என்பதல்ல பிரச்சனை; அந்தச் சட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் யார் இருக்கிறார்கள்? என்பது தான் பிரச்சனை என்றார். நீங்கள் ஒரு நல்ல அரசமைப்புச் சட்டத்தை ஒரு கெட்ட மனிதரிடம் கொடுத்தீர்கள் என்றால் அதிலிருந்து என்ன விளைவுகளை நீங்கள் எதிர்பார்க்க முடியும்? கெட்ட மனிதர்களின் கும்பல் கண்டிப்பாக ஒரு நல்ல அரசமைப்புச் சட்டத்தை அழித்துவிடும். அவர் இந்திய அரசமைப்புச் சட்டத்தை, ஜனநாயகமற்ற மண் மீதான மேல் பூச்சு ஜனநாயகம் என்று தெளிவாக குறிப்பிட்டார். அப்படி என்றால் அம்பேத்கர் அந்த ஜனநாயகமற்ற மண்ணை ஜனநாயகப்படுத்தும் கடமையை நமக்கு கொடுத்திருக்கிறார் என்பதை வெளிப்படையாக பொருள் படுத்துகிறது. அப்படி இல்லை என்றால் அந்த ஜனநாயகம் அற்ற மண், மேல் பூச்சு ஜனநாயகத்தை பிய்த்து எறிந்து விடும். இதை அவர் 1949 ஆம் ஆண்டே சொன்னார். அதற்கு முன்னதாக 1947 லேயே இந்து ராஸ்ட்ரா என்று ஒன்று இந்தியாவில் அமையுமானால் அது இந்தியாவுக்கே பேரழிவாக இருக்கும் என்றார். இதை அவர் இந்தியாவின் தலித்து களுக்காகவும் இதர விளிம்பு நிலை மக்களுக்காகவும் சொன்னார். அதாவது, இந்து ராஸ்ட்ரத்தில் ஜனநாயகம் இருக்காது என்றார். அந்தப் பேரழிவை இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் அதைத்தான் இந்திய பாசிசம் என்று நாம் அழைக்கிறோம்.
இந்த அரசமைப்புச் சட்டம் இந்தியாவின் நூறாண்டு கால போராட்ட மரபிலிருந்து வந்தது. ஒரு பகுதியானது சுதந்திரப் போராட்ட இயக்கம் என்றும் இன்னொரு பகுதி சாதி எதிர்ப்பு போராட்டம், ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டம், மற்றும் ஒவ்வொரு அநீதிக்கும் எதிரான போராட்டம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இந்தியா நூறாண்டு காலமாக மாற்றத்திற்காக, சுதந்திரத்திற்காக, விடுதலைக்காக, நீதிக்காக, சமத்துவத்துக்காக போராடி வருகிறது. குறிப்பாக 1857 முதல் 1947 வரையிலான 90 ஆண்டு காலத்தில் தொடர்ச்சியாக, கவனம் குவிக்கப்பட்ட எதிர்ப்பு இயக்கத்தின் விளைவாகப் நன்கு அறியப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் சாதனைகளுக்கு இப்போது அச்சுறுத்தல் வந்திருக்கிறது. ஏனென்றால் பாசிசம் ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் இடித்துத் தள்ளிவிட்டு, இந்தியாவை குவிமையப்படுத்தப்பட்ட கார்ப்பரேட் கொள்ளை மற்றும் கபளீகரத்தின் காலனியாக மாற்ற முயற்சிக்கிறது. அவர்கள் ஒட்டு மொத்த சுதந்திரப் போராட்ட மரபையும் மறுதலிக்கிறார்கள். அயோத்தியில் ராமர் கோவில் குடமுழுக்கு நடத்தப்பட்ட போது தான் இந்தியா உண்மையிலேயே சுதந்திரம் பெற்றதாக மோகன் பகவத் சொன்னதை கேட்டோம். ஆகவே அவர்களைப் பொருத்தவரை ஆகஸ்ட் 15, 1947-இல் இந்தியா சுதந்திரம் அடையவில்லை, மாறாக, ராமர் கோவில் குடமுழுக்கு நடத்தப்பட்ட ஜனவரி 22, 2024 இல் தான் சுதந்திரம் அடையப்பட்டதாகும்.
காலனிய எதிர்ப்புப் போராட்டத்தினூடே வளர்க்கப்பட்ட இந்தியாவின் தேசியம் என்பது அனைவரையும் உள்ளடக்கிய, மதச்சார்பற்ற, ஏகாதிபத்திய எதிர்ப்பு தன்மை கொண்டதாகும். 1857 இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட யுத்தத்தில் எழுந்து வந்த அந்த தேசியம் என்பது “இந்தியா நமக்கு சொந்தமானது. நாம்தான் இந்தியாவின் உரிமையாளர்கள்” என்ற பாடலை உரத்து தெளிவாக முழங்கி நமக்கு அளித்தது. 1857, வெகுமக்கள் இறையாண்மையையும் மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் துணிச்சலாக வெளிப்படுத்தியது.
இந்த மரபை நாம் பாதுகாப்பதோடு, தேசியம் சங்பரிவாரம் – பாஜக கைகளில் சிக்கி உருக்குலைந்து விடாமல் முறியடித்தாக வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய, மதச்சார்பற்ற தன்மையையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வையும் தேசியம் இழந்து விடுமானால், அது இந்தியாவின் தேச ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாய் அமைந்து, அதை பலவீனப்படுத்திவிடும். நம்முடைய அரசாங்கம், இன்று மிகப்பெரிய ஏகாதிபத்திய சக்தியாக இருக்கிற அய்க்கிய அமெரிக்க டிரம்ப் நிர்வாகத்திற்கு அடிபணிந்து போவதை நாம் அனுமதிக்கக் கூடாது. இதுபோல் தேசியம் சீர் குலைந்து போகும் என்று சொன்னால் அது இந்தியாவின் கூட்டாட்சியை அழித்துவிடும். இந்த தேசப்பற்று உணர்வை,ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவின் மதச்சார்பற்ற தேசியத்தை நாம் மீண்டுமொருமுறை பற்ற வைக்க வேண்டும். நமது அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதற்காக, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அனைவரையும் உள்ளடக்கிய ஏகாதிபத்திய எதிர்ப்பு மரபை பாதுகாப்பதற்காக, தீர்மானகரமான, ஒன்றுபட்ட, பரந்த அடிப்படையிலான யுத்தத்தை நாம் நடத்த வேண்டிய தேவை முன் வந்துள்ளது.
இந்தியாவின் தாகமான சமத்துவ சமுதாய சமூக ஒழுங்கிற்கான வளமான போராட்ட மரபின் புதையல் சுரங்கமாக தமிழ்நாடு விளங்குகிறது. இங்குதான் சிங்காரவேலர் அவர்களால் முதல் தொழிற்சங்கம் துவங்கப்பட்டது. இது பெரியாரின் மண். இங்கு சாதி எதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்புப் போராட்டங்கள் ஆழமாக வேர் கொண்டுள்ளன.
இது போன்ற மரபுகள் தான் நம்முடைய வேற்றுமையுடன் கூடிய ஒன்றுபட்ட இந்தியா, உண்மையிலேயே விடுதலை பெற்ற, சக்தி வாய்ந்த, தங்களது அனைத்து வகைப்பட்ட ஜனநாயக உரிமைகளையும் அனுபவிக்கிற இந்தியா என்பதாக அவதானிக்கிற சக்தியை நமக்கு கொடுக்கிறது. இப்போதுள்ள நெருக்கடிக்கான விடை, வீரியமான கூட்டாட்சியுடன் கூடிய துடிப்பான ஜனநாயகத்தை நிறுவுவதில் தான் இருக்கிறது.
மக்களுக்கு இன்னும் கூடுதல் அதிகாரம் கிடைக்கட்டும்! மக்களின் போராட்டங்களுக்கு வெற்றி உண்டாகட்டும்!!
இந்நிகழ்வில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர் வீரபாண்டியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் சாமுவேல் ராஜ், திராவிடர் கழகத்தின் துணைச் செயலாளர் தோழர் பிரின்சு என்னாரசு பெரியார், மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்கறிஞர் ராஜு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்பி தோழர் தொல். திருமாவளவன் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சிக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் தோழர் செழியன் தலைமை தாங்கினார்.
உரை தமிழாக்கம்: தேசிகன்