√ பாசிச சக்திகளை விரட்டியடிப்போம்!
√ மாநில மக்கள் உரிமைகளுக்காக போராடுவோம்!
√ தமிழகத்தின் மாற்று அரசியல் சக்தியாக எழுந்திடுவோம்!
√ வலுவான கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பைக் கட்டி எழுப்புவோம் !
மாநில ஊழியர்கள் கூட்டம் :-
சென்னையில் இன்று 18.5.25 நடைபெற்றது. ஊழியர் கூட்டத்தின் விவாதப் பொருளான அரசியல் – அமைப்பு அறிக்கையை மாநில செயலாளர் பழ. ஆசைத்தம்பி முன்வைத்தார். அறிக்கையின் முக்கிய அம்சங்களை, கடமைகளை மத்திய கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் பாலசுந்தரம் மற்றும் சந்திரமோகன் விளக்கிப் பேசினர். மாவட்ட வாரியாக கட்சி ஊழியர்கள் அறிக்கையின் அரசியல் திசைவழி மற்றும் அமைப்பு கடமைகள் மீது தங்கள் கருத்துக்களை முன்வைத்துப் பேசினர்.
¶ கட்சி வெளியீடுகள் :-
1) பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் நமது கட்சியின் பார்வை, திசைவழி, கடமைகள்… என்ற வெளியீட்டை (பாட்னாவில் நடைபெற்ற 11-வது அகில இந்திய காங்கிரஸ் அறிக்கை) கட்சியின் பொதுசெயலாளர் தோழர்.திபங்கர் அவர்கள் வெளியிட கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசகர் தோழர் எஸ்.குமாரசாமி பெற்றுக் கொண்டார்.
2) இந்தியாவில் உள்ள பாசிசத்தை இப்போது புரிந்து கொள்ள முடியாது என்றால் பின் எப்போது? என்ற மற்றொரு புத்தகத்தை மத்திய கட்டுப்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் கிருஷ்ணவேணி வெளியிட மாநில குழு உறுப்பினர் சுசீலா பெற்றுக் கொண்டார்.
3) சிபிஐஎம்எல் தமிழ்நாடு கட்சியின் எதிர்ச்சொல் இணையதள அரசியல் ஏடு தளத்தினை பொதுச்செயலாளர் தோழர் திபங்கர் துவங்கி வைத்தார்.
¶ அரசியல் தலைமை குழு உறுப்பினர் வீ.சங்கர் தனது தொகுப்புரையில், தமிழ்நாட்டில் உள்ள நமது கட்சி அமைப்பை வலுப்படுத்துவதற்கு முன்நிபந்தனைகளாக உள்ள ஊழியர்கள் பிரச்சினை மற்றும் மக்கள் அடித்தளம் தொடர்பான கடமைகளை விளக்கிப் பேசினார்.
¶ கட்சி பொதுச் செயலாளர் திபங்கர் நிறைவுரை ஆற்றினார்.
முக்கியமான கருத்துக்கள் பின்வருமாறு :-
“இத்தகையதொரு மோசமான பாசிச அரசை இந்தியா எப்போதும் பார்க்கவில்லை. 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக ஒரு சீட் கூட வெற்றி பெறவில்லை என்பது நல்ல விஷயம். பாசிசத்தை வீழ்த்த தமிழ்நாடு மக்கள் உறுதியாக உள்ளார்கள். பல மாநிலங்களில் இப்படி ஒரு நிலை இல்லை. இங்கு பாசிச எதிர்ப்பு அரசியலுக்கு சாதகமான சூழல் உள்ளது. எனினும், இவை போதுமானது இல்லை. தமிழ்நாட்டில் இத்தகைய வாய்ப்பின் மீது நின்று கொண்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடித்தளத்தை நாம் எப்படி வளர்ப்பது என்பதை பார்க்க வேண்டும்.”
” இந்திய அரசியலமைப்புச் சட்டம் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது எனில், அதன் குறிப்பான விதிகள் மீது தாக்குதல் என நாம் சொல்லவில்லை. அதன் உயிரார்ந்த அம்சங்கள் மீது சமத்துவம், சோசலிசம், இறையாளுமை, சனநாயகம் என்ற கட்டமைப்பு மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தனிநபர் இறைநம்பிக்கை, சுதந்திரம் போன்ற உரிமைகள் மீதும் தாக்குதல் தொடுக்கப்படுகிறது.”
“முதலாளித்துவ அரசின் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க நாம் ஏன் முற்படுகிறோம் என்ற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர். அரசியலமைப்புச் சட்டம் முன்வைத்த கோட்பாடுகள் மீது அடிப்படை பார்வை, தெளிவு வேண்டும். ஆதரிப்பதை வெறுமனே செயல்தந்திரமாக மட்டும் கருதக் கூடாது. நாம் அரசியலமைப்புச் சட்டத்தின் உயிரார்ந்த. அடிப்படைகளை ஆதரிக்கிறோம்.”
“சுதந்திர போராட்ட காலத்தில் ‘இந்து தேசியவாதம்’ என்பது மேலோங்கி நிற்கவில்லை. இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் தான் உயர்ந்து நின்றது. இந்திய சுதந்திரப் போராட்ட மரபின் புரட்சிகர தேசியவாதமாகவும் திகழ்ந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியமாகவும் அது திகழ்ந்தது. மதசார்பற்ற தேசியவாதத்தை உயர்த்திப் பிடிப்பது மிகவும் அவசியமாகும். சுதந்திர போராட்ட காலத்தில் பிராமணிய எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு என்ற மரபு இருந்தது; அந்த மரபை உயிர்ப்பிக்க வேண்டும். இது கடினமான அரசியல் கருத்தியல் போராட்டம் ஆகும்.”
“1947 நாடு பிரிவினை ரத்தகளரி ஏற்பட்டபோதும் 1949 ல் இந்து, முஸ்லீம் அனைவருக்கும் சமத்துவம் மிக்க அரசியலமைப்புச் சட்டம் உருவானது. மதவாத இந்து தேசியம் என்பது வெற்றி பெறவில்லை.”
” தமிழ்நாட்டில் திராவிட, கம்யூனிஸ்ட், அம்பேத்கரிய நீரோட்டங்கள் உள்ளன. இவைகளுக்கு இடையே பொதுவான சில ஒற்றுமைகளும் உள்ளன. எனினும், நமது கடமை கம்யூனிஸ்ட் நீரோட்டத்தை வலுப்படுத்துவது என்பது தான்! தமிழ்நாட்டில் நமது கட்சியை வளர்ப்பது என்பது மிக முக்கியமானதாகும்.”
” பாசிசம் பற்றி சிபிஎம் கட்சியின் மதிப்பீடு ஒரு பாதகமான சித்திரத்தை தருகிறது; சிபிஎம் மாநாடு பாசிசத்தின் அபாயத்தை போதியளவு அங்கீகரிக்கவில்லை. ‘மோடியின் இந்தியா ஹிட்லர் நாஜிசம் போல் இல்லை’ எனவும் அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், மோடி ஆட்சி தெளிவான ஒரு பாசிசத் திட்டத்தை வைத்துள்ளது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினர் மீதும், நாளுக்குநாள் பாசிசத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.”
“இருந்தபோதிலும், இந்தியப் பாசிசம் குறித்து சிபிஎம் குறை மதிப்பீடு செய்கிறது. இதன் விளைவாக, கேரளாவில் காங்கிரஸ் தான் எதிரி என்கிறார்கள்; மே.வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தான் முதன்மையான எதிரி என்கிறார்கள். இத்தகைய அணுகுமுறையின் நீட்சியாக, தில்லி ஜெஎன்யூ வில் ABVP யை விட AISA தான் எதிரி என்றார்கள்.”
“மோடி ஆட்சியில், உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்கள், அறிவாளிகள் தாக்கப்படுகிறார்கள். தற்போது பாசிசத் தாக்குதலின் வேட்டைக்கு மாவோயிஸ்டுகள், பழங்குடிகள் உள்ளாகியிருக்கிறார்கள். எனினும், இன்றைய வரலாற்று சூழலில், சிபிஎம் போதியளவு பாசிசத்தின் அபாயத்தை உணரவில்லை. எனவே, பாசிச எதிர்ப்பு போராட்டத்திற்கு இன்று நாம்தான் சிபிஐஎம்எல் தலைமை தாங்க வேண்டும்.”
“தமிழ்நாட்டில் பாஜக எங்கேயோ இருக்கிறது என்ற நிலை தற்போது இல்லை. தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து வருகிறது. ஆளும் திமுக ஆட்சியானது, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் அதிருப்தியை, எதிர்ப்பை சந்தித்தால், தோல்வி அடைந்தால், அதிமுக தோள் மீது ஏறி பாஜக ஆட்சிக்கு வரலாம் என விரும்புகிறது.”
“மத்தியில் உள்ள பாஜக அரசையும், மற்றும் மாநிலத்தின் உள்ள திமுக அரசையும் சமமாக சில தோழர்கள் கருதுகின்றனர். நமக்கு திமுக அரசு மீது எந்த மாயையும் இல்லை. தமிழ்நாட்டில் தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள், விவசாயிகள், ஒடுக்கப்பட்ட மக்கள் என பல்வேறு மக்கள் பிரச்சினைகளில் திமுக ஆட்சி மக்களுக்கு எதிராக செயற்படுகிறது என்பதும் உண்மை தான். ஆனாலும், சில தோழர்கள் சொல்வது போல ஒன்றிய பாஜக அரசும், மாநில திமுக அரசும் ஒன்றல்ல! யார், எது முதல் எதிரி எனப் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றொரு புறம் ஏழை எளிய மக்கள் மத்தியில் தலித்துகள், மிகவும் பின்தங்கியவர்கள் மத்தியில், தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து வருகிறது என்பதையும் பார்க்க தவறக்கூடாது. நாடு முழுவதும் பல்வேறு சமூகப் பிரிவுகளை அணிதிரட்ட எத்தகைய வகையில் செயல்படுகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.”
“அனைத்து தலித் பிரிவு மக்கள், விவசாயத் தொழிலாளர்கள், படித்த இளைஞர்கள், மாணவர்கள் என மக்கள் மத்தியில் அவர்களின் பொருளாதார, அரசியல், கோரிக்கைகள் மீது நாம் ஊக்கமாக செயல்பட வேண்டும்.”
“இந்த ஆண்டு இறுதியில், தமிழ்நாட்டில் நடைபெறும் கட்சி மாநில மாநாடு வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக அமைய வேண்டும்; 2026 ல் சட்டமன்ற தேர்தலையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, வர்க்க அமைப்புகள் துவங்கி கட்சி அமைப்புகள் வரை பெரிதாக வளர்த்தெடுக்க பணியாற்ற வேண்டும்.”
” மே 1 ல், AICCTU வுடன் LTUC தோழர்கள் இணைந்தனர். பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் மட்டும் நாம் வளர்ச்சி அடையவில்லை. அனைத்து மாநிலங்களும் வளர்ந்து வருகிறோம். மகாராஷ்டிராவில் லால் நிசான் கட்சி நம்முடன் இணைகின்றது.”
“தமிழ்நாட்டில், இது சவால்மிக்க காலமாகும். கம்யூனிஸ்டுகள் கடினங்களை எதிர்கொள்பவர்கள், அவற்றை எல்லாம் கடந்து வளர்பவர்கள். தமிழ்நாட்டில் நாம் அரசியல் ஆற்றலுடன், வீரியமாக முன்னேறுவோம் – பெரும்சக்தியாக எழுவோம்!