சென்னை அம்பத்தூரில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மே நாள் பொதுக்கூட்டத்திற்கு உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் பாரதி தலைமை வகித்தார்.
எல்டியுசி மாநிலத் தலைவர் தோழர் ஏ.எஸ். குமார் முன்னிலை வகித்தார். அவர் கூட்ட நிகழ்வுகளை ஒருங்கிணைத்ததுடன் தோழர் ஜீவாவின் காலுக்க செருப்புமில்லை பாடலை நெகிழ்ச்சியுடன் பாடினார்.
இடது தொழிற்சங்க மய்யம் (LTUC) அகில இந்திய தொழிற்சங்க மய்யக் கவுன்சிலில் (AICCTU) மே 1, 2025 அன்று இணைந்தது. அது தொடர்பான இணைப்பு பிரகடனத்தை ஏஐசிசிடியு அகில இந்திய தலைவர் தோழர் வீ.சங்கர் மற்றும் எல்டியுசி சங்கத்தின் ஆலோசகர் எஸ். குமாரசாமி கூட்டாக வெளியிட்டனர்.

தோழர் பாரதி தனது தலைமை உரையில், கடுமையான நெருக்கடி நிறைந்த சூழலிலும் எல்டியுசி நடத்தி வரும் பல்வேறு போராட்டங்கள் பற்றி குறிப்பிட்டு போராட்டக் களத்திலும் நீதிமன்றத்திலும் நடத்திய போராட்டங்களின் விளைவாக தமிழகத்திலேயே சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சட்டப்படியான ஊதியம் பெற்றுத் தரப்பட்டது என்றும், சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக தூய்மைப் பணியாளர்களை அவுட்சோர்சிங் மூலம் பணிக்கமர்த்த எடுக்கப்படும் முயற்சிகளை எப்பாடுபட்டாவது எல்டியுசி முறியடிக்கும் என்றார். பல பிரிவு தொழிலாளர்கள் மத்தியில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், நலன் காக்க மேற்கொள்ளப்பட்ட போராட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தும் பாஜகவின் முயற்சிகளை தொழிலாளர்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை எல்டியுசி ஒருபோதும் அனுமதிக்காது என்றும் முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டும் பாதையில் எல்டியுசி எப்போதும் உறுதியோடு முன்செல்லும் என்றும் தெரிவித்தார்.
தொழிலாளர் நலன் காப்பதில் அலட்சியம் காட்டும் திமுக ஆட்சிக்கு புரியும் விதம் தொழிலாளர் குரலை வலிமையாக எழுப்ப வேண்டும் என்றால், இங்கு ஒலிக்கும் குரல் சட்டமன்றத்திலும் ஒலிக்க வேண்டும் என்று எல்டியுசி மாநிலச் செயலாளர் தோழர் அரிபிரசாந்த் தெரிவித்தார்.
எல்டியுசி மாநிலச் செயலாளர் தோழர் ஜோதி, தூய்மைப் பணிகள் தனியார்மயத்தை எல்டியுசி போராடி முறியடிக்கும் என்றார். உழைப்போர் உரிமை இயக்கத்தின் தோழர் தமிழ்ச்செல்வன் மற்றும் பிரசாந்த் ஆகியோரும் தூய்மைப் பணி தனியார்மயத்தை முறியடிக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஏஅய்சிசிடியு மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஞானதேசிகன் பேசும்போது, சட்டவிரோதமாக தங்கியிருந்தார்கள் என்று இந்தியர்களை அவமானப்படுத்தி நாடு கடத்திய ட்ரம்ப்பை கண்டித்ததுடன், இது பற்றி எந்த வலிமையான எதிர்ப்பும் தெரிவிக்காத மோடி ஆட்சி அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் சரணடைந்து கிடப்பதை சுட்டிக்காட்டினார். பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளைத் தரும் அரசுகள் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் முதல் ஓய்வூதியம் வரை எந்த உரிமையையும் உறுதிப்படுத்தாமல் அவர்கள் மீது வரிச்சுமைகளை ஏற்றுகின்றன என்று சொன்ன அவர், நாட்டின் பன்மைத்தன்மையை சீர்குலைக்கும் மோடி அரசின் முயற்சிகளை சாடினார். தொழிலாளர் சட்டங்கள் சீர்குலைக்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை அனுமதிக்கக் கூடாது என்றும் மே 20 அன்று நடக்கவுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக்க ஏஐசிசிடியு உடன் அகில இந்திய விவசாயிகள் மகாசபையும் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கமும் அதுபோல் பல்வேறு இடதுசாரி விவசாயிகள், விவசாய தொழிலாளர் சங்கங்களும் இணைகின்றன என்று குறிப்பிட்டு, வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய அறைகூவல் விடுத்தார்.
ஏஅய்சிசிடியு மாநில சிறப்புத் தலைவர் தோழர் இரணியப்பன் பேசும்போது, எல்டியுசி, ஏஅய்சிசிடியுவுடன் இணையும் இந்தக் கூட்டம் மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்றும் இந்த இணைப்பு தொழிலாளர்கள் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் என்றார். மாநில அரசுத் துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை திமுக ஆட்சி நிறைவேற்றாதது பற்றி கேள்வி எழுப்பி, உயிரியல் பூங்கா தொழிலாளர்களுக்கு,தூய்மைப் பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்திய எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்ற சூழலை சுட்டிக்காட்டி பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிற அதே வேளையில்,தொழிலாளர் வர்க்கம் அமைதியையே விரும்புகிறது என்றார்.
எல்டியுசி சிறப்புத் தலைவர் தோழர் புவனேஸ்வரி, தொழிலாளர் வர்க்கம் எட்டு மணி நேர வேலை செய்து 140 ஆண்டுகளாக பெரும் அளவில் செல்வத்தை குவித்துள்ளபோது, இனி 6 மணி நேர வேலை என்ற கோரிக்கையை வலுவாக எழுப்ப வேண்டும் என்றார். தூய்மைப் பணியாளர் நலன் காப்பதில் அக்கறையற்று இருக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாநில அரசுக்கு புரியும்விதம், சென்னை மாநகராட்சி மேயர் திருமிகு.பிரியா அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதுபோல், தூய்மைப் பணியாளர் பிரதிநிதிகளும் உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் தோழர் பாரதி தலைமையில் மேயர் பிரியா சென்ற அதே நாடுகளுக்குச் சென்று தூய்மைப் பணியாளர் நிலைமைகளை கண்டறிந்து அரசுக்கும் மாநகராட்சிக்கும் சொல்ல வேண்டும் என்றார். பெண் தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதாக பெருமை பேசும் திமுக அரசு அவர்கள் நலன் காப்பதில் கவனம் செலுத்தாமல் இருப்பதற்கு எதிராக பெண் தொழிலாளர்கள் போராட்டங்களில் எழ வேண்டும் என்றார். இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் 16 மாதமே ஆன பேரக் குழந்தைக்கு எவ்வித உழைப்பையும் செலுத்தாமலேயே ஈவுத்தொகையாக 3 கோடி கிடைத்துள்ளது பற்றிக் கூறி அவரின் வாரம் 70 மணி நேர வேலை என்ற அறிவிப்பு எவ்வளவு மோசடியானது என்றார்.
எல்டியுசி பொதுச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ் தமிழக ஸ்டாலின் ஆட்சியின் பல்வேறு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார்.
ஏஐசிசிடியு அகில இந்திய தலைவர் தோழர் வீ. சங்கர் உரையிலிருந்து…
எல்டியுசி, ஏஐசிசிடியு மையத்துடன் இணையும் முடிவு குறித்து மிகவும் மகிழ்ச்சி தெரிவித்து தனது உரையை துவங்கிய அவர், தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த மய எதிர்ப்பு, குறைந்தபட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் அவர்களின் கௌரவத்திற்காகவும் போராட வேண்டி உள்ளது என்றார். தூய்மைப் பணியாளர்களின் முக்கியத்துவம் கருதியே அகில இந்திய அளவில் முனிசிபல் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான அகில இந்திய கூட்டமைப்பை ஏஐசிசிடியு உருவாக்கி உள்ளது. கோவை தூத்துக்குடி மாநகராட்சிகளிலும் பல்வேறு நகராட்சி, ஊராட்சிகளிலும் தமிழகம் முழுவதும் தூய்மை பணியாளர்களை ஏஐசிசிடியு அமைப்பாக்கி அவர்களது நலனுக்கான போராட்டங்களை இடைவிடாது எடுத்து வருவது பற்றி குறிப்பிட்டார்.
மோடி அரசாங்கம் சட்டப்படியான குறைந்தபட்ச கூலியை ஒழித்துக் கட்ட மாதம் ரூ 5000 என்ற அளவிலான தரைமட்ட கூலியை கொடுத்தால் போதுமானது என்று சொல்கிறது. எல்லா சமூக பாதுகாப்பு திட்டங்களிலிருந்தும் அரசு கைகழுவி விட்டு தொழிலாளர்கள் எந்த அளவு பிரிமியம் தொகை கட்டுகிறார்களோ அந்த அளவுக்கான சமூகப் பாதுகாப்பை அவர்கள் பெறுவார்கள் என்கிறது. அரசாங்கம், முதலாளிகளின் பொறுப்பாக இருந்த சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் இனி தொழிலாளர்களின் பொறுப்பாக மாற்றப்படும்.
இங்கே இந்த மே நாளில் நாம் வைத்துள்ள 6 மணி நேர வேலை, வாரம் 5 நாள் வேலை என்ற கோரிக்கை மிகவும் சரியானது. அது போல் தொழிலாளர்களின் குரல் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும் என பலரும் சுட்டிக்காட்டி இருப்பதும் மிகவும் சரியானது என்று குறிப்பிட்டார்.
மோடி ஆட்சியின் புதிய சட்டத் தொகுப்புகள் நடைமுறைக்கு வந்தால் தொழிலாளர்கள் நிவாரணத்திற்காக நாடும் தொழிலாளர் துறை, தொழிலாளர் நீதிமன்றங்கள் கூட இருக்காது என்றார்.
மாநில திமுக அரசாங்கம் சமீபத்தில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. அதில் சட்டத்தை மீறும் முதலாளிகளுக்கு சிறைத் தண்டனை என்று இருந்ததை நீக்கியும் அபராத்த தொகையை கணிசமாக குறைத்தும் உள்ளது. பொருளாதாரத்தில் ஒன்றிய அரசின் அதே கொள்கைகளை தமிழகத்தில் அமல்படுத்துகிறது.
தொழிலாளர்களின் தொழிற்சங்க இயக்கத்தின் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கத்துடனே புதிய கிரிமினல் சட்டங்கள் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் தொழிலாளி வர்க்கம் பதிலடி கொடுக்க தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இறுதியாக பேசிய எல்டியுசி சங்கத்தின் ஆலோசகர் தோழர் குமாரசாமி உரையிலிருந்து..
இன்று உலகம் முழுவதும் எழுந்து வந்திருக்கக்கூடிய வலதுசாரி ஆபத்தை சந்திக்கிறோம்.
2025ம் ஆண்டில் பாசிச இருள் சூழ்ந்துள்ளது. காஷ்மீர் மாநிலம் பகல்காமில் நடந்துள்ள தாக்குதலும் அங்கு சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததும் மிகவும் கண்டிக்கத்தக்கது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால்,அந்த நிகழ்வை வைத்துக்கொண்டு பாஜக நாடு முழுவதும் தனது நஞ்சு கலந்த பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
நாம் ஒன்றிய மோடி ஆட்சியை இஸ்லாமிய மக்களுக்கு எதிரான ஆட்சி என்று மட்டுமே சொல்லி வருகிறோம். ஆனால், உண்மையிலேயே அது பெரும்பான்மை இந்து உழைக்கும் மக்களுக்கு எதிரான ஆட்சியாக இருக்கிறது என்பதையும் நாம் அம்பலப்படுத்தி ஆக வேண்டும்.
தமிழகத்தை நாம் இது பெரியார் மண் என்று சொல்லி அசட்டையாக இருக்க முடியாது. திருப்பரங்குன்றம் நிகழ்வு பெரும் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. சில மணி நேரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களை சங்பரிவார் அமைப்புகளால் கூட்ட முடிகிறது. தமிழக அமைச்சர் சேகர்பாபு போன்றவர்கள் பாஜகவின் வளர்ச்சிக்கு தமிழகத்தில் வழி விடுகிறார்கள். நவீன அரசு என்றால், மதச்சார்பின்மை என்றால் அரசும் மதமும் பிரிந்து இருக்க வேண்டும். ஆனால், இங்கு அமைச்சர் சேகர்பாபு தமிழகத்தை ஆன்மீக பூமி என்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் மாநில உரிமைக்காக குரல் கொடுக்கிறார். மற்ற மாநில முதல்வர்களையும் கூட இணைத்துக் கொண்டு குரல் கொடுக்கிறார், நல்லது ,வரவேற்கிறோம். ஆனால், தமிழ்நாட்டில் அவுட்சோர்சிங் இராஜ்ஜியம் நடக்கிறது. ஸ்ரீபெரும்புதூரில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் இல்லை. அரசுத்துறையில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு பணி நிரந்தரப் படுத்துதல் சட்டம் அமல்படுத்தப்படுவதே இல்லை.
சமூக நீதி, சமூக நீதி என்று பேசுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பல்வேறு அரசு திட்டங்களிலே பல்லாயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் சொற்ப ஊதியத்தில் பணி நிரந்தரம் இல்லாமல் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கு சமூக நீதி எங்கே? என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது.
தமிழகத்தின் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் ஒரு பொருளுள்ள வாழ்க்கையை, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியுமா? சொற்ப ஊதியத்தை வைத்துக்கொண்டு தன்னை, தன்னை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சிகரமாக நிச்சயமாக வைத்துக் கொள்ள இயலாது. தமிழகத்திலே ஒரு தோற்ற மாயையை, காட்சிப் பிழையை ஏற்படுத்துகிறார்கள்.
இந்திய மக்களின் கழுத்தை இருக்கும் சுருக்கு கயிறாக பாசிசம் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் இடதுசாரிகள் சுருங்கி இருக்கிறோம் பாய்ச்சலில் முன்னேறவில்லை.
கம்யூனிஸ்ட் தலைவர்கள் கனவு காணச் சொல்கிறார்கள். லெனின் கூட கனவு பற்றி குறிப்பிடுகிறார். கம்யூனிஸ்டுகளுக்கு கற்பனை வளம், படைப்பாற்றல் வேண்டும். சுய தியாகம், பரந்த மனது வேண்டும்.
பரந்த இடதுசாரி ஒற்றுமை பற்றி பேசுகிறோம். நாம் எல்லோருமாக சேர்ந்து கூட சிறிய அமைப்பாகவே இருக்கிறோம். தமிழகத்திலே 8 கோடி மக்கள் இருக்கிறார்கள். நாம் பரந்து விரிந்த மக்களை சென்றடைய வேண்டியுள்ளது. நாம் தமிழ்நாட்டு மக்களுக்கு தேவைப்படும் அளவுக்கு, இந்திய நாட்டு மக்களுக்கு தேவைப்படும் அளவுக்கு புரட்சிக்கான பங்களிப்பை செலுத்துவதற்கு மே நாள் தியாகிகள் பெயராலே உறுதி ஏற்றுக் கொள்வோம்.
கூட்டத்தில் ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாளன்று தோழர் குமாரசாமி ஆற்றிய உரை, ‘சனாதனம் வீழட்டும், ஜனநாயகம் வெல்லட்டும்’ என்ற தலைப்பிலான சிறு புத்தகத்தை இகக(மாலெ) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி வெளியிட்டார்.
கூட்ட மேடையில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் வித்தியாசாகர், தோழர் உமா மகேஸ்வரன் ஆகியோர் இருந்தனர்.