ரமேஷ் கணபதி
கண்ணகி-முருகேன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையை 28.04.2025 அன்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. விருத்தாசலம் மாவட்டம் புதுக் கூரைப் பேட்டையைச் சேர்ந்த வன்னிய சமூக கண்ணகியும் தலித் சமூக முருகேசனும் காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். அதனால், கண்ணகியின் தந்தை துரைசாமியும் அவரது மகன் மருதுபாண்டியும் இருவரின் காதுகளில் விஷத்தை ஊற்றிக் கொன்று எரித்துவிட்டார்கள். பின்னர், காவல்துறை துணையுடன் முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவையும் குற்றவாளியாக்கினார்கள. இச் சம்பவம் நடந்தது 2003ஆம் ஆண்டு. பிணையில் வெளிவந்த முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, தான் நிரபராதி என்றும் தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரத்தினம் மூலம் மனு கொடுத்து அந்த கொலை வழக்கு மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு மற்றும் அவரது உறவினர்கள் மூன்று பேரை வழக்கில் இருந்து விடுவித்தனர். கண்ணகியின் தந்தை துரைசாமி, அவரது மகன் மருதுபாண்டி உள்ளிட்ட அவர்களது உறவினர்கள் மற்றும் அன்று விருத்தாச்சலம் காவல் ஆய்வாளராக இருந்த செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் ஆகியோர் மீது 2020 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையின் முடிவில் கடலூர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு அமர்வு நீதிமன்றத்தில், மருதுபாண்டியனுக்கு தூக்குத் தண்டனையும் மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் தமிழ்மாறனுக்கு நான்காண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப் பட்டது. உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததில் மருதுபாண்டியின் தூக்குத் தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்றவர்களுக்கு அதே தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றனர் குற்றவாளிகளில் மூவர். அந்த மேல்முறையீட்டில்தான் உச்ச நீதிமன்றம் குற்றவாளிகளின் தண்டனையை மீண்டும் உறுதி செய்தது மட்டுமின்றி, முருகேசனின் தந்தைக்கு இழப்பீடாக 5 லட்ச ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. சாதியாதிக்கத்திற்கு எதிரான நடவடிக்கையில் இது ஒரு மிக்க முக்கியமான தீர்ப்பாகும்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அதற்குள் இந்தக் கொடூரக் குற்றவாளிகள் தங்கள் வாழ்க்கையில் பல கட்டங்களைக் கடந்து விட்டார்கள். குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் செல்லமுத்து காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகிவிட்டார். உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் ஆய்வாளர் ஆகிவிட்டார். இரண்டு, மூன்று மணிநேரத்தில் கொடூர குற்றத்தை செய்து முடித்த குற்றவாளிகளை இறுதியாக தண்டிக்க 23 ஆண்டுகளாகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரிதாக கிடைக்கும் நீதி இவ்வளவு நீண்ட தாமதத்திற்குப் பிறகு கிடைக்கச் செய்யும் நீதிமுறை திருத்தப்பட வேண்டும். கண்ணகி முருகேசன் கொலைக் குற்றவாளிகளான காவல்துறை அதிகாரிகள் இருவரும் பெற்ற பதவி உயர்வும் அதனால் அடைந்த பயன்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அந்தப் பொருளாதாரம் கண்ணகி-முருகேசன் குடும்பத்துக்கு இழப்பீடாக வழங்கப்பட வேண்டும். நீதிகேட்டு நீண்ட போராட்டம் நடத்திய முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு ரூ 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
எல்லா வழக்கிலும் இப்படி நீதி கிடைக்கின்றவா?
இது போன்ற தீர்ப்புகள் எல்லா சமயமும் கிடைக்கின்றனவா? கண்ணகி-முருகேசன் வழக்கைப் போன்று உலகை உலுக்கிய மற்றொரு சம்பவம் உடுமலை (கவுசல்யா) சங்கர் படுகொலை. இதில் கவுசல்யாவும் காயமடைந்தார். ஆனால், உயிர் பிழைத்துக் கொண்டார். உடுமலைப் பேட்டை சங்கர் பட்டியலின சமூகம். திண்டுக்கல் கவுசல்யா முக்குலத்தோர் சமூகம். காதலித்து, கவுசல்யாவின் பெற்றோர் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்துகொண்டனர். இந்த கொலை வழக்கில் திருப்பூர் விசாரணை நீதிமன்றம் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்ளிட்ட 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தது. தன்ராஜ்க்கு ஆயுள் தண்டனையும் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மணிகண்டனுக்கு ஐந்தாண்டு சிறையும் விதித்தார் நீதிபதி அலமேலு நடராஜன். கவுசல்யாவின் தாய், மாமா மற்றும் ஒருவர் விடுதலை செய்யப்பட்டனர். அம் மூவருக்கும் நீதிமன்றத்திலேயே மாலை அணிவித்து வெடி போட்டுக் கொண்டாடிய கொடுமையும் நடந்தது. தன் தாய் அன்ன லட்சுமிக்கு சாதி சங்கத்தினர் பாராட்டு விழா நடத்தியதை கவுசல்யா கண்டித்தார். அன்னலட்சுமியின் விடுதலையை எதிர்த்து அரசு தரப்பும், குற்றவாளிகள் தரப்பும் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மாவட்ட நீதிமன்றத்தில் மூன்று மாதத்தில் முடிக்கப்பட்ட விசாரணை, உயர்நீதிமன்றத்தில் மூன்றாண்டுகள் நடந்தது. 2022 ஜூன் 20 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார். தூக்குத் தண்டனை பெற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இத் தீர்ப்பை எதிர்த்து கவுசல்யா தரப்பிலும் சங்கரின் சகோதரர் தரப்பிலும் அரசுத் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கடந்தும் இன்னும் விசாரணைக்கு வரவில்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரை, எதிர்க்கட்சியாக இருந்த போது காட்டிய ஆர்வத்தை ஆளும் கட்சியான பின்பு திமுக காட்டவில்லை என்கின்றனர் கவுசல்யாவும் எவிடன்ஸ் கதிரும். இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வைப்பதற்கே பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது; அரசுத் தரப்பில் அவ்வளவு ஒத்துழைப்பு இல்லை என கவுசல்யா தனது மன வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைப்பதையும் கவுசல்யாவுக்கும் சங்கர் குடும்பத்துக்கு நீதிகிடைப்பதையும் தமிழ்நாடு அரசு உறுதிசெய்திட வேண்டும். வலுவான வழக்கறிஞர் அணி கொண்ட தமிழ்நாடு அரசால் இது முடியாததல்ல.
‘காலனி’ பெயர் நீக்கம் – கண்ணாடியைத் திருப்பினால்…
இந்தச் சூழலில்தான் கண்ணகி முருகேசன் கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்த மறுநாள் 29.4.2025, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் தீண்டாமையின் அடையாளமாக உள்ள “காலனி” என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும் பொதுப் புழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும் என அறிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர், ‘இந்த மண்ணின் ஆதி குடிகளை, இழிவுபடுத்தும் அடையாளமாக ‘காலனி’ என்ற சொல் பதிவாகியிருக்கிறது. இந்தச் சொல் ஆதிக்கத்தின் அடையாளமாகவும் தீண்டாமைக்கான குறியீடாகவும் வசைச் சொல்லாகவும் மாறி இருப்பதால், இனி இந்தச் சொல்லை அரசு ஆவணங்களில் இருந்தும் பொதுப் புழக்கத்தில் இருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். தமிழ்நாட்டில், சாதியை மறுத்த, சுயமரியாதைத் திருமணங்களை ஆதரித்த திராவிட கட்சியின் ஆட்சியில், தீண்டாமை இன்னும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது, அது ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலுள்ள அக்கறையை முதல்வரின் இந்த அறிவிப்பு காட்டுகிறது. ஆனால், கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடத் துவங்கும் என்கிற கருணாஸ் கதையாக இருக்கிறது. காலனி, சேரி, பச்சேரி, குப்பம் என்று பல பெயர்களில் தலித் மக்கள் வாழும் பகுதியை குறிப்பிட்டு சொல்வது மட்டுமின்றி, எஸ்.சி.பார்டி என்கிற சொல்லையும் கூட இடைச் சாதியினர் பயன்படுத்தி இகழ்ச்சியாகப் பேசுவதும் இருக்கின்றது. என்ன பெயர் வைத்தாலும் எதை நீக்கினாலும் இகழ்ந்து பேசுவது நெஞ்சத்தின் வெளிப்பாடாக இருக்கின்றது. வேங்கை வயல் மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட தலித்துகளையே குற்றவாளியாக்கியிருக்கிறது தமிழக முதல்வர் கையிலுள்ள காவல்துறை. அம் மக்களுக்காக இன்னொரு தனித் தொட்டிதான் மீண்டும் கட்டப்பட்டுள்ளதேயன்றி, பொதுத் தொட்டியில் அவர்கள் புழங்கமுடியாது. வேங்கை வயலில் ‘காலனி’யை நீக்கிவிட்டால் அவர்களுக்கு விடியல் வந்துவிடுமா? அந்த ஊர் மக்கள் தங்கள் வீட்டுக்குச் செல்வதற்கு ஆயிரம் அடையாளங்கள் காட்டவேண்டியுள்ளது. சாதியாதிக்க வெறி, பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நெஞ்சிலும் பெற்றோர்களால், ஆசிரியர்களால், சாதியை வைத்து பிழைப்பு நடத்தும் சாதித் தலைவர்கள், அரசியல் வாதிகளால் திட்டமிட்டு பதிய வைக்கப்படுகிறது. பட்டியலினத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், கவுண்டர் சமூகத்து சுவாதியைக் காதலித்தார் என்பதற்காக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். கொலையைச் செய்தவர்கள் தீரன் சின்னமலை பேரவையைச் சேர்ந்த யுவராஜூம் அவர் கூட்டாளிகள் 15 பேரும். இந்த வழக்கை விசாரணை செய்த டிஎஸ்பி விஷ்ணுப் பிரியா தற்கொலை செய்து கொண்டார். விசாரணை நீதிமன்றம் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. உயர்நீதிமன்றத்தில், கோகுல்ராஜின் தாயார் விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு எதிராக மேல் முறையீட்டுக்குச் சென்றார். உயர்நீதிமன்ற விசாரணையின் போது சுவாதி பிறழ் சாட்சியாக மாறினார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் நேரடி கள விசாரணையில் இறங்கினர். யுவராஜ் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம் இருவருக்கு தண்டனையை ஐந்தாண்டுகளாகக் குறைத்தது. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விசயம், அரசுத் தரப்பு வழக்கறிஞர் பா.ப.மோகன், எனக்கு இவ் வழக்கில் வாதாட எந்தவொரு உதவியும் தரப்படவில்லை, என் சொந்தச் செலவில்தான் மதுரைக்குச் சென்று வழக்கை நடத்தினேன். அதுபோல், சுவாதிக்கு முறையான பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தால், அவர் பிறழ்சாட்சியாக மாறியிருக்க மாட்டார் என்றார். இதிலிருந்து, அரசு எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் ஒப்புக்காக எதையோ செய்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.
தீண்டாமை ஒழிக்கப்பட
உண்மையிலேயே தீண்டாமை ஒழிக்கப்பட, காலனி பெயர் நீக்கம் மட்டும் போதாது, காவல் துறையில், அரசுத் துறையில், பள்ளிகளில் புரையோடிப் போய் இருக்கும் சாதியாதிக்க வெறியை களைய அக்கறையான உண்மையான நடவடிக்கைகள் வேண்டும். கோகுல்ராஜ் கொலைக் குற்றவாளி யுவராஜ் மாவீரனாகச் சித்தரிக்கப்படுகிறான். பரோலில் பகட்டான வரவேற்புடன் வெளியே வந்து சாதித் திமிருடன் பேட்டியும் அளிக்கிறான். சமீபத்தில், அருந்ததியர் இளைஞர் பிற்படுத்தப்பட்ட சமூகமான இல்லத்துப் பிள்ளைமார் பெண்ணை திருமணம் செய்ய ஆதரவாக இருந்தார்கள் என்பதற்காக நெல்லை மாவட்ட சிபிஐ(எம்) அலுவலகம் சூறையாடப்பட்டது. தோழர்கள் தாக்கப்பட்டனர். அந்தத் தாக்குதலை ஆதரித்து ஒரே தொனியில் சங்கிகளும் சாதித் தலைவர் முகமூடியணிந்த லும்பன்களும் பேசி சாதியாதிக்க வெறியைத் தூண்டினார்கள். அந்த சாதி வெறி லும்பன்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் திராவிட மாடல் அரசு எடுக்கவில்லை. களை எடுக்கப்பட வேண்டியவர்களை களை எடுக்காமல் ‘காலனி’ பெயர் நீக்கத்தால் மட்டும் மாற்றம் வராது. சாதியாதிக்கக் கொலைகளைத் தடுக்க, ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை இந்த அரசு ஏன் இதுவரை கண்டு கொள்ள மறுக்கிறது? சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு, வாழ்கை, வாழ்வாதார உத்தரவாதம், தனிச் சலுகைகள், சாதிப் பெருமை பேசுபவர்களுக்கு கடும் தண்டனை இவையெல்லாம்தான் இன்றைய தேவை.
வழக்கறிஞர்கள் ரத்தினம், பா.ப மோகன் போன்றவர்களுக்கு அரசு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். வழக்கறிஞர்கள் சுரேஷ் (பியுசிஎல்), பிரகாஷ், கேசவன்,ராகுல் சியாம், சுகுமாறன், சத்திய சந்திரன், திலகேஸ்வரன், ராதாகிருஷ்ணன், பிரிய தர்ஷினி போன்றவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
2022 ல் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதும் இப்போது உச்சநீதிமன்றம் நீதி வழங்கிய போதும் திமுக, அதிமுக, பாஜக, பாமக போன்ற முக்கிய அரசியல் கட்சிகள் கருத்து சொல்லாமல் அமைதி காத்தன, காக்கின்றன ஏன்? மற்ற இரண்டு வழக்குகளிலும் இதே நிலைதான் போலும்!?
“இந்த நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும்” என்று முதல்வர் மே நாளில் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். தொழிலாளர் நாளில் அவர் தெரிவித்துள்ள அவரது விருப்பம் மிக மிக நல்ல விருப்பம். அந்த சமத்துவபுரத்தில், ஆணவக் கொலைகள் இருக்கவேக் கூடாது. அங்கு வருங்கால கண்ணகியும் முருகேசனும் கவுசல்யாவும் சங்கரும் சுவாதியும் கோகுல்ராஜும் இளவரசனும் திவ்யாவும் அச்சமின்றி மகிழ்ச்சியாக வாழவேண்டும். இது ‘சாமான்ய மக்களின்’ விருப்பம். ஊர், சேரி, காலனி, குப்பம் ஒழிந்த, தனித்தண்ணீர் தொட்டி, தனிச்சுடுகாடு இல்லாத “பெரியார் சமத்துவபுரமாக” தமிழ்நாடு இருக்க வேண்டும்.