மக்கள் விரோத மோடி ஆட்சிக்கு எதிரான, ஜூலை 09 நாடுதழுவிய பொது வேலைநிறுத்தம், நகர்ப்புற – கிராமப்புற முழு அடைப்பாக அமையட்டும்!

ஒன்றிய பாசிச மோடி ஆட்சிக்கு எதிராக அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் ஜூலை 09ம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

நான்கு தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்களும் சுதந்திரமான தொழிற்சங்க கூட்டமைப்புகளும் அறிவித்துள்ள அகில இந்திய வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதென்றும்,  இதன் ஒரு பகுதியாக, விவசாய -கிராமப்புறத் தொழிலாளர்கள், ஏழை மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளுக்காகவும், கார்ப்பரேட் சூறையாடலில் இருந்து வேளாண்மை – விவசாயிகளின் நிலம் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள்,  விவசாய சங்கங்கள் கிராமப்புர வேலைநிறுத்தம் நடத்தவும்  முடிவு செய்துள்ளன.

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் உருவான போராடும் விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஐக்கிய முன்னணியான எஸ்கேஎம் சம்யுக்தா கிசான் மோர்ச்சா  மே 20 வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்பது மட்டுமல்லாமல், இந்திய விவசாயத்தைக் கார்ப்பரேட்மயமாக்கத் துடிக்கும் மோடி அரசாங்கத்திற்கு எதிராக விவசாயிகளைப் போராட்டத்தில் அணிதிரட்டவும் முடிவு செய்துள்ளது.

விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தொழிலாளர் அமைப்புகளுடன், ஒருங்கிணைந்து, ஒரே நாளில் தனித்தனியாகப் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும்,  இறுதியில் இரண்டையும் இணைத்து ஒரு பெரிய போராட்டமாக மாற்ற வேண்டும் என்றும் எஸ்கேஎம்   முடிவு செய்துள்ளது.

மற்றொரு புறம் நமது ஏஐசிசிடியு, ஏஐகேஎம், அயர்லா அமைப்புகள் கூட்டாக இணைந்து செயல்பட  முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏஐசிசிடியூ சங்கமானது,  நகர்ப்புறங்களில், தொழிற்சாலை பகுதிகளில் வேலை நிறுத்தம், கதவடைப்பு, மறியல் போன்றவற்றை நடத்தவும் முடிவு செய்துள்ளது.

இதேபோல், அனைத்து மாவட்ட விதொச – விச அமைப்புகளும் தங்கள் அமைப்புகளை ஒன்றிணைத்து பணியாற்றி கிராமப்புற  வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக கட்டமைக்க வேண்டும். 

¶ மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த கூட்டங்கள்:-

அனைத்து மாவட்ட அமைப்புகளும் (தொச, விச, விதொச) வேலைநிறுத்தம் தொடர்பாக விவாதிக்க,  திட்டமிட கூட்டுக் கூட்டங்களை  நடத்த வேண்டும். உடனடியாக கூட்டப்பட்டு சுதந்திரமான பிரச்சாரம், கவனம் குவித்த துறைகள் மற்றும் பகுதிகளில் வேலை, அணிதிரட்டல் ஆகியவற்றை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். கூட்டுக் கமிட்டியில் அங்கம் வகிக்கிற அதே வேளையில் நமது சுதந்திர செயல்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும்.

¶ ஒன்றிய மட்டத்தில், வேலை நிறுத்த ஆயத்தப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். முதற்கட்டமாக ஒன்றிய அளவில் கூட்டு தயாரிப்பு பெருந்திரள் கருத்தரங்குகள் நடத்திட வேண்டும்.

¶ துண்டறிக்கைகள் மற்றும் பரப்புரை கூட்டங்கள் :-

உலக நாடுகள் மீது அமெரிக்க  ஏகாதிபத்தியம் வர்த்தகப்  போரை திணிப்பது, விவசாயம் மற்றும் கிராமப்புறத்தில் அதன் தாக்கம், 4 தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை இரத்து செய்வது, விவசாய தொழிலாளர்கள் வேலை உறுதி திட்ட நிதி வெட்டு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் ஆகியவை குறித்த பிரசுரங்கள், துண்டறிக்கைகள் ஆயிரக்கணக்கில் விநியோகம் செய்யப்பட வேண்டும்.

கிராமப்புற பகுதிகளில் மே 1 துவங்கி உழைப்பாளி மக்கள், விவசாயிகள்  மத்தியில் மோடி ஆட்சிக்கு எதிரான வலுவான பரப்புரையை துண்டறிக்கை, ஊர் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், சைக்கிள் பிரச்சாரம், இருசக்கர வாகன பேரணி  இன்ன பிற வடிவங்களில் எடுத்துச் செல்ல வேண்டும். மாவட்டங்களில் தேர்ந்தெடுத்த ஒன்றியங்களில் ஆழமான பரப்புரை இயக்கத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.

கிராமப்புற பகுதிகளில் நமது முழுக் கவனமும் கிராமப்புற உழைப்பாளி மக்களை, சிறு குறு விவசாயிகளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட செய்வது என்பதாக இருக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர் உள்ளிட்ட அனைத்துவகை கிராமப்புற தொழிலாளரையும் வேலை நிறுத்த நடவடிக்கையில் ஈடுபடுத்திட வேண்டும்.

கிராமப்புறங்களில் உள்ள வியாபாரிகள், சிறு தொழில் முனைவோரை அணுகி ஜூலை 09ம் தேதி அன்று கடைகள், நிறுவனங்கள் கதவடைப்பு செய்வதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

மொத்தத்தில், கிராமப்புறத்தில் நமது  முயற்சிகள்  “பந்த்” என்பதாக உருவாக வேண்டும்; நமது சுதந்திர அணி திரட்டல், போர்க்குணமிக்க போராட்டம் என்பதாக ஜூலை 09 வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *