தமிழ்நாடு சட்டமன்றத்தில், “இங்கு பேசிய அமைச்சர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது உங்கள் துறையை வளர்த்தெடுத்ததற்கு, உங்களின் திறமை காரணமாக இருந்தாலும் இந்த வளர்ச்சிக்கு அடிப்படையான-முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. அதுதான் மாநிலத்தில் அமைதி! அதற்கு என்னுடைய துறையான காவல்துறைதான் காரணம். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது, அதனால்தான் வெளி மாநிலத்தவர்கள் இங்கு வந்து கொள்ளையடிக்க வருகிறார்கள்” என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது பேசினார். கொள்ளை நடக்கிறது என்றால் அங்கே அமைதி இல்லை என்றுதானே பொருள்? ஸ்டாலின் மேலும் பேசும் போது,‘ உள்நோக்கத்தோடு, அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று பேசுபவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன், இது மணிப்பூர் அல்ல, இது காஷ்மீர் அல்ல, உத்தரப்பிரதேச கும்பமேளா மரணங்கள் இங்கு நடக்கவில்லை, இது தமிழ்நாடு அதை மறந்துவிடாதீர்கள்’ என்றார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதால்தான் சாதிச் சண்டை, மதக் கலவரம் இல்லை இல்லை என்கிறார். அது என்னவோ உண்மைதான். தமிழ்நாடு உத்தரபிரதேசம் இல்லைதான். இங்கு சாதிச் சண்டை இல்லைதான். அதற்குப் பதிலாக சாதியாதிக்கக் கொலைகள் அல்லவோ நடக்கின்றன. தலித் மக்கள் நாளும் தாக்கப்படுகிறார்கள். அவர்கள் குடியிருப்புகள் சூறையாடப்படுகின்றன. நான்குநேரி சின்னத் துரை, திருவைகுண்டம் தேவேந்திர ராஜா என பள்ளியில் படிக்கும் தலித் மாணவர்கள் சக மாணவர்களால், நண்பர்களால் சாதி வெறி கொண்டு கொலை வெறித் தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார்கள். மதக் கலவரம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், சங்கிகளுடைய சனாதனக் கருத்துகளும் வெறுப்பு அரசியலும் தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில்தான் இஸ்லாமியர்கள், பழங்குடி மக்கள் விசாரணையே இல்லாமல் பல பத்தாண்டுகளாகச் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். கலவரம் என்று சொன்னால், சண்டை என்று சொன்னால் இரண்டு தரப்பிலிருந்தும் தாக்குதல் நடக்கும். ஆனால், இங்கு ஒரு தரப்பின், ஆதிக்க சக்திகளின் கை மட்டுமே ஓங்கி இருக்கிறது. பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. பிரச்சனைகளை வெளியே தெரியவிடாமல் அமிழ்த்தி வைத்தாலும் அமைதி போலத்தான் தெரியும். மே நாள் ஊர்வலங்களுக்குக் கூட பல ஊர்களில் காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போராட்டங்களுக்கு, ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுக்கிறது காவல்துறை. அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. தமிழ்நாடு சட்டப் பேரவை நடக்கிறபோது, தங்கள் கோரிக்கைகளை அரசுக்குத் தெரிவிப்பதற்காக சென்னை நோக்கி புறப்பட்ட மாற்றுத் திறனாளிகள் அவரவர் ஊர்களிலேயே ரயில்களில், பேருந்துகளில் ஏற விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். மாற்றுத் திறனாளிகள் என்று கூடப் பார்க்காமல், அவர்களிடத்தில் காவல்துறை முரட்டுத் தனமாக நடந்து கொண்டது மட்டுமின்றி, கைது செய்து மண்டபத்தில் அடைத்தது. இப்படி அடக்குமுறையை ஏவி விட்டுவிட்டு அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று சொல்வதில் என்ன பொருள் உள்ளது. போராடுபவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுவிட்டால் அவர்கள் ஏன் போராட்டக் களத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்? காவல்துறைக்குக் கட்டுப்பாடற்ற அதிகாரம் வழங்கி, மக்களை அச்சத்திலேயே வைத்திருக்கச் செய்யும் பாசிச பாஜக ஆளும் மாநிலங்களில் செய்வதுபோலவே தமிழ்நாட்டிலும் தன் துறை என்று பெருமையாகப் பேசிக் கொள்ளும் காவல்துறையின் செயல்பாடுகள் உள்ளன. கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக எடுத்த சிறப்பான நடவடிக்கையால் கடந்த ஆண்டை காட்டிலும் தமிழ்நாட்டில் குற்றங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டில் பதிவான ஆதாயக்கொலை வழக்குகளின் எண்ணிக்கை 83 ஆக இருந்தது, அதேசமயம் 2024ம் ஆண்டில் இது 75 வழக்குகளாக குறைக்கப்பட்டது. இதனால், 2023 உடன் ஒப்பிடும்போது 2024ம் ஆண்டில் 8 வழக்குகள் (10%) குறைந்துள்ளன. 8 வழக்குகள் குறைந்துள்ளன என்று பெருமை பேசுகிறார். இதில் எத்தனை வழக்குகள் பதிவாகாமல் உள்ளனவோ? தமிழக முதல்வர், இது கட்சியினுடைய அரசு அல்ல, ஒரு கொள்கையினுடைய அரசு என்கிறார். ஆனால், அந்தக் கொள்கையை, பெரியாரியக் கொள்கையை, சாதி மறுப்புக் கொள்கையை கறாராக அமல்படுத்த இன்னும் கவனம் செலுத்தப்படவேயில்லையே?!
தலையங்கம் – அமிழ்ந்து கிடப்பதெல்லாம் அமைதியல்ல!
