மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தல் முடிவுகள் ஏப்ரல் 28 அன்று வெளிவந்துள்ளன. “துளைத்தெடுக்கும் தேர்தல் போட்டியை”க் கண்ட மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்பு பெரும்பான்மை பெற்று வென்றுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸால் “பீகாரிலிருந்து மற்றுமொரு நிதிஷ் குமார் என்று குறிப்பிடப்படும் அய்சா மாணவர் தலைவர் நிதிஷ் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். சென்றமுறை தலித் சமூகப் பின்னணி கொண்ட தனஞ்ஜெய்யைத் தொடர்ந்து இம்முறை மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நிதிஷ் தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றுள்ளார். துணைத்தலைவர், பொதுச் செயலாளர் பதவிகளுக்கு மானிஷா, முண்டேகா வெற்றி பெற்றுள்ளனர். சென்ற 2024 தேர்தலில் அனைத்துப் பதவிகளுக்கும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் வெற்றி பெற்றிருந்தன. இம்முறை துணைச் செயலாளர் பதவியை ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி கைப்பற்றியுள்ளது.
எட்டாயிரத்து எண்ணூறுக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட ஜெஎன்யூவில் 44 கவுன்சிலர் பதவிகளுக்கும் 4 தலைமைப் பதவிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் இம்முறை 73% மாணவர்கள் வாக்களித்துள்ளனர். தேர்தல் பரப்புரை மிகவும் எழுச்சிகரமாக திருவிழாவாகவே இருந்தது. ஒன்றுபட்ட இடதுசாரி மாணவர் அமைப்பான அய்சா-டிஎஸ்எப் நடத்திய தீப்பந்த ஊர்வலம் பல்கலைக்கழக வளாகத்தையும் தாண்டி நாடுதழுவிய அளவில் சமூக ஊடகங்களில் கொண்டாட்டமாகப் பரவியது. இது தேர்தல் முடிவுகள் பற்றிய நாடுதழுவிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
1969ல் ஏற்படுத்தப்பட்ட ஜெஎன்யூவில், 1975 முதல் மாணவர் பேரவைத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் 2008 முதல் 2011 வரை நான்கு ஆண்டுகள் தேர்தல் தடைசெய்யப்பட்டிருந்தது. நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு நடந்த தேர்தலில் அய்சாவின் அகில இந்திய தலைவர் சுசேதா தே தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றார். மாணவர் பேரவைத் தேர்தல்கள் நடந்த கடந்த 46 ஆண்டுகளில் 34 முறை இடதுசாரி மாணவர் தலைவர்கள், தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றுள்ளனர். மற்ற பதவிகளுக்கும் பெரும்பாலான சமயங்களில் இடதுசாரி மாணவர் தலைவர்களே வெற்றி பெற்றுள்ளனர். ஒருமுறை மட்டுமே வலதுசாரி ஏபிவிபி மாணவர் அமைப்பு வெற்றி பெற்றது. எனவேதான் டெக்கான் க்ரானிக்கள் ஏடு “ஜெஎன்யூ இன்னும் சிவப்பாகவே உள்ளது” என எழுதுகிறது.
1990 ஆகஸ்ட் 9 அன்று உபியில் உருவான அகில இந்திய மாணவர் கழகம்-அய்சா- 1993ல் நடைபெற்ற ஜெஎன்யூ மாணவர் பேரவைத் தேர்தலில் அபாரமாக வெற்றி பெற்றது. ஒருமுறை துணைத்தலைவர் பதவிக்கு வெற்றி பெற்ற சந்து-தோழர் சந்திர சேகர்- அடுத்தடுத்து இரண்டுமுறை தலைவர் பதவிக்கு வெற்றிபெற்று பணியாற்றினார். 1993ல் அய்சா பெற்ற வெற்றி அரசியல் ரீதியாக மிகவும் குறிப்பிடத்தக்கது. “பாசிசத்தின் காலடி ஓசையை” வெளிப்படுத்திய 1992 பாபர் மசூதி இடிப்புக்கு பின்னர், பாசிச அச்சுறுத்தல் கண்டு விழிப்பு பெற்ற மாணவர் அரசியலின் எழுச்சியை அடையாளப்படுத்தியது. 2025ல் இடதுசாரி மாணவர் அமைப்பு பெற்ற வெற்றியும் அரசியல் ரீதியாக மிகவும் குறிப்பிட்டுக் கூற வேண்டியதாகும். மோடி அரசின் பாதுகாப்புத் தோல்வியால் ஏற்பட்ட பயங்கரவாதப் படுகொலையை அடுத்து, மோடி தனது அரசின் தோல்வியை மறைத்துக் கொள்ள, ராணுவ வெறிக்கூச்சலை எழுப்பிக் கொண்டிருந்தார். இந்தக் கூச்சல் ஜெஎன்யூ தேர்தலை, தேர்தல் முடிவுகளை எதுவும் செய்ய முடியவில்லை. மாறாக, மோடியின் ராணுவ வெறிக்கூச்சலுக்கு பதிலடியாகவே இருந்தது. அதனால்தான் அந்த ஏடு, “ ஜெஎன்யூ இன்னும் சிவப்பாகவே உள்ளது” என மிகப் பொருத்தமாக எழுதியுள்ளது.
75-76 தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர் சீதாராம் யெச்சூரி, அடுத்த ஆண்டு பிரகாஷ் கரத் என இடதுசாரி மாணவர் தலைவர்கள் தொடங்கி வைத்த ஓட்டம், மாறி மாறி இடது மாணவர் அமைப்புகளின் வெற்றியால் இன்றுவரை தொடர் ஓட்டமாகவே உள்ளது. இப்போது காங்கிரசில் இணைந்துள்ள கன்னய்யாகுமார், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்ததற்காக தேசதுரோக பொய்க்குற்றச்சாட்டில் அய்ந்தாண்டுகளுக்கு மேலாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர்கலித், சிவானில் அரசியல்படுகொலை செய்யப்பட்ட சந்து(சந்திரசேகர்) என தலைவர்களை வரிசையாக ஜெஎன்யூ உருவாக்கியுள்ளது. 2006 முதல் அகில இந்திய மாணவர் கழகம் -அய்சா- தொடர்ந்து வென்று வருகிறது. கவிதா கிருஷ்ணன், 2004-2006 இரண்டுமுறை மோனாதாஸ், 2012ல் அய்சா மாணவர் தலைவராக இருந்த சுசேதா டே, (இககமாலெ மத்தியக் கமிட்டி உறுப்பினர்), அய்சா மாணவர் தலைவராக இருந்த சாய்பாலாஜி, ஜெஎன்யூ மாணவர் பேரவையில் பொதுச்செயலாளராக வெற்றி பெற்றிருந்த சந்திப் சவுரவ் (பீகார் சட்டப்பேரவை உறுப்பினர்), சென்ற ஆண்டு தனஞ்செய் என பல தலைவர்களை ஜெஎன்யூ தந்து கொண்டே இருக்கிறது.
தலைவர்கள் தானே உருவாகிவிடவில்லை. பல்கலைக் கழக வளாக ஜனநாயகம், ஆசிரியர்-ஊழியர் ஒற்றுமை, கட்டணக் குறைப்பு, புதிய பொருளாதாரக் கொள்கை எதிர்ப்பு, தேசந்தழுவிய, உலகம் தழுவிய முக்கிய பிரச்சனைகளில் கருத்துப்பரிமாற்றங்கள், உரத்த விவாதங்கள், அறிவுச்சுதந்திரம்; அவசர நிலைப் பிரகடன எதிர்ப்பு தொடங்கி தற்போது பாசிச புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அரசமைப்புச்சட்ட பாதுகாப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகளில் இடதுசாரி வழிப்பட்ட போராட்டங்களில் மாணவர்களை அணிதிரட்டுவதில் பெற்ற வெற்றியே இடதுசாரி மாணவர் தலைவர்கள் பெற்ற வெற்றியாகும். இதன் முன்னுதாரணமிக்க, பகத்சிங்கை ஒத்த தலைவராக உருவெடுத்தவர் தோழர் சந்து (சந்திர சேகர்)! நாட்டின் தேசபக்த, சோசலிச, ஜனநாயக பாரம்பரியத்தால் உருக்கப்பட்டவர்கள், அவற்றை இன்னும் ஆக்கபூர்வ வழியல் உரமூட்டியவர்கள். இதனால்தான் தேசத்தின் தலைநகரிலுள்ள ஜெஎன்யூ மாணவர் தேர்தல் தேசம் முழுவதும் ஈர்ப்பை பெற்றிருக்கிறது. அதனாலேயே “ஜெஎன்யூ இன்னும் சிவப்பாகவே உள்ளது”.
இந்தப் பெருமையை ஜெஎன்யூ, சாதாரணமாக பெற்றுவிடவில்லை.
பத்தாண்டுகளுக்குப் பிறகு ஏபிவிபி, முக்கிய பதவிகளில் ஒன்றில் வெற்றி பெற்றிருப்பதை, இடது மரபுக்கு கவலை அளிப்பது, என்று ஏடுகள் எழுதுகின்றன. வெற்றி பெற்ற மாணவர் அமைப்புகளும் இதை ஒரு எச்சரிக்கையாகவே கருதுகின்றன. ஆனால் இந்த தேர்தலில், ஒன்றிய அரசு ஆதரவு பல்கலைக் கழக நிர்வாகம்- ஆர்எஸ்எஸ் ஆதரவு-பணபலம்- ஏபிவிபி குண்டர் வன்முறை இவற்றை வீரதீரமுடன் எதிர்த்துப்போராடியே வெற்றி பெற்றுள்ளனர். வேட்பு மனு திரும்பப்பெறும் நாளன்று கூட ஏபிவிபியினர் கடும் வன்முறையில் ஈடுபட்டனர். தேர்தல் அலுவலகத்தின் மீது கடும் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டனர். நியாயமான வெளிப்படையான தேர்தலை சீர் குலைப்பது ஏபிவிபி வன்முறையாளர்கள் நோக்கமாக இருந்தது. இந்த அச்சுறுத்தலை எதிர்கொண்டு தேர்தலை நியாயமாக நடத்திய தேர்தல் குழுவை அய்சா – டிஎஸ்எப் மாணவர் அமைப்புகளும் மாணவர், ஆசிரியர்களும் பாராட்டியுள்ளனர். ஏபிவிபிக்கு இது புதிதல்ல. கடந்த 2020, 2022 ஆண்டுகளில் ஏபிவிபியினருடன் வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குண்டர்களுடன் ரத்தக் களறியில் ஈடுபட்டனர் பெண் மாணவர்கள், மாணவர் தலைவர்கள் தாக்கப்பட்டனர். விடுதி வாசல்கள் ரத்தம் தோய்ந்த வாசல்களாகின. அசைவு உணவு வழங்கக் கூடாது என்று கூறி உணவுவிடுதிகளை சூறையாடினர். இந்த தாக்குதல்களைக் கண்டு இந்தியாவே அதிர்ச்சி அடைந்தது. பாசிச ஆட்சியாளர்கள் ஆதரவுடன் நடந்த இந்த தாக்குதல்களை ஜனநாயக சமுதாயம் வன்மையாக கண்டித்தது. உலகப் புகழ் பெற்ற இந்தப் பல்கலைக் கழகத்தில் நடந்த இந்த வெறியாட்டத்தை உலகிலுள்ள அறிவாளி சமூகமும் கண்டித்தது. ஜெஎன்யூ இந்தியாவின் மனசாட்சியாகவும் விளங்கி வருகிது. இணைச்செயலாளர் பதவிக்கு வெற்றிபெற்றுள்ள ஏபிவிபி தலைவர் ..மீனா தனது வெற்றியை “கருத்தியல் கொடுங்கோன்மைக்கு எதிரான ஜனநாயகப்புரட்சி” என்று கூறிக் கொள்கிறார். நாட்டின் ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலான ஆர்எஸ்எஸ்- பாஜக கருத்தியலால் உந்தப்பட்டவர் இவ்வாறு தலைகீழாக சொல்வது வேடிக்கையானது. அதுமட்டுமின்றி, குறைவான வாக்குகளும் வாக்குப் பதிவும் இருந்த இடங்களில் சில கவுன்சில்கள் பொறுப்புக்கு வென்றுள்ள ஏபிவிபி சுயேச்சையாக வென்ற கவுன்சிலர்களை தனது கணக்கில் சேர்த்து அதிக இடங்களில் வெற்றிபெற்றதாக காட்டும் மோசடியை தேர்தல் குழு வெளியிட்டுள்ள வாக்கு விவரங்களும் முடிவுகளும் காட்டுகின்றன. பாஜக பல்கலைக் கழகத்தில் படிக்கும் ஏபிவிபி அதே தந்திரத்தை காப்பியடிக்க முனைகிறது. மேனாள் தலைவர் தனஞ்ஜெய், ஜெஎன்யூவில் என்றும் செங்கொடிதான் பறக்கும் காவிக் கொடி பறக்க முடியாது என்று கூறுகிறார். இந்த உணர்வோடு இன்னும் துடிப்போடு பரந்த மாணவர்களை, இடது சக்திகளோடு கூடுதல் இணக்கம் காணும் முயற்சியோடு செல்லும் என்று எதிர் பார்க்கலாம். இடது அணியில் ஏற்படாமல் போன பரந்த ஒற்றுமை நிச்சயம் ஏபிவிபி ஒரு இடத்தில் வெற்றிபெற காரணமாகி உள்ளது என்பது உண்மைதான். ஆனால், எஸ்எப்அய் தனது மொத்த “அரசியல் சாகசத்தையும்” மற்றவர் மீது திணிக்கப் பார்க்கிறது. கடந்த ஆண்டு இடது அணியில் இடம் பெற்று வென்றிருந்த எஸ்எப்அய் தலைவர், அய்சா தலைவர் தனஞ்ஜெய்க்கு ஒத்துழைப்பு தரமறுத்து முரண்டு பிடித்ததின் தொடர்ச்சியாகத்தான் இந்த ஆண்டு இடதுசாரிகளின் பரந்த ஒற்றுமைக்கு முட்டுக்கட்டையாகிப் போனது.
தலைவர் பொறுப்புக்கு வெற்றிபெற்றுள்ள நிதிஷ்குமார், ஜெஎன்யூ சந்திக்கும் நிதி நெருக்கடியை தீர்க்க முன்னுரிமை அளிக்கப்போவதாகக் கூறுகிறார். மாணவர்களும் பல்கலைக் கழகமும் எதிர் கொள்ளும் கட்டமைப்பு ரீதியான தாக்குதலை எதிர்த்துப் போராட உறுதியாக உள்ளார். கொரோனாவை பயன்படுத்தி நேரடி வகுப்புகளை மூடிவிட்ட பல்கலைக் கழக நிர்வாகத்தைக் கண்டித்து 16 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி மாணவர்களைத் திரட்டி நேரடி வகுப்பு நடத்த வைத்ததில் நிதிஷ் முதன்மைப் பங்கு வகித்துள்ளார். ஜெஎன்யூவை பாதுகாக்க இடதுசாரி மாணவர் அமைப்புகளும் மாணவர்களும் போராடி வருகின்றனர். ஆனால், ஏபிவிபி மாணவர் அமைப்பு ஜெஎன்யூவை மூடவைப்பதற்கு போராடி வருகிறது. சென்ற ஒருமுறை தலைவர் பொறுப்புக்கு வென்றிருந்த ஏபிவிபி பிரதிநிதி “ஜெஎன்யூவை மூடுவோம்” என்னும் இயக்கத்தை நடத்தி தோல்வி முகம் கண்டார்.
இடதுசாரி மாணவர் அமைப்பு இன்னும் பல நல்ல விஷயங்களை செய்துள்ளதால் வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளதென்று டைம்ஸ் ஆப் இண்டியாவிடம் பேசிய ஆராய்ச்சி மாணவி தாத்ரி கூறினார். தேர்தல் முடிவுகள் அதுபோலவே அமைந்துள்ளன.
நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களிலேயே மாணவர் அரசியலில் ஒரு வழிகாட்டும் பல்கலைக் கழகமாக ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் விளங்குகிறது. கல்வியில் நாட்டிலேயே மிகவும் முன்னேறியுள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உண்மைதான். ஆனால், வளாக ஜனநாயகத்தில், கல்விச் சுதந்திரத்தில் தமிழ்நாடு கடைக்கோடியில் உள்ளது. அரசு நிறுவனங்களுடன் போட்டியிட்டு வளரும் தனியார் கல்வி நிறுவனங்கள் அப்பட்டமான பிற்போக்கு உறைவிடங்களாக உள்ளன. அண்ணா, காமராஜர், பெரியார், பாரதியார் பல்கலைக் கழகச் சம்பவங்கள் வெறும் விதிவிலக்கல்ல. ஆர். என். ரவியின் அடாவடிகளை எதிர்த்துப்போராட பல்கலைக் கழகங்களில் மாணவர் அமைப்புகள் இல்லாதது பெரும் குறை. மாணவர் அரசியல், வளாக ஜனநாயகம் முற்போக்கான ஜனநாயக மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதற்கு ஜெஎன்யூ ஒரு எடுத்துக்காட்டு. பல்கலைக் கழகங்களை ‘அரசியல் பாசறைகளாக’ பயன்படுத்திக்கொண்ட திராவிட கட்சிகள், ஆட்சிகள் மாணவர் அரசியலுக்கும் அரசியல் பாசறைகளுக்கும் மூடுவிழா நடத்தியதே தமிழ்நாட்டில் தலைதூக்கும் பல துயரங்களுக்கும் முதன்மைக் காரணம். தமிழ்நாட்டில், கல்வி நிறுவனங்களில் வளாக ஜனநாயகம் வேண்டும், கல்விச் சுதந்திரம் வேண்டும். கல்வி நிறுவனங்களில் மீண்டும் மாணவர் பேரவைத் தேர்தல்கள் கொண்டுவரப்பட வேண்டும். இந்த கோரிக்கையை அய்சா உள்ளிட்ட இடதுசாரி மாணவர் அமைப்புகள் வலுவாக எழுப்ப வேண்டும்.
ஜெஎன்யூ மாணவர் பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தி வெளியிட்ட பெண் ஊடகவியலாளர் சோமா சோலங்கி, “ஜெஎன்யூ வகுப்பறைகளில், விடுதிகளில், நடைபாதைகளில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கும், செழித்தோங்கும்” என்று முடித்தார். இது ஜெஎன்யூ வுக்கு மட்டுமான செய்தியல்ல; இந்தியாவுக்கான செய்தி, தமிழ்நாட்டுக்குமான செய்தி.
-ஆசிரியர் குழு
அய்சாவின் மேனாள் தலைவரும் சிபிஐ எம்எல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் வீ.சங்கர் கூறியது
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல்களில் அகில இந்திய மாணவர் கழகம் (அய்சா) பல முறை வெற்றி பெற்றிருக்கிறது என்றாலும், இம்முறை பெற்ற வெற்றி பல மடங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனென்றால், வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு முன்பே இடதுசாரி கோட்டை தகர்ந்தது, சரிந்தது என பத்திரிக்கைகள் எழுதிவிட்டன. அதையும் மீறி அய்சா-டிஎஸ்எஃப் அணி வென்றிருக்கிறது.
ஜேஎன்யுவில் இடதுசாரி அரசியல் செல்வாக்கைத் தகர்ப்பதற்காக, ஜேஎன்யு நிர்வாகம் மட்டுமல்ல, டெல்லி அரசு மட்டுமல்ல, ஏபிவிபி மட்டுமல்ல, ஒன்றிய அரசும் கூட பத்தாண்டுகளுக்கும் மேலாக முயற்சித்து வருகிறது.
போராட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாணவர் சேர்க்கை கொள்கையை மாற்றி, சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், கிராமப்புறங்களிலிருந்தும் பின்தங்கிய மாணவர்கள் சேர்வது குறைக்கப்பட்டது. மதவெறி அரசியல் வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் பலதும் மாற்றியமைக்கப்பட்டன. கூடுதலாக, இம்முறை இடது, முற்போக்கு சக்திகள் பிரிந்து நின்று தேர்தலைச் சந்தித்தன. ஆனாலும், அனைத்தையும் மீறி அய்சா வெற்றி பெற்றது பலமடங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
பாசிசம் இல்லை என சொல்லி, மதவெறி சக்திகள் முதன்மை அபாயம் அல்ல என்கிற புரிதலின் பின்னணியில் இடதுசாரி ஒற்றுமை சிதைந்து போனதோ என்கிற கவலை பலருக்கும் இருக்கிறது. அது உணமையல்ல என்றே நம்ப வேண்டும்.
மதவெறி பாசிச சக்திகளுக்கு எதிரானதோர் பரந்துபட்ட ஒற்றுமையைக் கட்ட வேண்டியதன் அவசியத்தை ஒரு கொள்கையாக கடைபிடிக்க வேண்டும் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
ஆனாலும், புரட்சிகர இடதுசாரி மாணவர் அமைப்பு அதையும் மீறி பெற்ற வெற்றி எதிர்காலம் இடதுசாரிகளுடையது என்பதை சுட்டுவதாகவே இருக்கிறது.
என். சாய் பாலாஜி(ஜெஎன்யூ மேனாள் மாணவர் பேரவைத் தலைவர்-2018-2019) முகநூல் பதிவிலிருந்து
ஜெஎன்யூ வின் முற்போக்கு ஜனநாயக அறுதியிடல், ஏபிவிபி-ஜெஎன்யூ நிர்வாகம்-ஆர்எஸ்எஸ் ன் இடைவிடாத பிளவுவா நிகழ்ச்சிநிரலை அழிக்கிறது.
ஜெஎன்யூவின் செய்தி தெளிவானது, திட்டவட்டமானது: விளிம்புநிலையினரது ஒற்றுமை எந்தவொரு சூழலிலும் பாசிசிஸ்டுகளை தோற்கடிக்கும்.
ஜெஎன்யூ நிர்வாகமும் மோடி நிர்வாகமும் ஜெஎன்யூ வை அழிக்க ஆனதெல்லாம் செய்து பார்த்தது….
ஆனபோதும், அய்சா-பிடிஎப் ன் முற்போக்கு ஜனநாயக அறுதியிடல் ஜெஎன்யூ துணை வேந்தரின் இடைவிடாத பிளவு நிகழ்ச்சி நிரலை தோற்கடித்து விட்டது.