ஆர்எஸ்எஸ் – பாஜகவில் எனது அனுபவங்கள்” என்ற டாக்டர் பார்த்தா பானர்ஜி எழுதிய புத்தகத்தை வெளியிட்டு, இகக (மாலெ) பொதுச் செயலாளர் திபங்கர் பேசிய உரையின் சுருக்கம்)
அன்புள்ள தோழர்களே! நண்பர்களே!
காந்தியின் கொலையாளிகள் இன்றைய ஆட்சியாளர்கள் என்ற இந்த புத்தகத்தை தமிழில் மொழியாக்கம் செய்து கொண்டு வரும் உங்களது முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. ஏனென்றால், மக்கள் ஆர்எஸ்எஸ் பற்றி நன்றாக அறிந்து கொள்வது முற்றிலும் அவசியம். இன்று இந்தியாவில் அரசியல் அதிகாரம், பொருளாதார ஆதிக்கம், சமூக செல்வாக்கு என அதிகாரத்தின் உச்சியில் பிஜேபி உள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு நிறுவனத்தையும் ஊடுருவி கட்டுப்படுத்தும் சக்தியாக உள்ளது. பிஜேபி-யின் இந்த எழுச்சிக்கு மையமாக இருப்பது ஆர்எஸ்எஸ் தான். பிஜேபி ஒரு புதிய அமைப்பு; 1980இல் தான் உருவாக்கப்பட்டது. 1984இல் பிஜேபி வெறும் இரண்டு நாடாளுமன்ற இடங்களை மட்டுமே வைத்திருந்த நிலையில் இருந்து, அத்வானி-வாஜ்பாய் காலம் வழியாக, இன்றைய மோடி-ஷா-யோகி காலம் வரை அது வளர்ச்சியடைந்துள்ளது. உண்மையில் பிஜேபி மட்டுமே பரிணமித்துள்ளது என்று நாம் அடிக்கடி எண்ணிக் கொள்கிறோம். ஆர்எஸ்எஸ் மிகவும் மரபுவாத, அடிப்படைவாத அமைப்பு என்று நாம் எண்ணுகிறோம். அது பிஜேபியை கட்டுப்படுத்த மட்டுமே முயற்சிக்கிறது என்றும் எண்ணுகிறோம்.
ஆனால், இந்த பாசிசத் திட்டத்தின் ஒரு பகுதியான பிஜேபி திட்டத்தில் நீங்கள் பார்க்கும் நெகிழ்வுத்தன்மை, தகவமைத்துக் கொள்ளுதல் அனைத்தும், ஆர்எஸ்எஸ்-இல் இருந்துதான் வருகின்றன. இந்தியாவின் நிலைமைகளுக்கும் சர்வதேச அரசியலின் தற்போதைய சூழலுக்கும் ஏற்ப பாசிச அடிப்படைகளை இணைப்பதும் ஆர்எஸ்எஸ்-இல் இருந்துதான் வருகின்றன. எனவே, ஆர்எஸ்எஸ் மிகவும் இயங்காற்றல் மிக்க ஒரு அமைப்பாகும். அதை வெறுமனே ஒரு வெறித்தனமான, அடிப்படைவாத, மரபுவாதக் குழு என்று கருதுவது முற்றிலும் தவறு. அது அப்படி இல்லை.
நீங்கள் ஜாலியன்வாலாபாக் படுகொலையை, தியாகிகளை நினைவுகூர்வதுடன் இந்த நிகழ்வை தொடங்கினீர்கள். இன்று ஏப்ரல் 13, ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழ்த்தப்பட்ட நாள். பகத்சிங்கின், பஞ்சாபின் புரட்சிகரத் தலைமுறையின் எழுச்சிக்கு காரணமாக இருந்த நாள். அவர்கள் அனைவரும் ஜாலியன்வாலாபாக் படுகொலையால் மிகவும் உணர்வுபூர்வமாக தூண்டப்பட்டனர். அது அவர்களின் தேசப்பற்று உணர்வை தூண்டி விட்டது. மேலும் அதனை மார்க்சிய திசையில் வளர்த்தது.
ஏப்ரல் 13, இரண்டு மகத்தான நாட்களுக்கு இடையே உள்ளது. ஒன்று, மகாத்மா ஜோதிபா பூலேயின் பிறந்த நாளான ஏப்ரல் 11. இன்றைய சூழலில் பூலேயின் வாழ்க்கையும் அவரது கருத்துகளும் மிகவும் பொருத்தமானவையாகும்.
மற்றொன்று ஏப்ரல் 14, பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த நாள். எனவே, நாம் இந்திய விடுதலை இயக்கத்தின் மாபெரும் மரபுகளான, காலனிய எதிர்ப்பு தேசப்பற்று இயக்கமும் சமூக சமத்துவம், சமூக மாற்றத்திற்கான இயக்கமும் ஒன்றிணைந்த புள்ளியில் இருக்கிறோம். இவை அனைத்தும் இந்திய விடுதலை இயக்கத்தை இயக்கும் சக்தியாக இருந்தன.
ஆனால் ஜாலியன்வாலாபாக் நிகழ்வாலோ, ஜோதிபா பூலேயின் கருத்துக்களாலோ அல்லது அம்பேத்கரின் தத்துவங்களாலோ ஆர்எஸ்எஸ் ஈர்க்கப்படவில்லை. அது தனக்கான உந்துதலை முசோலினி, ஹிட்லரிடமிருந்து பெற்றது. இதிலிருந்து நாம் ஆர்எஸ்எஸ்-ஐ புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப்பட்ட இந்த ஆர்எஸ்எஸ், 18ம் நூற்றாண்டின் பிற்பகுதி, 19ம் நூற்றாண்டு, 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த தேசப்பற்று, காலனிய எதிர்ப்பு போராட்டங்கள் ஆகியவற்றுடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை.
பாசிசம் அதன் குழந்தை பருவத்தில் இருந்த காலகட்டமான 1925 இல் ஆர்எஸ்எஸ் உருவாக்கப்பட்டது. 1922 இல் இத்தாலியில் முசோலினி அதிகாரத்திற்கு வந்தார். இன்று மோடி அரசாங்கத்தை டிரம்ப், எர்டோகன், போல்சோனாரோ போன்ற தீவிர வலதுசாரி தலைவர்களுடன் ஒப்பிடுகிறோம். ஆனால் இந்தியாவில் பாசிசத்தின் மையக் கூறு ஆர்எஸ்எஸ் தான். கார்ப்பரேட் ஆதிக்கம் அல்ல; பொருளாதார நெருக்கடி அல்ல.
பிஜேபி எப்போதுமே ஆர்எஸ்எஸ்-ஐ சுற்றியே சுழன்றுள்ளது. இந்த அமைப்பு தன் கருத்தியலிலும், செயல்பாட்டு முறையிலும், அமைப்பு ரீதியாகவும் நூறு ஆண்டுகளாக பாசிச மயமாகவே இருந்து வருகிறது. ஆக இதுதான் இந்தியாவில் இடைவிடாத பாசிசத் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இது அனைத்துமே, அதாவது ஆர்எஸ்எஸ் தன் பாசிச நோக்கை எவ்வளவு தூரம் செயல்படுத்த முடியும் என்பது அதன் அரசியல் சக்தியைப் பொறுத்ததாக உள்ளது.
உதாரணமாக சக்தி வாய்ந்த காலனிய எதிர்ப்பு விடுதலை இயக்கத்தின் போது, ஆர்எஸ்எஸ் ஓரஞ்சாரமான அமைப்பாகவே இருந்தது. வதந்திகள், வெறுப்பு, கலவரங்களை தூண்டுதல் என அனைத்து தந்திரங்களையும் செய்து பார்த்தது, ஆனால் ஆர்எஸ்எஸ்-ஆல் அதிகாரத்தில் ஏற முடியவில்லை. எனவே அது தோல்வியடைந்தது. ஆனால் இன்று அது அதிகாரத்தின் மையத்திற்கு வந்துவிட்டது. பிஜேபி, ஆர்எஸ்எஸ் மட்டுமல்ல, இந்துத்துவா கருத்தியலை செயலூக்கமாக அமல்படுத்தும் பல வண்ணக் கலவையான அனேக அமைப்புகள் உள்ளன. தேசியவாதத்தையே, இந்து தேசியவாதம் என தன் விதிமுறைகளில் வரையறுக்கிறது.
அது நூறாண்டுகளாக இருந்து வருகிறது, உண்மையில் 1949 இல் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட போது, ‘இந்த அரசியலமைப்பில் இந்தியத்தன்மை எதுவும் இல்லை’ என்று தலையங்கத்தில் எழுதியது. அவர்கள் அரசியலமைப்பை நிராகரித்தனர்; தேசியக் கொடியை நிராகரித்தனர்; வேறு பல விஷயங்களையும் நிராகரித்தனர். பின்னர், காந்தி கொலைக்குப் பிறகு அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அத்தடையிலிருந்து தப்பிக்க சில நடைமுறை வழிகளை அவர்கள் கண்டறிய வேண்டியிருந்தது. ‘நாங்கள் அரசியலமைப்பை ஏற்றுக்கொள்கிறோம்; கொடியை ஏற்றுக்கொள்கிறோம்; ஒரு கலாச்சார அமைப்பாக மட்டுமே இருப்போம்’ என்று சொன்னார்கள். இது தடையை தவிர்க்கவும், மீண்டும் மைய நீரோட்டத்திற்கு நகரவும் அவர்கள் செய்த ஒரு செயல்தந்திர மாற்றம் மட்டுமே. அந்த நேரத்திலிருந்து, அவர்கள் முன்னேற்றங்களையும் பின்னடைவுகளையும் கண்டிருக்கலாம்; ஆனால், பாசிச திட்டத்தில் சீராக நடை போடுகிறார்கள். அதன் எண்ணம், கருத்தியல், உறுதிப்பாடு மற்றும் தொடர்ச்சியான, இடைவிடாத முயற்சிகள் என எப்போதுமே அது பாசிச மயமாகவே உள்ளது.
பிஜேபி, இரண்டு விஷயங்களை இணைக்கிறது. முஸ்லிம்கள் மீதான வெறுப்பு அதன் மையமான கொள்கையாக உள்ளது. ஆனால், அது மட்டும் போதாது. பிஜேபிக்கு தேவையான சமூக சக்தி, கவர்ச்சி ஆகியவற்றை முஸ்லிம்கள் மீதான வெறுப்பு மட்டுமே தர முடியாது. எனவே, பிஜேபி மாநிலந்தோறும் முஸ்லிம்கள் மீதான வெறுப்பை, அங்குள்ள ஆதிக்க சமூக குழுவுக்கு எதிரான ஒரு சமூகக் கூட்டணியுடன் இணைக்கிறது. உதாரணமாக, ஹரியானாவில், ஜாட்கள் ஆதிக்க சமூகக் குழுவாக, காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆதரவாக இருந்தனர். எனவே, பிஜேபி பல பிற சாதிகளை ஒன்றிணைத்து, ஜாட்களுக்கு எதிரான ஒரு சமூகக் கூட்டணியை உருவாக்கியது. முஸ்லிம்கள் மீதான வெறுப்பு ஒரு பசையாக இந்த கூட்டணியைப் பலப்படுத்த பயன்படுகிறது. இதேபோல், விவசாயிகள் இயக்கம் நிகழ்ந்த பஞ்சாபில், விவசாயிகள் இயக்கம் குறித்த, பணக்கார விவசாயிகளின் எழுச்சி குறித்த தலித் விவசாயத் தொழிலாளர்களின் கவலைகளை பிஜேபி பயன்படுத்த முயற்சிக்கிறது. பீகார், உத்தரப்பிரதேசத்தில் யாதவர்கள் ஆதிக்கம் செலுத்தியதால், யாதவர்களுக்கு எதிராக அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்ட தலித்துகள், மிகவும் பின்தங்கிய பிரிவினர், யாதவர் அல்லாத பிற சாதிகள் அனைவரையும் பிஜேபி ஒன்றிணைக்கிறது. இவை அனைத்தும் ஆர்எஸ்ஸ்-ஆல் கண்காணிக்கப்படுகிறது, திட்டமிடப்படுகிறது, வழிநடத்தப்படுகிறது. இது சில பிஜேபி தலைவர்கள் மட்டும் தனிப்பட்ட முறையில் செய்யும் விஷயம் அல்ல. இன்று நாம் பார்க்கும் அனைத்து பரிசோதனைகளையும் ஆர்எஸ்எஸ் தான் முன்னெடுக்கிறது.
கடந்த 5-6 ஆண்டுகளாக, உலகளவில் தீவிர வலதுசாரி சக்திகளும் இயக்கங்களும் ‘தேசியப் பழமைவாதம்’ என்ற பொதுப் பெயரின் கீழ் ஒன்றிணைந்துள்ளன. ஆனால் ஹிட்லர் காலத்தில், ஜெர்மனியில் தங்கள் இயக்கத்தை ‘தேசிய சோசலிசம்’ என்று அழைத்தார்கள். ஏனென்றால் ரஷ்யப் புரட்சிக்குப் பிறகான அந்தக் காலத்தில் ‘சோசலிசம்’ என்பது பரவலான மக்களை கவரக் கூடிய சொல்லாக இருந்தது. எனவே, அது வெறும் தேசியவாதம் அல்லது தீவிர தேசியவாதம் மட்டுமல்ல, சோசலிசத்துடன் கலந்த ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று, சோசலிசத்துக்கு அந்த அளவு ஈர்ப்பு இல்லை. எனவே, உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள பாசிசப் போக்குகள் தங்கள் இயக்கத்தை ‘சோசலிசம்’ என்ற சொல்லில் மறைக்கத் தேவையில்லை. இன்று அவர்கள் தங்களை ‘பழம்பெருமைவாதிகள்’ அல்லது ‘தேசியப் பழம்பெருமைவாதிகள்’ என்று அறிவிக்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ், ‘தேசியப் பழம் பெருமைவாத’த்தின் வெற்றிக் கதையில் நாங்களே மிகப்பெரிய உதாரணம்’ என்று கூறுகிறது. ‘பல இடங்களில், தேசியப் பழம்பெருமைவாதிகள் தங்கள் தோல்விகளைப் பற்றி புலம்புகிறார்கள். ஆனால் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்’ என்று பறைசாற்றுகிறார்கள். ‘சிலர் எங்களை பாசிஸ்ட்டுகள் என்று குற்றம் சாட்டுகிறார்கள், ஆனால் யூதர்களையும் இஸ்ரேலையும் ஆதரிக்கும் நாங்கள் எப்படி பாசிஸ்ட்டுகளாக இருக்க முடியும்?’ என அவர்கள் வாதிடுகின்றனர். அவர்கள் நம்ப வைக்க முயற்சிக்கும் வாதம் என்னவென்றால், “பாசிசம் என்பது ஜெர்மனியில் ‘உறைந்துவிட்ட’ ஒரு கொள்கை. அதன் யூத எதிர்ப்பு கூட அங்கேயே உறைந்துவிட்டது. எனவே, பாசிசம் மாற்றியமைக்க முடியாதது, வளர முடியாதது” என்கிறார்கள். ஜெர்மனியில் பாசிசத்தின் ஒரு ‘உறைந்த நிழற்படத்தை’ எடுத்து, ‘இஸ்ரேலை ஆதரிப்பவர்கள் பாசிஸ்ட்டுகளாக இருக்க முடியாது’ என்று சொல்கிறார்கள். இன்று இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் செய்து கொண்டிருப்பது 21-ஆம் நூற்றாண்டின் இனப் படுகொலையாகும். மக்கள் அதை ஜெர்மனியில் நடந்த யூத இனப் படுகொலையுடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால் ஆர்எஸ்எஸ் கூறுவது என்ன? ‘நாங்கள் இஸ்ரேலை ஆதரிக்கிறோம், யூதர்களை நேசிக்கிறோம். எனவே நாங்கள் பாசிஸ்ட்டுகள் அல்ல!’ இது எத்தகைய ஒரு பெரும் கேலிக்கூத்து.
இன்று, இந்தியா-இஸ்ரேல் இடையே உள்ள கூட்டணி வெறும் பெகாசஸ், மொஸாத், பாதுகாப்புக் கண்காணிப்பு போன்றவற்றை மட்டும் குறிக்காது. இதன் பின்னால் ஒரு வலுவான கொள்கை உள்ளது. ஆர்எஸ்எஸ், பிஜேபி-யின் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு, சியோனிசத்துடன் கைகோர்த்து நிற்கிறது. இன்று, இஸ்ரேலின் இனப்படுகொலையை விமர்சிக்கும் எவரும் ‘யூத எதிர்ப்பாளர்கள்’ என்று குற்றம் சாட்டப்படுகிறார்கள். அதேபோல், பிஜேபி, ஆர்எஸ்எஸ்-யை விமர்சிக்கும் அல்லது கேள்வி கேட்பவர்கள் ‘இந்து வெறுப்பாளர்கள்’ என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். அவர்களின் வாதம் என்ன? முஸ்லிம்கள் மீதான வெறுப்பு என்பது கற்பனை; ஆனால் இந்து வெறுப்பு என்பது உண்மை!’ இதேசமயம், அவர்கள் ஒருபுறம் ‘ ‘பாதிக்கப்படும் இந்துக்கள்’ என்றும் மறுபுறம் ‘இந்து பெருமை’ என்றும் இரண்டு அட்டைகளைக் கொண்டு விளையாடுகிறார்கள்.
இவை அனைத்தையும் ஆர்எஸ்எஸ் பல பத்தாண்டுகளாக மெருகேற்றியுள்ளது. தங்கள் கொள்கையைக் கூர்மைப்படுத்தியுள்ளது, விரிவுபடுத்தியுள்ளது. இந்திய சூழலுக்கு ஏற்ப தகவமைத்துள்ளது. பிஜேபியும் ஆர்எஸ்எஸ்சும் அதிகாரத்தின் உச்சத்தை அடைந்துவிட்டன. அதை எதிர்க்கும் நிலையில் ஒரு ஒற்றை கருத்தியலோ, ஒற்றை கட்சியோ இன்று இல்லை என்பது உண்மைதான். பிஜேபி இன்று இடைவிடாமல் நமது அரசியலமைப்பைத் தாக்கிக்கொண்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்பு நமது விடுதலை இயக்கத்தின் மகத்தான படைப்பு. ஆனால், அதை மறுப்பதோடு மட்டுமல்லாமல், ‘உண்மையான சுதந்திரம் 1947-ல் வரவில்லை, ராமர் கோவில் குடமுழுக்கு நாளான 22 ஜனவரி 2024-ல் தான் வந்தது’ என்கிறார்கள். விடுதலை இயக்கத்தின் முழு மரபையே அவர்கள் மறுக்கிறார்கள்.
எனவே, இப்போது நாம் செய்ய வேண்டியது, விடுதலை இயக்கத்தின் மரபை மீட்டெடுப்பது தான். அந்த இயக்கத்தில் பல்வேறு கருத்தியல் நீரோடைகள் இருந்தன. ஆனால் எல்லாமே காலனிய எதிர்ப்பில், தேசியவாதத்தில், சுதந்திரத்தின் தேடலில் ஒன்றுபட்டிருந்தன. இன்று, நமக்குத் தேவை ஒரு கருத்தியல் ஒருங்கிணைப்பு. பிஜேபி-யைப் பல்வேறு அளவுகளில் எதிர்க்கத் தயாராக இருக்கும், அனைத்து கருத்தியல்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். எல்லா கருத்தியல்களும் ஒரே மாதிரியாக, ஒரே அளவில், ஒரே வகையான வெளிப்பாட்டுடன் பிஜேபி-யை எதிர்க்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஒரு தளர்வான கருத்தியல் ஒருமைப்பாடு சாத்தியமானால் கூட நல்லது தான். நமக்கு மிகவும் தேவையானது ஒரு ‘குறைந்தபட்ச பொதுத் திட்டம்’ போல ஒன்று.
இரண்டாவது, அரசியலமைப்பு மற்றும் அதன் பின்னால் உள்ள பாபா சாகேப் அம்பேத்கரின் சிந்தனை. அம்பேத்கரின் தீவிர சமூக மாற்றத்தின் மரபு இன்று மிகவும் அவசியம். துரதிர்ஷ்டவசமாக, விடுதலை இயக்கத்தின் போது இந்தியாவில் அந்தத் தீவிர சமூக மாற்றக் கருத்துகள் ஒன்றிணைய முடியவில்லை. 1936-ல் விடுத்த “சாதியை அழித்தொழித்தல்” என்ற அழைப்பு, விடுதலை இயக்கத்தின் மிகத் தீவிரமான முழக்கங்களில் ஒன்று. பகத்சிங் ‘இன்குலாப் ஜிந்தாபாத்! ஏகாதிபத்தியத்தை ஒழிப்போம்!’ என முழங்கினார். கம்யூனிஸ்டுகள் தலைமையிலான விவசாய இயக்கம் ‘நிலப்பிரபுத்துவத்தை ஒழிப்போம்!’ என முன்வைத்தது. ஆனால் இந்தத் தனித்தனிக் கருத்துகளும் முழக்கங்களும் ஒன்றிணைய முடியவில்லை. இன்று இவையனைத்தும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
ஆர்எஸ்எஸ் தன் கூட்டணிகளுக்காக ‘நடைமுறை நெகிழ்வுத்தன்மை’ கொண்டுள்ளது போல, நாமும் பல்வேறு சக்திகளை இணைக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, இந்திய பாசிசத்தின் முக்கிய அம்சமான அதீத மையப்படுத்தப்பட்ட மத்திய அதிகாரத்துவத்துக்கு எதிராக, கூட்டாட்சியை முன்னிறுத்தும் சக்திகளை இணைக்க வேண்டும். தொழிலாளர் இயக்கம், மாணவர் இயக்கம் அனைத்தும் இன்று கார்ப்பரேட் எதிர்ப்பின் தேவையை உணர்ந்துவிட்டன. கார்ப்பரேட் கொள்கைகள் வேலையை மட்டுமல்ல, இட ஒதுக்கீட்டையும், கல்வி வாய்ப்புகளையும் பறிக்கின்றன. தனியார்மயமாக்கல் ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும் கல்வி கிடைப்பதைத் தடுத்து விட்டது. இவையனைத்தும் பல்வேறு இயக்கங்களுக்கிடையே புதிய கூட்டணிகளுக்கான சாத்தியங்களை உருவாக்குகின்றன. ஆர்எஸ்எஸ்-ன் ‘நெகிழ்வான கோட்பாடு’ போலல்லாமல், நாம் ஒரு ஜனநாயக, சமத்துவ, சமூக மாற்றத்திற்கான பல்வேறு சக்திகளின் கூட்டுக் குரலாக ஒலிக்க முடியும்.
இந்த காலகட்டத்தில், ஆட்சியதிகாரத்தை விட்டு பிஜேபியை வெளியே நிறுத்த, பல்வேறு இயக்கங்களின் கூட்டணிகள், பரந்த கருத்தியல் ஒற்றுமை, பரந்த தேர்தல்-அரசியல் புரிதல் ஆகியவை தேவைப்படும். இதற்கு தமிழ்நாடு வெற்றிகரமான ஒரு சிறந்த உதாரணம். ஆனால், இதை நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நாம் சாதனைகளில் திருப்தி அடையக்கூடாது. ஏனெனில், பிஜேபி எல்லா இடங்களிலும் வளரும் திறனைக் காட்டியுள்ளது. தமிழ்நாட்டில் கூட அதன் வாக்கு விகிதம் வளர்ந்து வருகிறது. அதிமுகவின் சிதைவு பிஜேபி-க்கு நிறைய சமூக வெளியை வழங்கி வருகிறது. கேரளாவிலும் பிஜேபி மிகவும் வளர்ந்துள்ளது. எனவே, தென்னிந்தியா சில வரலாற்று அல்லது கலாச்சார காரணங்களால் பாசிசத்தை எதிர்க்கும் என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. பிஜேபியும் ஆர்எஸ்எஸ்ஸும்எந்த பகுதியிலும் ஊடுருவலாம் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளார்கள்.
உதாரணமாக, இந்தியாவில் கிறிஸ்தவர்கள் ஒரு முக்கிய சிறுபான்மை சமூகம். அவர்களும் பிஜேபியின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். கிரஹாம் ஸ்டெயின்ஸ் கொலை முதல் கும்பல் படுகொலை ஆகும். பின்னர் அது முஸ்லிம்களுக்கு எதிரான கும்பல் படுகொலைகளாக மாறியது. தேவாலயங்களின் மீதான தாக்குதல்கள், மத மாற்றத்துக்கு எதிரான போராட்டங்கள் எனவும் இருந்தன. ஆனால் இன்று கோவாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக பிஜேபி-ஆர்எஸ்எஸ்ஸுடன் இணைந்துள்ளனர். வடகிழக்கு இந்தியாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் அவர்களுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வதில் பிஜேபி-ஆர்எஸ்எஸ்ஸிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. கேரளாவில் வளர்வதற்கு ஆர்எஸ்எஸ்-பிஜேபி ஃபார்முலா இதுவாகவும் இருக்கலாம். எனவே, எந்த ஒரு சமூகமும் பிஜேபிக்கு எதிரானது என நாம் நினைக்கக்கூடாது. எந்த சூத்திரத்தையும் நம்பக்கூடாது. எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில் பாசிசம் மிகவும் இயங்காற்றல் மிக்கது. அது சமூக-அரசியல் கூட்டணிகளை உருவாக்கும் திறன் கொண்டது. பொருத்தமான கருத்துகள், ஆளுமைகள், வரலாறுகளை உருவாக்கும் திறன் கொண்டது.
அதனால் தான் நாம் ஒரு சக்திவாய்ந்த எதிரியை எதிர்கொள்கிறோம். இந்த புத்தகத்தில் கூறியுள்ளது போல், ஆர்எஸ்எஸ் ஒரு பழைய காலக்கட்டத்தை சேர்ந்தது என்ற கருத்து 1980களில் இருக்கலாம். ஆனால் இன்று நாம் மிகவும் அதிநவீன, மிகவும் சக்திவாய்ந்த, மிகவும் ஆபத்தான ஆர்எஸ்எஸ்ஸை எதிர்கொள்கிறோம். அது ஒரு இணைக்கும் காரணியாக, வழிகாட்டும் காரணியாக உள்ளது. ஆர்எஸ்எஸ் தான் எல்லாவற்றையும் செய்கிறது. இந்தியப் பாசிசத்தை புரிந்துகொள்வதில் உள்ள பெரும்பாலான தவறுகள், ஆர்எஸ்எஸ்ஸை புரிந்துகொள்ளாததில் இருந்தே வருகிறது. அதனால்தான் நாம் இன்னும் சில பொருளாதார அளவுருக்கள் அல்லது பிற அளவுருக்களை தேடுகிறோம். அவை இந்தியாவில் மீண்டும் நிகழ்த்தப்பட வேண்டியதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த ஆர்எஸ்எஸ் ஹிட்லர், முசோலினியின் காலத்தைச் சேர்ந்தது. அதற்கு கார்ப்பரேட் ஆதரவுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலுடன் போர்த்தந்திர கூட்டணி உள்ளது. இது இந்திய பாசிசத்தின் மற்றொரு பலமாக உள்ளது. எனவே, பாசிச எதிர்ப்பு இயக்கம் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானது. உள்நாட்டில் அவர்கள் சமூக அல்லது அரசியல் ரீதியாக பலவீனமான சக்திகளை அடக்கி ஆளுகிறார்கள். ஆனால் உலக அரங்கில், வரி, குடியேற்றக் கொள்கைகள், வேறு பல விசயங்களில் அமெரிக்காவின் முன் சரணடைகிறார்கள். பல சிறிய நாடுகள்கூட அமெரிக்காவிடம் எதிர்ப்பை காட்டுகின்றன. ஆனால் இந்தியா முழுமையாக சரணடைந்து விட்டது. எனவே நாம் பாஜகவின் தேசியவாதத்தை விமர்சிக்கவும், அம்பலப்படுத்தவும் முடியும்.
நாம் ஜாலியன்வாலாபாக் படுகொலையை, தியாகிகளை நினைவுகூர்ந்து தொடங்கினோம். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான இந்தியாவின் தேசியவாதம், இன்று அமெரிக்க, இஸ்ரேல் கூட்டணிக்கு எதிராக மேம்படுத்தப்பட வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்களின் நலன்களை மையமாக வைத்து, இன்றைய இந்தியாவில் ஒரு ஜனநாயக, முற்போக்கு தேசியவாதத்தை உருவாக்க வேண்டும். இதற்கு தேசப்பற்றுணர்வும் சர்வதேசிய உணர்வும் மக்களின் சுதந்திரத்திற்கான போராட்டமும் தேவை.