பஹல்காமில் நடந்த மிகக்கொடூரமான தீவிரவாதத் தாக்குதல், மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத்தின் மிருகத்தனத்தை நம்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப்பயணியும் பஹல்காமைச் சேர்ந்த ஒரு குதிரை வண்டி ஓட்டுநரும் அடங்குவர். இந்த நிகழ்வு உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கோரமான குற்றத்தை இழைத்த தீவிரவாதிகள் கண்டிப்பாக நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப கொலை செய்யவும் இரத்தத்தை உறைய வைக்கும் இத் தாக்குதலை திட்டமிட்டு நடத்தி விட்டு, தடையின்றி தப்பிச் செல்லவும் அனுமதித்த பல்வேறு மட்டங்களில் உள்ள குறைகளுக்கும் கோளாறுகளுக்கும் காரணமானவர்கள் கண்டறியப்பட்டு பொறுப்பாக்கப்பட வேண்டும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது, குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, ஜம்மு காஷ்மீரில் நடந்த ஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதலுக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பதில்களைக் கோரினார். டெல்லியில் உள்ள அதிகாரிகள் நாட்டின் எல்லை கட்டுப்பாடு, பணப் புழக்கம், தகவல் மற்றும் தகவல் தொடர்பு அனைத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்றிருந்தும், எப்படி தீவிரவாதிகள் எல்லையை தாண்டி வந்து தங்கள் விருப்பத்திற்கேற்ப மக்களை கொல்ல முடிகிறது? என்று நாவன்மைமிக்க நரேந்திர மோடி, மன்மோகன் சிங்கிடம் விளக்கம் கேட்கிற காணொளி, சென்ற பத்தாண்டுகளுக்கும் மே.லாக லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்த பஹல்காம் தாக்குதலில் தான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் முதன்முறையாக சுற்றுலாப் பயணிகள் இந்த அளவு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். மோடி குஜராத் முதல்வராக கேட்ட அதே கேள்விகள் இன்று மிகவும் பொருத்தமானவையாகும். இருப்பினும், இந்தியப் பிரதமராக மோடியின் ஆழ்ந்த மௌனம், குஜராத் முதல்வராக மோடி எழுப்பிய கேள்விகளை கேலி செய்வது போல உள்ளது.
இன்று ஜம்மு காஷ்மீர் ஒரு ஒன்றிய ஆட்சிப்பகுதி. அதாவது, இந்தப் பகுதியின் சட்டம், ஒழுங்கு முழுவதும் ஒன்றிய அரசாங்கத்தின் நேரடிப் பொறுப்பாகும். தீவிரவாதத்தை எதிர்கொண்டு கையாள்கிற ஒருங்கிணைந்த மத்திய கட்டுப்பாடு அமைப்பின் தலைவராக இருப்பவர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதலமைச்சரல்ல; மாறாக ஒன்றிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநர் தான் அதற்கு தலைவராக இருக்கிறார். ஏப்ரல் 22 இன் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு வெறும் இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்பு நிலவரத்தை மதிப்பாய்வு செய்ய அம்மாநிலத்திற்கு சென்றிருந்தார். அப்போது அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா அந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. எவ்வாறு மோடி அரசாங்கம் காஷ்மீரை தீவிரவாதத்தின் பெருந்தொல்லையிலிருந்து விடுவித்து, இயல்பு நிலைமையை மீட்டெடுத்துள்ளது என்று அந்தக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் ஷா கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இந்த மூவரும் தான் இன்று இதற்கு முதன்மைப் பொறுப்பை ஏற்க வேண்டும். மேலும் அவர்கள் பதவியை விட்டு விலகவும் வேண்டும். ஆனால் பொறுப்பைத் துறத்தலும் பொறுப்பேற்க மறுத்தலும் மோடி அரசாட்சியின் சின்னமாக மாறிவிட்டது.
தீவிரவாதத் தாக்குதல்களுக்கு வாய்ப்புள்ளது பற்றி அரசாங்கத்திற்கு முன்னரே உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தது குறித்து செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. 19 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நரேந்திர மோடியின் ஜம்மு காஷ்மீர் பயணம் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது என்பது இந்த செய்திகளுக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது. தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பல நாட்களாக அங்கேயே இருந்து, போதுமான அளவு நோட்டம் விட்டு தங்கள் திட்டங்களை மிகச் சரியாக தயார் செய்திருந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், பெருமளவு இராணுவமயமாக்கப்பட்ட இந்த மாநிலத்தில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காவல்துறையின் அல்லது இராணுவத்தின் எந்தவொரு பாதுகாப்பும் இன்றி முற்றிலும் பாதுகாப்பற்ற நிலையில் விடப்பட்டது என்பது அதிக அதிர்ச்சியைத் தருகிறது; ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. பல பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பாதுகாப்பு பகுப்பாய்வாளர்கள், காஷ்மீரை கவனிப்பவர்கள் இந்த முக்கியமான உளவு, பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் அரசாங்கமும் முக்கிய ஊடகங்களும் இதைப் பற்றி வியக்கத்தக்க வகையில் மௌனம் சாதிக்கின்றன.
மாறாக, முக்கிய ஊடகங்களும் சங்க்-பிஜேபி தகவல் தொழில்நுட்பக் குழுவும், பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலையொட்டி காஷ்மீரிகள் மற்றும் முழு முஸ்லிம் சமூகத்தையும் சாத்தான்களாக சித்தரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளை, குறிப்பாக, அவர்களின் மத அடையாளத்தின் அடிப்படையில் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தால், சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாகக் காப்பாற்றவும், காயமடைந்தவர்களை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் உள்ளூர் காஷ்மீரி முஸ்லிம்கள் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்தனர்; தங்கள் உயிர்களை தியாகமும் செய்தனர். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக எந்த பாதுகாப்பும் இல்லாமல், அதிகாரப்பூர்வ உதவி எதுவும் இல்லாத நிலையில், உள்ளூர் மக்கள் தலையீடுதான் பல உயிர்களைக் காப்பாற்றியது; இறப்பு எண்ணிக்கையை குறைக்க உதவியது. இந்தக் கொடூர தாக்குதலைக் கண்டித்தும் காஷ்மீர் பொருளாதாரத்தின் முக்கிய அடித்தளமான, அனேக மக்களின் வாழ்வாதாரமான சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்ட பெரும் அடியைக் கண்டித்தும் மக்கள் தெருக்களில் இறங்கினர். மேலும் எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தன்னிச்சையாக முழுக் கதவடைப்பு நிகழ்ந்தது. பஹல்காம் படுகொலைகளுக்குப் பிறகு, வீடு திரும்ப துடித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளிடம் விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில், காஷ்மீரிகள் தங்கள் இதயங்களையும் வீடுகளையும் திறந்து உதவிக்கரம் நீட்டியுள்ளனர். இருந்தபோதிலும், காஷ்மீரி முஸ்லிம்கள் பழித்துரைக்கப்படுகிறார்கள்; மேலும் சங்கிப் படையணியின், மோடியின் செல்ல ஊடகங்களின் விஷம் தோய்ந்த வெறுப்புப் பரப்புரையின் விளைவாக காஷ்மீரி மாணவர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் மீது அச்சுறுத்தல்களும் வன்முறைகளும் இந்தியா முழுவதும் அதிகரித்துள்ளது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த புல்வாமா சம்பவத்தைப் போலவே, இப்போதும், மக்களின் அதிர்ச்சியையும் கோபத்தையும் தேர்தல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் பணியில் அரசாங்கம் மும்முரமாக உள்ளது. பிரதமர் தனது சவுதி அரேபிய பயணத்தை இடையிலேயே நிறுத்தி விட்டு நாடு திரும்பினார்; மேலும் ஏப்ரல் 24 கான்பூரில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியையும் ரத்து செய்தார்; ஆனால் காஷ்மீருக்குச் செல்லவில்லை. மாறாக இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க இருக்கும் பீகாரில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதற்காகத்தான் சென்றார். பஹல்காம் தாக்குதலைப் பற்றி விவாதிக்க டெல்லியில் நடந்த அனைத்து கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்வது பற்றியும் கூட அவர் கவலைப்படவில்லை.
சிந்து நதிநீர் உடன்படிக்கையை இடைநிறுத்தம் செய்தல், பாகிஸ்தானிய குடிமக்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை நீக்கம் செய்தல், தூதரக பணியாளர் எண்ணிக்கையைக் குறைத்தல், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டாரி சோதனைச்சாவடியை நிறுத்துதல் என இந்தியா எடுத்துள்ள முடிவுகளும் அதற்கு பாகிஸ்தான் எடுத்துள்ள பதிலடி நடவடிக்கைகளும் இரு நாடுகளுக்கும் இடையேயான சட்டபூர்வமான தூதரக உறவுகளையும் தொடர்புகளையும் பாதிக்கும். இது இந்த இரு அண்டை நாடுகளுக்கிடையே பதட்டத்தை அதிகரிக்கும். மேலும் இருநாட்டு குடிமக்களின் நியாயமான செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும். ஆனால், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எவ்வித உண்மையான தடைகளையும் ஏற்படுத்த முடியாது. மோடி அரசாங்கத்தின் பல தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும், இஸ்லாமியர் மீதான வெறுப்பை ஊக்குவிக்கவும் ஒரு போர்வெறிச் சூழலை உருவாக்குவதே இதன் குறிக்கோளாக உள்ளது. காஷ்மீர் மக்களின் துயரத்தை சரிசெய்யும் முயற்சி எதுவும் இல்லை என்பது சொல்லாமலே விளங்கும். அவர்களது சொர்க்க பூமியான அந்தக் கணவாய், எண்ணற்றவர்கள் கொலை செய்யப்படுவது, காணாமல் போவது, சிறைப்படுத்தப்படுவது ஆகியவற்றால் நீண்ட காலமாகவே பாழாக்கப்பட்டுள்ளது. மேலும் 2019 முதல் அதிகரித்த இராணுவமயமாக்கத்தையும் ஒடுக்குமுறையையும் அவர்கள் எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் ஜனநாயக விருப்பங்கள் அடக்கப்படுகின்றன. மேலும் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அவர்களது உரிமைகளையும் இழந்துள்ளனர்.
காஷ்மீருக்கு எதிராக பழிவாங்கும் தாக்குதல்கள், கூட்டுத் தண்டனைகள் கோரும் ஒத்திசைவான உரத்த கூச்சல்கள், ஏற்கனவே இந்தியாவின் பல பகுதிகளில் காஷ்மீரி மாணவர்களை, வணிகர்களை மோசமான ஆபத்தில் சிக்க வைத்துள்ளது. வங்காளம் பேசும் முஸ்லிம் தொழிலாளர்கள் மீதான வன்முறையான வெறுப்புப் பரப்புரை இயக்கம் குறித்த செய்திகள், குஜராத்திலிருந்தும் மகாராஷ்டிராவிலிருந்தும் ஏற்கனவே வந்து கொண்டிருக்கின்றன. காஷ்மீருக்குள், அண்மைய உச்ச நீதிமன்ற தீர்ப்பை நேரடியாக மீறி, சந்தேகத்துக்குட்பட்ட, குற்றம் சாட்டப்பட்ட தனிநபர்களுடைய குடும்பத்தினரின் வீடுகள் தகர்த்தெறியப்படுகின்றன. மேலும், ஒட்டுமொத்தமாக மக்கள் கைது செய்யப்படுவது மீண்டும் அரங்கேற்றப்படுகிறது. மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் தனது பொறுப்பை முற்றிலும் துறந்த இந்த அரசாங்கம், இப்போது தண்டனை வழங்குதலை நிகழ்த்திக் காட்டும் நாடகத்தனம் மூலம் முஸ்லிம்கள் மீதான வெறுப்பின் மூர்க்கத்தனத்தை மேலும் ஊட்டி வளர்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையில், மோடி அரசாங்கத்திடமிருந்து பதில்களையும் பொறுப்பேற்பையும் கோரும், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர் குடும்பங்களின் குரல்கள், வேண்டுமென்றே மௌனமாக்கப்படுகின்றன. விஐபிக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாதுகாப்பு கலாச்சாரம், வரி செலுத்தும் சுற்றுலாப் பயணிகளை மோசமான ஆபத்தில் சிக்க வைத்துவிட்டது என பஹல்காமில் தனது கணவரான வங்கியாளர் சைலேஷ் கலாதியாவை இழந்த சூரத்தின் ஷீதல் கலாதியா தனது கோபத்தை வெளிப்படுத்தினார். கோவிட்-19 பெருந்தொற்று, மகாகும்பமெளா கூட்ட நெரிசல் அல்லது இப்போது பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் என எதுவாக இருந்தாலும், அரசாங்கத்தின் அக்கறையின்மையாலும் அலட்சியத்தாலும் தங்கள் உறவுகளை இழந்த ஒவ்வொரு இந்தியனின் வலியையும் இந்தக் கோபம் எதிரொலிக்கிறது. சுற்றுலாப் பயணிகள் பஹல்காமில் பாதுகாப்பு மொத்தமாக இல்லாததால் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். இந்நிலையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் சில நாட்களுக்கு முன்பு, எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் இந்திய தலைமை நீதிபதி குறித்து பொறுப்பற்ற கருத்துகளை கூறுவதற்காக அவப்பெயர் பெற்ற ஜார்கண்ட் பிஜேபி எம்.பி. நிஷிகாந்த் துபே, காஷ்மீரின் குல்மார்க்கில், தனது 25வது திருமண விழாவை தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொண்டாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், பஹல்காம் தாக்குதலுக்கு முதலில் பொறுப்பேற்றுக்கொண்டதாக தோன்றிய லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அண்மையில் அதனை மறுத்துள்ளது. இது முழு சம்பவத்தையே இன்னும் குழப்பமானதாக ஆக்குகிறது.
காஷ்மீர் பிரச்சினை ‘தீர்க்கப்படுகிறது’ என்ற பாஜகவின் வாதங்களுக்கு மாறாக, மோடி அரசாங்கத்தின் காஷ்மீர் கொள்கை இந்த நெருக்கடியை இன்னும் ஆழப்படுத்தியுள்ளது. நவம்பர் 2016-இன் பணமதிப்பிழப்பு நடவடிக்கை காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான மருந்தாக கூறப்பட்டது. புல்வாமா அந்த கட்டுக் கதையை உடனடியாக சிதறடித்தது. ஆகஸ்ட் 5, 2019-இல் அதன் மாநிலத் தகுதி உட்பட, ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பு தகுதி, பறிக்கப்பட்டது. இது மற்றொரு தேர்ச்சித் திறன்மிக்க செயல் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. பஹல்காம் இப்போது இந்த பரப்புரையை முழுமையாக சிதைத்துவிட்டது. இந்தப் பரப்புரையின் ஒரு பகுதியாக சுற்றுலாப் பயணிகள் காஷ்மீர் வர ஊக்குவிக்கப்பட்டனர். ஆனால் இப்போது பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பைசரன் பள்ளத்தாக்கில் உள்ள புல்வெளிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை என அரசாங்கம் நம்மிடம் சொல்கிறது.
சாதாரண மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் குறித்த இந்த உள்ளார்ந்த மதிப்பின்மை தான், மோடி அரசாட்சியை பல்வகை சமூகங்கள், பகுதிகள் அனைத்திற்கும் ஒரு முழுமையான பேரழிவாக மாற்றியுள்ளது. மணிப்பூரில் இருந்து காஷ்மீர் வரை, மகாராஷ்டிராவில் இருந்து சத்தீஸ்கர் வரை, சங்கிகளின் அதிகார விளையாட்டுகள் இந்தியாவை இரத்தம் சிந்தவும் எரியவும் செய்கின்றன. அதே நேரத்தில் அதானிகள், அம்பானிகள் தங்கள் கோடிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்; பிஜேபியும் அதன் கூட்டாளிகளும் கொண்டாட்டங்களில் மூழ்கியுள்ளனர். குடியரசின் 75வது ஆண்டுவிழாவில், பஹல்காம், இந்தியாவுக்கான எச்சரிக்கையின் அண்மைய அடையாளமாகும்.
பஹல்காம் துயரத்தைப் சாதகமாக்கி வெறுப்பையும் பிளவையும் கூடுதலாக விதைக்க முயற்சிக்கும் பாசிச சக்திகளின் அருவருப்பான முயற்சிகளுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட வேண்டும். இந்த கொடூரமான தாக்குதல் எவ்வாறு நடந்திருக்கும் என்பது குறித்து ஒவ்வொரு நாளும் புதிய கேள்விகள் எழுந்தவண்ணமுள்ள இந்த நேரத்தில், அதிகாரத்தில் இருப்பவர்களைப் பொறுப்பேற்கச் செய்ய நாம் வலியுறுத்த வேண்டும். மேலும் உண்மை இன்னொரு பலியாக ஆவதற்கு அனுமதிக்கக் கூடாது. அணு ஆயுதம் கொண்ட இரு அண்டை நாடுகளுக்கிடையேயான போர் அச்சுறுத்தல் தணிக்கப்பட வேண்டும். பதட்டத்தைக் குறைத்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும் தெற்காசியாவில் மண்டல ஒற்றுமையை, ஒத்துழைப்பை வலுப்படுத்தவும்
இந்தியா-பாகிஸ்தான் எல்லையின் இருபுறமும் உள்ள அமைதியின் சக்திகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
எம் எல்
Editorial Published in ML Update | A CPIML Weekly News Magazine | Vol. 28 | No. 18)