அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் மாநில முண்ணனிகள் கூட்டம் மயிலாடுதுறையில் 06.04.2025 அன்று நடைபெற்றது. 13 மாவட்டங்களிலிருந்து ஏறத்தாழ 50 பேர் கலந்து கொண்டனர். ரேவதி, பிலோமினா, மாதவி, கார்மல், சரோஜா, மனோன்மணி, தேன்மொழி, சந்தனமேரி, வள்ளிமயில் உள்ளிட்ட தோழர்கள் கூட்டத்தை வழிநடத்தினர். பாசிச மோடி ஆட்சியை எதிர்த்துப்போராட வேண்டியது பெண்கள் கழகத்தின் முதன்மையான கடமை. அந்தக் கடமையை வெளிப்படுத்தும் வகையில் மார்ச் 8 தஞ்சைப் பேரணி இருந்ததென தனது துவக்க உரையில் மாநில அமைப்பாளர் தோழர் ரேவதி சுட்டிக்காட்டினார். நமது பெண்கள் அமைப்பைத் தவிர, வேறு எந்த இடதுசாரி பெண்கள் அமைப்பு உட்பட வேறு எந்த பெண்கள் அமைப்பும் இதுபோன்றதொரு பேரணியை நடத்தவில்லை என்று பேசிய தோழர் ரேவதி, இந்த உற்சாகத்தோடு சுணக்கமின்றி பணிபுரிய வேண்டுமென்றார். மாவட்டங்களில் உள்ள வேலைகள், கோரிக்கைகள் பற்றி மாவட்ட பொறுப்பாளர்கள் பேசினர்.
இந்த கூட்டத்தில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் அகில இந்தியத் தலைவர் தோழர் ரதிராவ் கலந்து கொண்டு “புரட்சி இல்லாமல் பெண் விடுதலை இல்லை! பெண் விடுதலை இல்லாமல் புரட்சி இல்லை!” எனும் குறுநூலை வெளியிட கட்சி மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் ஈஸ்வரி அதனைப் பெற்றுக்கொண்டார். தோழர் ரதி ராவ் பேசும்போது, மார்ச் 8, அகில உலக பெண்கள் நாள் உருவானதில் தோழர் கிளாரா ஜெட்கின் பங்களிப்பை சுட்டிக்காட்டினார். இந்தியாவில் பெண்கள் இயக்க வரலாற்றையும் போராட்டங்களால் கொண்டுவரப்பட்ட பலவிதமான சட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார். பெண்களது நீதி, சமத்துவ போராட்டங்களுக்கு பகத்சிங், பெரியார், அம்பேத்கர், வினோத் மிஸ்ரா உள்ளிட்டோரது பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்தார். பெண்கள் கழகம் முன்னெடுக்க வேண்டிய போராட்டக் கோரிக்கைகளையும் சுட்டிக் காட்டினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் தோழர் என். குணசேகரன், மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி, மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மே-ஜூலை வரை, மாவட்ட அளவில் குறுநூல் வாசிப்பு, பகுதி அளவிலான பரப்புரை, கிளர்ச்சி, உறுப்பினர் சேர்ப்பு, மாவட்ட மாநாடுகள், பயிலரங்கு உள்ளிட்ட வேலைத்திட்டங்களும் முடிவு செய்யப்பட்டன.