ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் சந்திரசேகரும் இளைஞர் தலைவர் ஷியாம் நாராயண் யாதவும் 31 மார்ச் 1997 அன்று பீகாரின் சிவானில் ஒரு தெருமுனைக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டனர். பட்டப்பகலில் இந்த கொலைகளைச் செய்தவர்கள் ஆர்ஜேடி எம்பியும் மாஃபியா தலைவருமான முகமது ஷஹாபுதினின் கூலிப் படையினர் என்பது அனைவருக்கும் தெரியும்
ஜேஎன்யு-வில் படிப்பை முடித்த பிறகு, கட்சியின் முழு நேர ஊழியராக சிவானுக்குத் திரும்புவது என்பது சந்திரசேகருக்கு கடினமான தேர்வாக இருந்தது. கட்சி அவருக்கு தில்லி அல்லது பட்னாவில் வேறு பொறுப்புகளை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்புகளை வழங்கியிருந்தது. ஆனால் அவர் சிவானைத் தேர்ந்தெடுத்தார். ஷஹாபுதின் சிவானில் இகக(மாலெ) தோழர்களைத் தொடர்ந்து படுகொலை செய்யும் ஒரு வெறித்தனமான நிகழ்வை அரங்கேற்றி வருவதை அவர் அறிந்திருந்தார். நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு ஷஹாபுதினின் ஆதரவும், இகக(மாலெ)-வின் செயல்வீரர்களை, ஆதரவாளர்களை அவர் அச்சுறுத்துவதற்கு மத்தியிலும், இகக(மாலெ) தலைமையில் நடந்து கொண்டிருந்த கிராமப்புற ஏழை விவசாயிகளின் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு இயக்கம் சிவானில் பெரும் முன்னேற்றத்தை எட்டிக்கொண்டிருந்தது என்பது சந்திரசேகருக்கு நன்றாக தெரிந்திருந்தது. அந்தத் தோழர்களிடமிருந்து கற்றுக்கொள்ள அவர் ஆர்வமாக இருந்தார். மேலும் அந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக தானும் இருக்க வேண்டும் என்று அவர் உணர்ந்தார்.
சந்திரசேகர் தனது தாயாருடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். இகக(மாலெ) வின் முழுநேர ஊழியராக அவர் செயல்பட முடிவு செய்திருப்பதை அவரது தாயார் ஏற்றுக்கொண்டார். ஆனால், அவர் சிவானுக்குத் திரும்பினால் தன்னை அடிக்கடி பார்க்க முடியும் என்ற போதிலும் கூட, சிவானைத் தவிர வேறு எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள் என்று அவர் சந்திரசேகரிடம் வேண்டிக்கொண்டார். ஏனென்றால், சிவானில் சந்திரசேகரின் உயிருக்கு ஆபத்து என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால், சந்திரசேகர் அனைத்தையும் தெரிந்து கொண்டே சிவானுக்குச் சென்றார். அவர் அங்கு காத்திருக்கும் ஆபத்துகளை அறிந்தும், தன் விருப்பத்துடனேயே அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தார்.
லிபரேசனில் 2017 இல் எழுதப்பட்ட நண்பன், தோழன் சந்துவின் நினைவாக என்ற கட்டுரையில் இருந்து சில பகுதிகள்