தி வயர் பத்திரிகையாளரின் கேள்வி:
பாஜக-வை பாசிச கட்சி என்று இகக(மா) இப்போதும் கருதவில்லை; ஆனால் இகக(மாலெ) விடுதலை அதை பாசிச கட்சியாக வகைப்படுத்துகிறதே?
திபங்கர்:
உண்மையில், இந்த விவாதத்தை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஏனென்றால், ஒவ்வொரு நாளும், வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் பாசிசத் தாக்குதலை நேரடியாக அனுபவித்துக் கொண்டிருக்கிற இந்த 2025-ல், இந்த விவாதம் எதற்கு?
ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம், தலித்துகள், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் முதல் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் வரை ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும், விவசாயிகள், படித்தவர்கள், அனைவருக்கும் தெரியும் – பாஜக அரசமைப்பு சட்டத்துக்கு, வெறும் வாய் சொல்லளவில் மட்டுமே மரியாதை தருகிறது. மேலும் தேர்தல் முறையை சிதைத்தும் மோசடியாகக் கையாண்டும் அதனைக் குட்டிச்சுவராக்குகிறது. இதில் என்ன விவாதம் இருக்க முடியும்?
நவ தாராளவாதம் ஒரு உலகளாவிய சூழல் தான். ஆனால் இந்தியாவில், ஆர்எஸ்எஸ்-அய் மறந்துவிடக் கூடாது. இது பாசிச கருத்தியலுடன் கட்டப்பட்ட ஒரு பாசிச அமைப்பு. இது 100 ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எனவே, வெறும் நவ தாராளவாதம், நவ-பாசிசம் பற்றி பேசுவது, இந்திய வகைப்பட்ட பாசிசத்தின் ஒட்டு மொத்தத்தையும் முழுமையாக விளக்காது.
20-ஆம் நூற்றாண்டில் இத்தாலி, ஜெர்மனியில் இருந்த பாசிசம் ஒரு உலகளாவிய நிகழ்வாக இருந்தாலும் கூட, ஒவ்வொரு நாட்டிலும் அதற்கு தனித்துவமான கூறுகள் இருந்தன. வரலாறு, கலாச்சாரம், குறிப்பான சமூக நிலைமைகள் ஆகியவை அதை வடிவமைத்தன.
நாம் ஆர்எஸ்எஸ்-இன் பிராமணியத்தைப் பற்றி பேசும்போது, அது ஒரு சாதாரண பிராமணியம் அல்ல. அது அதானி-ஆதரவு பெறும் பிராமணியம்.
இதைத்தான் “பிராமணியமும் முதலாளித்துவமும் நமது இயக்கத்தின் இரு இலக்குகளாக இருக்க வேண்டும்” என அம்பேத்கர் கூறினார். இந்த விஷயத்தில் இடதுசாரிகளுக்குள் விவாதம் இருப்பது எனக்கு மிகவும் ஏமாற்றமளிக்கிறது. மக்களை குழப்பியடித்து, பிளவுபடுத்துவது பாசிசத்தின் ஒரு முக்கிய அம்சமாக ஏன் விளங்குகிறது என்பதை அனேகமாக இது விளக்கலாம்.
கம்யூனிஸ்டுகள் முதலில் இதை உணர்ந்து, பாசிசத்தால் பாதிக்கப்படும் அனைத்து பிரிவு மக்களையும் ஒன்றுபடுத்த வேண்டும். எல்லோரும் ஒரே மட்டத்தில் பாசிசத்தை எதிர்ப்பார்கள் என்றோ, ஒரே மாதிரியாக அதனை அடையாளம் காண்பார்கள் என்றோ எதிர்பார்க்க முடியாது. நமக்கு முன்புள்ள தற்போதைய பிரச்சனை இதுவல்ல.
உண்மையிலேயே மக்கள் தங்கள் வாழ்க்கையில் பாசிசத்தை எதிர்கொள்கிறார்கள். நாம் அவர்களை ஒன்றிணைத்து, ஒன்றாக போராட வேண்டும்.
புதிய கேரளாவிற்கான புதிய பாதை என்று சொல்லப்படும் மற்றொரு விஷயமும் என்னை மிகுந்த கவலைக்குள்ளாக்குகிறது. அதில் என்ன ‘புதிய’ இருக்கிறது என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. புதிய பாதை ஒன்றை கேரள அரசாங்கம் அமலாக்க முயற்சி செய்கிறது என்றால், அது நவ தாராளவாத பாதை என்பது மட்டும் உறுதி.
அவர்கள் புதிய கேரளா பற்றி பேசுகிறார்களா? அல்லது நவ தாராளவாத கேரளா பற்றி பேசுகிறார்களா? நவ தாராளவாத கொள்கைகளுடன் கூடிக்குலாவியதால்தான் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் பெரும் இழப்புகளை சந்திக்க நேர்ந்தது. சிங்கூர், நந்திகிராம் போன்ற இடங்களில் நில கையகப்படுத்தல், பெரிய தனியார் முதலீடுகள் ஆகிய தவறான திட்டங்களே வங்கத்தில் 34 ஆண்டு கால இடதுசாரி அரசாங்கத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தன. கேரளாவிலும் இதே போன்று எதுவும் நடக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். நடக்காது என நம்புகிறேன்.
நல்ல அறிவு வெல்ல வேண்டும்; தனியார்மயத்திற்கு எதிராக, மக்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாக்க இடதுசாரிகள் தொடர்ந்து தளர்வேதும் இன்றி போராடுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
==============================
இது தி வயர் இணைய இதழில் ஆங்கிலத்தில் வெளியான தோழர் திபங்கர் நேர்காணலின் ஒரு பகுதி. முழு நேர்காணலையும் படிக்க, Inciting Communal Frenzy Through 2025 is a Calculated Move by BJP: Dipankar Bhattacharya – The Wire
==============================